சனி, 13 ஆகஸ்ட், 2022

திரு .ஆனந்தசங்கரி : இறுதி யுத்தத்தில் உயிர் சேதங்கள் ஏற்படப் போகின்றது என தெரிந்தும் பேச்சு வார்த்தைக்கு வராமல் தட்டி கழித்தார்கள் தமிழ் தேசிய கூட்டணியினர்

கூட்டமைப்பை விரும்பாதவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையலாம் –  ஆனந்தசங்கரி அழைப்பு - ஐபிசி தமிழ்

தேசம்நெட் -   அருண்மொழி  :  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
நேற்று ( வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு குறைந்து கொண்டே செல்கின்றது. இதனை நான் கூறவில்லை அண்மை காலங்களில் இடம் பெற்ற தேர்தல் முடிவுகள் இதனை நன்கு உணர்த்துகின்றன.


தமிழ் மக்களுக்காக உண்மையை உரத்து கூறி பண பெட்டிகளுக்கு விலை போகாத  பழம்பெரும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதை யாரும் மறக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தாமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு விடையங்களை தாமே நிறைவேற்றப்போகிறோம் எனக் கூறிவரும் தலைவர் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இதுவரை தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மூன்று இலட்சம் பேர் வன்னி யுத்த பூமியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறியவன் நானே. 

இறுதி யுத்தத்தில் உயிர் சேதங்கள் ஏற்படப் போகின்றது என தெரிந்தும் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு வார்த்தைக்கு வருமாறு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்தபோது எவரும் முன்வரவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பசில் ராஜபக்சவை சந்திக்க சென்ற போது ஆனந்த சங்கரி சொல்லித்தான் எமக்கு மூன்று இலட்சம் பேர் அங்கு அகப்பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்ததாக கூறினார்.

பசில் ராஜபக்ச இப்போதும் இலங்கையில் தான் இருக்கிறார் அவர் அவ்வாறு சொல்லவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பசில் ராஜபக்சவை சந்தித்தவர்கள் கூறுவார்கள் ஆயின் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைப் போன்று குடுவிக்கவில்லை, பணப்பெட்டி வாங்கவில்லை, கொலை செய்யவில்லை.

எனக்கு ஒரு பணப்பெட்டி கிடைத்தது அதுவும் நான் செய்த பணிக்காக ஐ நாவின்  யூனிஸ்கோ  அதனை வழங்கியது அதுவே எனக்கு கிடைத்த பணப்படியாகும்.

ஆகவே பணத்துக்காக பதவிக்காக தமிழ் மக்களை என்றும் நான் விற்றதில்லை அவ்வாறு ஆசை இருந்தவனாக இருந்திருந்தால் இரண்டு தடவைகள் தேசியப் பட்டியல் மூலம் மாவை சேனாதிராயாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி இருக்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: