திங்கள், 8 ஆகஸ்ட், 2022

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பும் சவுக்கு சங்கரும்

ரூ. 3 கோடிப்பு.. சவுக்கு சங்கர் இன்வெஸ்டிகேட்.. பேரம் பேசிய சிறுமியின்  குடும்பம்?.. கறாராக மறுத்த நிர்வாகம்..! அதிர்ச்சி உண்மை..! - TamilSpark

savukkuonline.con  :  கசடற – 8 – என் பிரியமான எதிரிகளே !
எத்தனையோ விமர்சனங்களைக் கண்டிருக்கிறேன். மிரட்டல்களையும் தான். எப்போதும் அஞ்சியதில்லை. நான் சாலை விபத்தில் மரணமடைந்ததாகக் கூட செய்திகளை சில மாதங்களுக்கு முன்பு பரப்பினார்கள். அப்போதும் நான் என் வேலைகளைத் தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறேன்.
அனைத்துக் கட்சியினரையும், நேர்மையற்ற அதிகாரிகளையும், ஏன் நீதிபதிகளையும் பற்றியும் கூட எழுதியிருக்கிறேன்.
அதனால் அனுதினமும் பிரச்சனைகள் என்னை சூழ்ந்தபடி தான இருக்கின்றன.
ஆனால் , இந்த கள்ளகுறிச்சி மாணவி மரணத்தில் நான் தெளிந்து அறிந்து கொண்டதை சொன்னபிறகு என்னைச் சுற்றி ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்துவருகிறேன்.
இந்தக் கட்டுரையை மிகுந்த யோசனைக்குப் பிறகே எழுதுகிறேன்.
எனது நலன் விரும்பிகளுக்காக நான் எழுதும் கட்டுரை இது.  என்னை தாக்குகிறவர்களுக்கான விளக்கம் அல்ல. அவர்கள் நான் மதிக்கும் அளவுக்கான எதிரிகள் அல்ல.   

எதையும் துணிந்து எழுதும் எனது  போக்கு ஜாபர் சேட்டினை  எதிர்ப்பதில் தான் தொடங்கியது.  ஆனால் நான் ஜாபர் சேட்டோடு எனது இலக்கை குறுக்கிக்கொள்ளவில்லை.   ஒரு தனிநபரை வீழ்த்துவதை லட்சியமாக வைத்துப் பயணிப்பது அற்பத்தனமானதுதானே.   ஜாபர் சேட்டை இலக்காக வைத்துத்தான் என் பயணத்தை 18 செப்டம்பர் 2008ல் தொடங்கினேன்என்றாலும்  (நான் புழல் சிறையில் இருந்து 2 மாதம் கழித்து வெளியே வந்த நாள்)  வெகு விரைவாகவே, உலகம் ஜாபர் சேட்டை விட மிக பெரியது என்பதை உணர்ந்து கொண்டேன்.   

சிறையிலிருந்து வெளியே வந்தபோது உலகமே மிரட்சியாக இருந்தது.  அடுத்து என்ன என்ற கேள்வி என்னை அச்சுறுத்தியது.   அந்த கேள்விக்கு விடை தேடுவதை விட, பயணத்தை தொடர்வதே சிறந்தது என்று முடிவெடுத்தேன்.   

எழுத்தார்வம் எனக்கு எப்போதுமே இருந்துதான் வந்திருக்கிறது.   அரசுப் பணி என்பது செக்குமாடு போன்றது.   கண்ணை மூடிக்கொண்டு செய்ததையே செய்வதுதான் அந்த பணி.  புதிய முயற்சிகள், புதிய கற்பனைகள், புதிய விவாதங்கள் or simply put, out of the box thinkingக்கு அங்கே இடமில்லை.   அந்த சமயத்தில்தான் எனது பணி நீக்கம் ஒரு வரமாக அமைந்தது.  

ப்ளாக்கில் எழுதலாம் என்று தெரிந்துகொண்டபின், இன்று தமிழகத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்களை விஞ்சும்படியிலான செய்திகளை வெளியிட வேண்டும் என்பது எனக்கு ஒரு வேட்கையாகவே இருந்தது.  அதில் நான் வெற்றி பெற்றேனா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும்.   ஆனால், நான் செய்த பணிகள் எனக்கு பெரும் நிறைவை அளித்தன.   

காலம் செல்ல செல்ல நான் கவனம் பெறத் தொடங்கினேன்.   பலரால் பேசப்பட்டேன்.  எழுதியதற்காக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டேன்.   அப்படி கைது செய்யப்பட்டபோது, ‘ஏன் எழுதினோம்’ என்று நான் வருந்தவில்லை. மாறாக, ‘எழுதியதற்காக ஒரு அரசு என்னை கைது செய்கிறது என்றால், ஒரு அரசே நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கா உருவாகியிருக்கிறோம்.   ஏன் மற்றவர்கள் இதை செய்யவில்லை. நாம் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்றுதான் தோன்றியது.  

தொடர்ந்து எழுதினேன்.  ஊடகத்துறையில் முறையாக பயிற்சியோ, பட்டப்படிப்போ இல்லாதது எனக்கு தடையாக இல்லை.   மாறாக அது எனக்கு ஒரு வகையில் பலமாக அமைந்தது.  ஏனெனில் என்னைக் கட்டுப்படுத்தும் கோடுகள் இல்லை.   பெரும் ஊடக நிறுவனங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள் எனக்கு இல்லை.   இதுதான் ஊடகவியலா, இது பத்திரிக்கை நெறியா, மரபு சார்ந்த ஊடக வடிவமா என்பதையெல்லாம் குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை.  

இந்த எழுத்துக்கள் பலரால் கவனம் பெறப்பட்டு பல நட்புகளை எனக்கு ஏற்படுத்தியது.   சமூகத்தின் மிகப் பெரிய ஆளுமைகளாக கருதப்படுபவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், என பலரின் அறிமுகம் கிடைத்தது.  அவர்களில் பலர் நெருக்கமான நண்பர்களாக மாறி இன்று வரை தொடர்கிறார்கள்.  இவர்கள் யாரிடமும் ஒருநாளும் எந்த உதவியும் வேண்டி நான் நின்றதில்லை. அதற்கான தேவைகளும் எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு ஏதேனும் பொருளாதாரத் தேவை ஏற்பட்டால், என் நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்.

அதுவும் போக, எனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது நான் பணியாற்றிய லஞ்ச ஒழிப்புத் துறை. அங்கிருந்து எனக்கு பிழைப்பூதியம். கிடைக்கிறது   எளிமையாக சொல்வதானால் முக்கால் சம்பளம்.  இந்த தொகை எனது தேவைக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.   

எனக்கு பெரிய செலவுகள் இல்லை.   நானும் என் தாயாரும் தவிர மட்டுமே உள்ளோம். எங்கள் செலவுகள் மிகக் குறைவு. என் அம்மா எங்களுக்கு சிக்கனம் சொல்லித் தந்தே தான் வளர்த்திருக்கிறார்.

தந்தை அரசு ஊழியராக இருந்தாலும், தஞ்சையில் சொந்த வீடு கட்டுகிறபோது கடனுக்கு ஆட்பட்டார். அதே நேரம்  அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது.   கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கிறது எனது குடும்பம்.  வளரும் வயதில், விரும்பியதை உண்ண முடியாமல் நானும் எனது தங்கையும் வளர்ந்திருக்கிறோம்.   இதர குழந்தைகளுக்கு கிடைத்த மகிழ்ச்சிகள் எங்களுக்கு கிடைத்தது இல்லை.   

தந்தை இறந்ததால் கிடைத்த வேலை எனக்கு 16 வயதிலேயே கை நிறைய பணத்தை அள்ளித் தந்தபோது, எனக்கு பணத்தின் மீதான மரியாதை அற்றுப் போயிருந்தது.   அன்றும் சரி, இன்றும் சரி, பணம் தேவையான பொருட்களை வாங்கும் ஒரு கருவி என்பதைத் தாண்டி அதை மதித்ததே இல்லை. என் சகோதரியும் நல்ல நிலையிலேயே இருக்கிறார்.

அன்றாடத் தேவைக்கான பணமும், அவசியமான பொருட்களும் என்னிடம் எப்போதுமே இருந்திருக்கின்றன. இவற்றை மீறி பணம் இருக்குமானால் அதைக் கொண்டு என்ன செய்வது என்று என்பது எனக்கு உள்ளபடியே புரிவதில்லை.

நான் நகை அணிவது இல்லை.   சொத்து சேர்ப்பதில் விருப்பம் இல்லை. ஆடம்பரச் செலவுகள் செய்வதற்கு நேரமும் இல்லை, மனமும் இல்லை. ஆகையால் செலவும் இல்லை.   

என்னோடு பழகிய அனைத்து நண்பர்களும் இதை அறிவர்.  மற்றவர்கள் அறியாவிட்டால் அது என் பிழையல்ல.  அனைவருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.   அதனால், நான் இவரிடம் பணம் வாங்கி விட்டு எழுதுகிறேன்.  அவரிடம் பணம் வாங்கி விட்டு எழுதுகிறேன் என்பவர்களைப் பார்த்து நான் நகைக்கிறேன்.  ஒரு புன்னகையோடு கடந்து போகிறேன்.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம்

கள்ளக்குறிச்சியில் ஒரு மாணவி இறந்து போனது குறித்து, அதீத கற்பனையோடு ஆவேசம் கொண்ட ஒரு சமூகம் உண்மையை எதிர்கொள்ள மறுத்தது.   உண்மையை புதைக்க முயன்றது.  தன் மனதில் இருக்கும் பாலியல் வக்கிரங்களை அந்தக் குழந்தையின் மரணத்தில் பொருத்திப் பார்த்துக் கொண்டது.  சமூகத்தின் ஆபாசம் எனக்கு அதிர்ச்சி அளித்தது.   

உடனடி பரபரப்புக்காக, யூட்யூப் வியூஸ்க்காக, புகழுக்காக சகட்டுமேனிக்கு ஒரு மாணவியின் மரணத்தைத் திரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. முதலில் அந்த மாணவியின் மரணம் எனக்கு ஒரு செய்தியாக இருந்தது. ஆனால் போகப்போக இது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்த போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். யார் சார்பாகவும் நான் களம் இறங்கவில்லை.உண்மையை எடுத்துச் சொன்னேன். ஆனால் மாணவியின் மரணத்தை இஷ்டத்துக்கு பேசிக் கொண்டு இருந்தவர்களுக்கு அது பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரிந்து கொண்டேன். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. களத்துக்குப் போகாமல், கேள்விபட்டதையும், கற்பனைக்கு வந்ததையும் பேசியவர்கள் எழுதியவர்களுக்கு உண்மையை ஒருவன் சொன்னால் கோபம் வரத் தானே செய்யும்.

அது, யாரு இவன் சவுக்கு சங்கர்.     நமக்கெல்லாம் தெரியாதது அப்படி என்ன இவனுக்கு தெரியும் ?  ரோட்டுல போறவன் வர்றவனெல்லாம் இவன் சொல்றதை நம்புறான்னா, 30 வருசமா பீல்டுல இருக்குற நம்பளுக்கு என்ன மரியாதை ?  நமக்குன்னு ஒரு பாலோவர்ஸ் கூட்டம் இருக்கு.  அவங்க கூட இவன் சொல்றதை கேக்குறாங்கன்னா, நாம யூட்யூப் நடத்துறதுக்கு அர்த்தம் என்ன ?   இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு தகவல்கள் கிடைக்குது.  இவனை சமயம் கிடைக்கும்போது மட்டம் தட்டணும், என ஒவ்வொருவர் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.  

என்னோடு நெருக்கமாக பழகிய பலரே இப்படியொரு எண்ணத்தோடு பழகி வந்தது புரிந்தபோது, பின்னர் அவர்கள் மீது பரிதாபமே ஏற்பட்டது.  

 நாம் இந்த பிரபஞ்சத்தின் துக்களியூண்டு துகள் என்பதை புரிந்து கொண்டாலே வாழ்வில் பலவற்றுக்கு விடை கிடைக்கும்.  இதைத்தான் வேதங்களும், உபன்னியாசங்களும், உலகின் தத்துவ நூல்களும் உணர்த்துகின்றன.  

எல்லோருமே என் மேல வைக்கும் குற்றச்சாட்டு, நான் பணம் வாங்கிவிட்டு எழுதுகிறேன் என்பது.  தனியார் மருத்துவக் கல்லூரிகளுள் நடக்கும் ஊழல்குறித்து எழுதிய போது, ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஊழல் பற்றி எழுதியபோது, யோகா தியானம் என்ற பெயரில் மக்களிடம் சுரண்டும் கார்பரேட் பற்றி எழுதியபோது, உயரதிகாரிகள் பற்றியும் அமைச்சர்கள் உட்பட்ட அரசியல்வாதிகள் பற்றி எழுதியபோது அதை நிறுத்தச் சொல்லி கோடிகளில் என்னிடம் ‘டீல்’ பேசியிருக்கிறார்கள்., இதனை சவுக்கு கட்டுரைகளில் அவ்வப்போது எழுதியும் வந்திருக்கிறேன். அவர்கள் பேசிய தொகைக்கு சென்னையில் பல இடங்களில் நிலமும் வீடும் வாங்கியிருக்கலாம்..சொகுசு காரில் பவனி வரலாம்..ஆனால் அது எனக்குத் தேவையில்லை.இவற்றை எல்லாம் வைத்துக் கொண்டு என்னால் நிம்மதியாக தூங்கவோ, உணவு உண்ணவோ முடியாது.

உங்களை ஒருவர் போன் செய்து ‘கொன்னுருவேன்’ என்று மிரட்டினாலோ, குடும்பத்தில் உள்ளாவர்கள் பற்றி அநாகரீகமாகப் பேசினாலோ அந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? எப்போது வேணுமானாலும் எந்த பொய் வழக்கில் வேணுமானாலும் கைது செய்ய போலிஸ் வருவார்கள் என்று தெரிந்தும் நிம்மதியாக இருப்பீர்களா?  வீட்டை விட்டு கிளம்பும் மகன் பத்திரமாய் திரும்ப வேண்டுமே என்று உங்கள் தாய் எப்போதும் பதறிக் கொண்டே இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இதனை அனுதினமும் நான் சந்திக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் என் வாழ்க்கை இப்படித் தானிருக்கிறது. ஆனாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், படுத்தால் அடுத்த நொடி தூக்கத்தைப் பெறுகிறேன். நன்றாக சாப்பிடுகிறேன். காரணம் ஒன்று தான். எந்த நிலையிலும் நான் அதிகாரத்தின் முன்போ, பணத்துக்காகவோ, மிரட்டலுக்கோ சோரம் போவதில்லை.

இன்று நான் சமூகத்தால் ஓரளவு அறியப்பட்டவன் என்று நம்புகிறேன்.  திரைப்பட நட்சத்திரங்களை சந்திப்பது போல, என்னை நேரில் பார்ப்பவர்கள் என்னோடு செல்பி எடுத்துக்கொள்ள விழைகின்றனர்.  இது நான் செல்லும் இடமெங்கிலும் நடக்கிறது.  தமிழகமெங்கும்.   இளைஞர்கள், பதின் பருவ இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என பலரும் என்னை அன்போடு நேசிக்கின்றனர்.   

இது நான் ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் அல்ல.  அவர்களின் மனசாட்சியாய் நான் ஒலிக்கிறேன் என்பதால்.    

இம்மக்கள் என்னை நேசிப்பது நான் சொல்லும் உண்மையால் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.    இம்மக்களே என்னை அவர்களுக்கு பிடிக்காத உண்மையை சொல்லுகையில் என்னை வெறுக்கலாம்.  என்னை சந்தேகிக்கலாம்.   அதுதான் என் எதிரிகளுக்கான தருணம்.  தற்போது அமைந்திருப்பது போல ஒரு தருணம்.  

இதுதான் சமயம் என்று அனைத்து எதிரிகளும் எனக்கு எதிராக அத்தனை அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறார்கள்.

தமிழக மகளிர் ஆணையம், காவல் துறை, நீதித் துறை, வெகுஜன ஊடகங்கள்.   யுட்யூப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் என அத்தனை அஸ்திரங்களும் ஒரே நேரத்தில் ஏவப்படுகின்றன.  இது அல்லாமல், எனது தொலைபேசி எண் பரப்ப்பப்ட்டு அனாமதேய அழைப்புகள்.   

இவர்களில் நான் குறிப்பிட நினைபப்து சமீபத்தில் சத்தியம் டிவி முக்தார் எடுத்த நேர்காணலை.  ஒரு நேர்காணல் என்பது மக்களுக்கு பேட்டி கொடுக்க வந்தவர் என்ன சொல்கிறார் என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும். ‘நான் எப்படி மடக்குகிறேன் பாரு’ என்று மார்தட்டுவதாக இருக்கக் கூடாது. ஒரு நேர்காணலைக் கூட நேர்மையாக நடத்தும் ஆண்மையற்று, 2 மணி நேர வீடியோவை 20 நிமிடமாக அவர்களின் வசதிக்குத் தகுந்தவாறு எடிட் செய்து என்னை சிறுமைப்படுத்துவதாக நினைத்து, தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது மட்டும் வெளியில் தெரிந்தால் போதுமானது, ‘நாங்க மடக்கிட்டோம்” என்று சொல்லிக் கொள்ளலாமா? சிறுபிள்ளைத்தனமாக இல்லையா இது? இதற்கு இரண்டு மணி நேரம் எனது நேரத்தை ஏன் அவர்கள் வீண் செய்ய வேண்டும்? இதற்கு எதிரில் ஒரு பொம்மையை செய்து உட்கார வைத்துவிட்டு முக்தாரே கேள்வியும் கேட்டு, பதிலையும் அவர் விரும்பும் விதத்தில் அவரே சொல்லிக் கொண்டிருக்கலாம். முக்தார் வருங்காலத்தில் இப்படித் தான்  செய்வார் என எனக்கு தோன்றுகிறது.

என்னை நேசிக்கும் எனது நண்பர்கள், ஏன் ஒரே நேரத்தில் இத்தனை எதிரிகள், கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா என வாஞ்சையோடு கேட்கிறார்கள்.   ஏன் இவ்வளவு எதிரிகள் ?

உண்மையை பேசுவதால்.   உண்மையை மட்டுமே பேசுவதால்.  

எதிரிகளுக்கு அஞ்சினால், என்ன செய்ய வேண்டும் ?

உண்மையை பேசக் கூடாது அல்லது, உண்மையை குறைத்துப் பேச வேண்டும்.  

அதற்கெதற்கு பேச வேண்டும் ?  பேசாமலேயே இருந்து விடலாமே !!!

நான் ஒன்றும் வேடிக்கை மனிதனல்ல. வீழ்ந்து விட மாட்டேன்.

கருத்துகள் இல்லை: