வெள்ளி, 17 ஜூன், 2022

மத்திய மாநில கவுன்சில் கூட்டங்கள் ஆண்டுக்கு 3 முறை நடத்தவேண்டும்! முதல்வர் ஸ்டாலினை வழிமொழிந்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

 Vignesh Selvaraj -   Oneindia Tamil :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன் என ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
மத்திய - மாநில கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதம் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க ஆளாத மாநில முதலமைச்சர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கருத்தை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வழிமொழிந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அவசர கடிதத்தை எழுதினார். அவர் எழுதிய கடிதத்தில், மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் மத்திய - மாநிலங்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவற்றிற்கிடையே எழும் ஒத்துழைப்பையும், கூட்டாட்சி உறவுகளையும் வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சிலின் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுந்துள்ள வேறுபாடுகளை களைவதற்கு கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த கூட்டம் ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது. அதாவது 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடத்தப்பட்டது. அதன்பிறகு இதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என தனது கருத்தை தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

மாநிலங்களை பாதிக்கக்கூடிய, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு மசோதாவும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதிக்கும் பல மசோதாக்கள், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கவுன்சில் கூட்டம் சரியாக கூடினால் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ள இந்த விவகாரம் நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநில முதல்வர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. அவர்களும், அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசித்து மத்திய அரசை வலியுறுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்தான், தமிழக முதல்வர் ஸ்டாலினின் ட்வீட்டை குறிப்பிட்டு அவரது கருத்தை வழிமொழிவதாகத் தெரிவித்துள்ளார் ஜார்க்கண்ட் மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மத்திய - மாநிலக் கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற அவரது யோசனையை அனைத்து மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்போடு மத்திய அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மாநில சுயாட்சிக்கான முதல் குரலை எப்போதும் ஒலிப்பது திமுகதான் என அக்கட்சியினர் குறிப்பிடுவது வழக்கம். ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகைப் பங்கீடு, மத்திய-மாநில அரசுகள் இடையேயான வரி வருவாய் பங்கீடு உள்பட பல விவகாரங்களில், மாநிலங்களின் உரிமை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தமாக பதிவு செய்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.

கொளுத்திப் போட்ட ஸ்டாலின் இந்நிலையில்தான், கவுன்சில் கூட்டங்கள் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வரும் நிலையில், ஆண்டுக்கு 3 முறை கவுன்சில் கூட்டங்களை நடத்தவேண்டும் எனக் குரல் எழுப்பியுள்ளார் ஸ்டாலின். அவரது இந்தச் செயல்பாடும் நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஸ்டாலின் அனுப்பிய கடிதம் தேசிய அளவில் பேசப்பட்டு வருவதால், திமுகவினர் உற்சாகமாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: