சனி, 18 ஜூன், 2022

ஒற்றைத் தலைமை என்றால், இரட்டை இலை முடக்கம்: பன்னீர் தரப்பின் பகீர் கடிதம்!

ஒற்றைத் தலைமை என்றால்,  இரட்டை இலை முடக்கம்: பன்னீர் தரப்பின் பகீர் கடிதம்!
மின்னம்பலம் : அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், " இரட்டைத் தலைமை நன்றாக போய்க் கொண்டிருக்கும்போது ஒற்றைத் தலைமை எதற்கு?
அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அதனால் கட்சிக்கு நல்லதல்ல” என்று பகிரங்கமாக எச்சரித்தார். ஆனால் ஒற்றைத் தலைமை என்று தன்னை அறிவித்துக் கொள்ள தீவிரமாக காய் நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி,
மூன்று நாட்களாகியும் பன்னீரின் கருத்து குறித்து பதில் அளிக்கவில்லை. மாறாக அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.    இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்துக்கு நான்கைந்து நாட்களே இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து திட்டவட்டமாக தயார் செய்யப்பட்ட ஒரு கடிதம் அதிமுகவின் அனைத்து மாசெக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு வந்த அந்தக் கடிதத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஆறு பக்கத்துக்கு தட்டச்சு செய்யப்பட்ட அந்த கடிதம் ஒற்றைத் தலைமையால் ஏற்பட இருக்கும் சிக்கல்களை பாயின்ட் பாயின்ட் ஆக குறிப்பிட்டு, அதிமுக கட்சியே பிளவுபட்டு, இரட்டை இலை சின்னம் கூட முடக்கப்படலாம் என்று எச்சரிக்கிறது.

’ஒற்றைத் தலைமை: கழகத்தின் சட்ட விதிகள் மற்றும் சட்டத்தின் பார்வையில்' என்று தலைப்பிடப்பட்ட அந்த கடிதத்தில்,

“கடந்த 12-9-2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கழகத்தின் சட்ட விதிகள் (விதி எண் 20) திருத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி அவர்களது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். மேற்கண்ட பதவிகள் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறை குறித்த கழகத்தின் சட்ட விதிகள் மீண்டும் திருத்தப்பட்டு, அவ்விரு பதவிகளும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று, கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஒற்றை ஓட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தல் குறித்த அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் நடைபெற்று அவர்களால் முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. மேற்படி பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டுவிட்டது. மேற்கண்ட பதவிகளுக்கான கால அளவு ஐந்து வருடங்கள் ஆகும்.

மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இடத்தை யாரும் நிரப்ப இயலாது என்பதால், பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு இனி இல்லை என்று முடிவெடுத்து அந்த பதவியை ரத்து செய்து, தீர்மானம் கழகத்தின் சட்ட விதி 43 இன் கீழ் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலமான ஐந்து வருடத்தை கழகத்தின் பொதுக்குழு தீர்மானம் மூலம் தற்போது மாற்றி அமைக்க இயலாது. அவ்வாறு மேற்படி பதவிக் காலத்தை மாற்ற வேண்டுமெனில் பதவிக் காலம் முடிவுறும் நேரத்தில் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தேர்வுகளை பொதுக்குழுவால் ரத்து செய்யவோ மாற்றவோ இயலாது. அதற்கு கழகத்தில் விதிகள் இல்லை....” என்று விளக்குகிறது அந்தக் கடிதம்.

மேலும், “அரசியலமைப்பு சட்டத்தையே திருத்தும் போது அதிமுக அமைப்பு சட்டத்தைத் திருத்த முடியாதா?” என்று எடப்பாடி தரப்பினர் வெளிப்படையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கும் பதில் சொல்கிறது ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பில் அனுப்பப்பட்ட இந்தக் கடிதம்.

அதாவது, “அவ்வாறு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஒரு தலைப்பட்சமாக கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றி நீக்கம் செய்யும் பட்சத்தில் அது இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு நீதிமன்றத்தின் முன்பு வழக்குகளை சந்திக்க நேரிடும்.

கடந்த 1-12-21 அன்று கழக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களின் ஒற்றை வாக்கின் மூலமாக இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்று சட்ட விதி எண் 20 (அ) பிரிவு 2 ஐ திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் அதற்குப் பிறகு நடைபெறும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவதென்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த அடிப்படையில் மேற்படி சிறப்புத் தீர்மானத்துக்கு மட்டுமே நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒப்புதல் பெற முடியும். ஏனென்றால் இந்த சிறப்புத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு தேர்தல் ஆணையர்களால் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட தேதியில் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதை தேர்தல் ஆணையமும் ஏற்று அங்கீகாரம் செய்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ஆணையர்களாக இருந்து கிளை, நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட கழக தேர்தலை முறையாக அறிவிப்பு கொடுத்து நடத்தி முடித்துள்ளார்கள். தேர்வானவர்களின் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த 29-4-2022 அன்று முறையாக சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

எனவே வர இருக்கிற பொதுக்குழுவில் மேற்படி சிறப்புத் தீர்மானத்துக்கு ஒப்புதல் கொடுக்க முடியுமே அன்றி, மேலும் ஒரு தீர்மானத்தின் மூலம் ஒற்றைத் தலைமை கொண்டுவருவதற்காக தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானத்தை இயற்றுவதற்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு கூட்டத்தின் விதிகளை மீறி செய்யும் பட்சத்தில் மேற்சொன்ன பதவிகளின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் முன்பு சட்டப்படியான பிரச்சினைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.

இதன் மூலம் கழகத்தின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து ஒரு கேள்விக்குறியான நிலை உருவாகும். தமிழ்நாடு முழுதும் கழகத் தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தத் தூண்டுகோலாக அமையும்” என்று எச்சரித்திருக்கிறது அந்தக் கடிதம்.

அதாவது எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக்கு முயற்சித்தால் அதிமுக என்ற கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீண்டும் முடக்கும் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதம்.

சட்ட விதிகளை தெளிவாக மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம் பல நிர்வாகிகளிடையே பேசுபொருளாகியிருக்கிறது. இந்தக் கடிதம் எடப்பாடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரும் அதைப் படித்துவிட்டு, “நான் முதல் முதல்ல தேர்தல்ல நின்னு ஜெயிச்சதே சேவல் சின்னத்துலதான். அதுக்கப்புறம்தான் அம்மா இரட்டை இலையை கைப்பற்றினாங்க தெரியுமில்லே” என்று பழைய வரலாற்றை புதிய அர்த்தத்தோடு சொல்லியிருக்கிறார்.

-ஆரா

கருத்துகள் இல்லை: