திங்கள், 8 ஆகஸ்ட், 2022

உதயநிதிக்கு அரசியலை விடத் தொழில்தான் முக்கியம்: அண்ணாமலை

மின்னம்பலம் : திமுக அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது லால்சிங் சத்தா படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆமீர்கான் – கரீனா கபூர் நடித்துள்ள இந்தி படமான லால் சிங் சத்தா வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் திமுக எம்.எல்.ஏ உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
திமுகவைப் பொறுத்தவரைக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறது. இந்தநிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவரும், குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இந்தி படத்தை வெளியிடுவது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு, “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக்கை அணிந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதையெல்லாம் குறிப்பிட்டு லால் சிங் சத்தா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது. ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளக்கூடாது என எப்போதும் சொன்னது கிடையாது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால், நீங்கள் கற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. இது ரெட் ஜெயண்ட்டின் முதல் இந்தி படம். தெலுங்கு படத்தை வெளியிட்டிருக்கிறோம். மொழியைத் தாண்டி, எனக்கு ஆமீர்கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

தொழில்தான் முக்கியம்
இந்த்சூழலில் இன்று (ஆகஸ்ட் 8) ட்விட்டர் பதிவு மூலம் விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “உதயநிதியின் தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி இந்தியை எந்த வடிவிலும் உள்ளே விடமாட்டோம் என்று கூறினார்.

ஆனால் அவரது பேரனும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி லால் சிங் சத்தா என்ற இந்தி படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளார். அரசியலை விடத் தொழிலே முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

கருத்துகள் இல்லை: