திங்கள், 13 ஜூன், 2022

கொடுங்கையூரில் விசாரணைக் கைதி மரணம்.. மீண்டும் லாக்கப் மரணமா? - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?

Vignesh Selvaraj -   Oneindia Tamil  :   சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் விக்னேஷ் என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீஸ் தாக்குதலால் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை நேற்று இரவு திருவள்ளூரில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் மீது கொள்ளை, வழிப்பறி என 23 வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் என்ற அப்பு இன்று உயிரிழந்துள்ளார். குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ராஜசேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைத்து வரும்போதே ராஜசேகரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ராஜசேகரை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும், இதையடுத்து அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், சென்னையில் விக்னேஷ் என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் வலிப்பு வந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீஸ் தாக்குதலில் பலியானதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விக்னேஷை போலீசார், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

காவல் நிலையங்களில் நிகழ்ந்த லாக்கப் மரணங்களைத் தொடர்ந்து, கைதானவர்களை இரவு நேரத்தில் விசாரிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார். இந்நிலையில், கொடுங்கையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு காவல்துறை டிஜிபி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணையை தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: