சனி, 13 ஆகஸ்ட், 2022

சிவாஜி குடும்ப சொத்து வழக்கு...சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...அடுத்து என்ன நடக்கும்?

Sivaji Ganeshan family property case...Chennai HC adjourned the judgement without specifying a date

tamil.filmibeat.com  : சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், எனவே தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை எங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டிருந்தனர்.


மேலும் சொத்துக்கள் தொடர்பான பரிவர்த்தனைகள் வழக்கு தொடர்ந்த பிறகு தங்களுக்கு தெரிய வந்தால் அது தொடர்பாக வழக்கில் கோரிக்கையில் மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இரண்டு கூடுதல் மனுகள் சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் மனுகள் மீதான
விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணைக்கு வந்தது.

நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி சார்பில் வழக்கறிஞர் உமா சங்கர் மற்றும் ஸ்ரீ தேவி ஆஜராகினர். அப்போது அனைத்து சொத்துக்களிலும் சம பங்கு உள்ளதாகவும் சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்‍ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும் பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பான சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.

நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர், சதீஸ் பாரசுரன் ஆஜராகி, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது.

கூடுதல் மனுகள் மீது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். பிரதான வழக்கின் விசாரணை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சாந்தி திரையரங்குகளின் சொத்துக்களை விற்பனை செய்ய தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளதால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரும், அவடுத்து என்ன நடக்கும் என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

English summary

Chenani High court adjourned the judgement without specified the date in Sivaji Ganeshan famil property case. Sivaji Ganesh's 2 daughters seeked stay order for selling Shanthi theatre properties.

Story first published: Friday, August 12, 2022, 18:22 [IST]

கருத்துகள் இல்லை: