வியாழன், 16 ஜூன், 2022

தமிழை மலையாளமாக்கிய கேரளா பார்ப்பனர்கள் .. Marshall நேசமணியின் பிறந்தநாள் 12 juin

May be an image of 1 person and text that says 'KANYAKUMARI TAMIZHAN வீட்டுக்கு ஒரு தமிழன் நாட்டை காக்க புறப்படு...'

ம. கி. எட்வின் பிரபாகரன்   : "1810 வரை தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட, சேரர் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், அதன் பிறகு, சனாதன தர்மத்தை கொள்கையாகக் கொண்ட சமஸ்கிருத மலையாள மன்னராட்சியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
ஏறத்தாழ 146 ஆண்டுகள் இந்நிலப்பரப்பு அடிமைப்பட்டுக் கிடந்தது. தீண்டாமை, காணாமை, தோள் சீலை அணியும் உரிமை மறுப்பு, கோவிலுக்குள் நுழையத் தடை, தலைப்பாகை அணியக்கூடாது, நல்ல பெயர்களை சூட்டக் கூடாது, வரிச்சுமை.. இன்னும் பற்பல அடக்குமுறைகள் தமிழ் குலத்தினர் மீது ஏவப்பட்டது!!


கன்னியாகுமரி தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க சமஸ்கிருத மலையாள ஆட்சியாளர்கள், இந்நிலப்பரப்பை மலையாளமயமாக்கினர்; தமிழ் கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். 1948 - 1956 காலகட்டத்தில், மொழி வழியில் மாநிலங்களை பிரிக்க இந்திய அரசு ஆய்வு நடத்திய போது, கேரளத்தோடு குமரி மாவட்டத்தை சேர்க்க அரசு முடிவு செய்தது. இவற்றையெல்லாம் எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து நடத்திய போராட்டமே, தெற்கெல்லை விடுதலைப் போராட்டமாகும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்களில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தினர். காவல்துறையின் கொடூரமான தாக்குதல்களில், நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், தமிழ்நாட்டோடு இணைந்தே தீருவது என்ற மன உறுதியோடு மக்கள் போராடினர்.
போராடிய மக்களின் தலைவராக இருந்து வழிநடத்தியவர் தான் குமரித் தந்தை Marshall நேசமணி. வர்ணாஸ்ரமதர்மத்தால் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில், ஆதிக்க ஜாதி வழக்கறிஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்து, அனைவருக்கும் பொதுவான ஒரே பானையை வைத்தவர்.
தான் நீதிமன்றம் சென்ற முதல் நாளன்றே,  ஒடுக்கப்பட்டடோருக்கு (நாடார், தேவர், பறையர், முக்குவர், ஈழவர், புலையர்......), தீண்டாமை காரணங்களுக்காக போடப்பட்டிருந்த "தனி" ஸ்டூலை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தவர். தமிழர்களை ஒன்றுதிரட்டி, அரசுக்கு எதிராக பல கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். அதேபோல,  தாய்மொழிக்கல்வி மறுக்கப்பட்ட தமிழர்களின் மொழி உணர்வுக்கும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும், வேளாளர்கள் முன்னெடுத்த தமிழ் சங்கங்களும், கருத்தரங்குகளும் பெரிதும் பயன்பட்டன.
துப்பாக்கி சூடுகள், தடியடிகள்,  ஆதிக்கவாதிகளின் அரிவாள் வெட்டுக்கள், சொத்து பறிப்புகள், தியாகங்கள், உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பலகட்ட போராட்டங்கள் நடந்தன‌.  "வீட்டுக்கு ஒரு தமிழன், நாட்டை காக்க புறப்படு" என்று நேசமணி முழங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல், இந்திய அரசால் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், விருப்பம் இல்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தையும், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவையும், தமிழ்நாட்டோடு இணைத்தது அரசு. (1956)
நேசமணி எழுதிய நூல்கள்:
1. Inside Travancore, Tamil Nadu
2. Rule of Steel and Fire in Travancore Cochin
3. "திங்கள்" என்ற இதழையும் நடத்தினார்.
தன் இறுதிக் காலத்தில், Church of South India (CSI) - கன்னியாகுமரி மறைமாவட்ட துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்தார். (1968). மன்னராட்சியில் ஜாதிகளால் பிளவுபட்டிருந்த, பிளவுபடுத்தி வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தமிழர்கள் (நாடார், மீனவர், பறையர், வேளாளர்,  ....), மொழி & பண்பாட்டின் அடிப்படையில், ஒன்று திரண்டெழுந்த வீரவரலாற்றுக்கு சொந்தக்காரரான Marshall நேசமணியின் பிறந்தநாள் இன்று ⚔️⚔️⚔️"
- ம. கி. எட்வின் பிரபாகரன்

கருத்துகள் இல்லை: