திங்கள், 13 ஜூன், 2022

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை: புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது... flashback

globaltamilnews.ne  : புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்யுதுள்ளதாக அதிகாரிகள் ஜேர்மன் காவற்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தென்மேற்கு ஜேர்மன் பகுதியில் வசித்து வந்த 39 வயதுடைய நவநீதன் என்பவரின் வீட்டில் மேற்கள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நபர் தொடர்பான விபரங்களை, தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிடாத அந்நாட்டு அதிகாரிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் அங்கத்தவர் என்றும் கொலை மற்றும் கொலை எத்தனிப்பு சம்பவங்களுடனும் அவர் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.  kadirgamar-assassination-suspect-arrested-in-germany/குறிப்பாக வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் 2005 ஓகஸ்ட்டில் கொல்லப்பட்டமை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

 solvanam.com :  
முகாமுகம்  - நட்சத்திரன் செவ்விந்தியன் ஏப்ரல் 24, 2022
"கொல்லப்படுபவனின் வலியை விட கொல்பவனின் வலி பெரிது" - - ஒரு புலி ஸ்னைப்பர்

1.ஒப்பறேசன் கதிர்காமர், கொழும்பு
அதுவொரு காட்டு ஊர். நகரத்திலிருந்து முப்பது கிலோமீற்றர் தூரத்திலிருந்தாலும் ஒரு புகையிரத நிலையமிருந்தாலும் சிற்றாறுகள் ஓடுகிற மலை ஊர்களின் நடுவிலிருந்த பள்ளமான ஊரில் சனங்கள் குறைவு. ஒரேயொரு மட்டரகமான மதுக்கள் கிடைக்கும் மதுச்சாலை. சிறு கடைகண்ணிகள் உள்ள ஒரு தெரு. ஒரேயொரு ஆரம்ப பாடசாலை. ஒரு கத்தோலிக்க தேவாலயம். இவைகள்தாம்.
 காட்டு ஊரில் பைத்தியக்கார ஓவியன் டேவிட் ஒரு கபே திறந்தபோது அவனது நண்பர்களும் உறவினர்களும் அவனை எள்ளி நகையாடினார்கள். Google நிறுவனத்துக்கு ஓவியம் வரைந்து சர்வதேசப் புகழ்பெற்ற டேவிட் ஓவியன் மட்டுமல்ல. அவனுக்கு ஓவியத்தை விட கோப்பி உருவாக்கத்தைப்பற்றியும் நன்கு தெரியும். 35 வயதில் ஒரு வாகன விபத்தில் மூளை அடிபட்டதால் நினைவுகளை இழந்து வாழ்வை மறுபடியும் கற்றுத்தேறியவன். தன்னுடைய சப்பாத்தை எப்படிக் கட்டுவது எனபதையே பழையபடி படித்து வரவேண்டியிருந்தது என்று சொல்லியிருந்தான். விபத்துக்குப்பிறகு ஓவியனை எல்லோரும் கைவிட்டபிறகு அவன் நகரத்தில் ஒரு கோப்பிக்கடையில் வேலைக்கு சேர்ந்து தன் நினைவுகளை மீட்டு பழைய வாழ்வையும் மீட்டான். கோப்பி கலவை செய்யும் கலையையும் தொழில் நுட்பத்தையும் கற்றுத்தேறியவன் தன்னுடைய 60 வயதில் திறந்த Cafe அது.

நானொரு முன்னாள் மட்டக்களப்பு  புலி உறுப்பினன்.  குறிபார்த்துச் சுடுதலில் சிறப்பான என்னை 2003ம் ஆண்டு பொட்டம்மான் தனக்கு ஒரு சிறப்பான ஸ்னைப்பர் தேவை என்று மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு அழைத்தார். 1999ல் 15 வயதில் நான் இயக்கத்துக்குப் போனேன். 7ம் ஆண்டிலிருந்து நான் காதலித்த என் வயது யாழ்ப்பாணப் பெட்டை வானதியிடம்  9ம் வகுப்பில் என் காதலைச் சொன்னேன். அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஒவ்வொரு நாளும் ரியூசனில் கதைப்போம். இரட்டைப் பிறப்புக்கள் போல பல தடவைகள் எங்களது பரீட்சை பெறுபேறுகள் ஒரே எண்ணிக்கையிலிருந்திருக்கின்றன. நாங்கள் இருவரும் சிவப்பு பச்சை நிறங்களை அறியமுடியாத நிறக்குருடுகள்.  உண்மையாக அவள் மறுக்கும்வரை என் சாதி என்னவென்று எனக்குத் தெரியாது. இன்றும் தெரியாது. அம்மாவின் குடி மட்டுமே தெரியும். வானதி என்னை மறுத்த காரணம் இன்றுவரை எனக்குத்தெரியாது. நான் கறுப்பு என்பதே காரணம் என அப்போது நினைத்தேன். அசல் மட்டக்களப்பான் எல்லோரும் கறுப்பாயிருந்தார்கள். கருணா அம்மான், அம்மானின் அண்ணன் றெஜி, கௌசல்யன, ரமணன், ரமேஷ். சாதியோ பிரதேசமோ தான் காரணமாக இருக்கும் என்று இப்போ நம்புகிறேன். எங்கள் வகுப்பில் முதல் தர மாணவனாக இருந்த நான் காதல் முறிவில்  இயக்கத்துக்கு போனது மட்டக்களப்பு நகரில் இன்றும் பிரபல்யமான செய்தி.

உலகத்து பல ராணுவங்கள்  இன்று நிறக்குருடுகளை சேர்த்துக்கொள்வதில்லை.  ஆனால் புலிகளில் நிறக்குருடுகளுக்கு சிறப்பான கவனம் உண்டு. முதலில் அவர்களின் இராக்கால குறிபார்த்துச்சுடும் திறமை சோதிக்கப்படும். அதில் தேறாவிட்டால் உளவுத்துறைக்கு அனுப்பப்படுவார்கள். கருணா அம்மான் ஒரு தடவை என்னிடம் இதனை புள்ளி விபரங்களுடன் ஒப்புவித்தார். கிழக்கு மாகாணப் போராளிகளில் சிறப்பான ஸ்னைப்பரும் சிறப்பான உளவாளியும் நிறக்குருடாகவே இருந்திருக்கிறார்கள். இரவின் நிழல்களை பார்க்கத்தெரிந்த ஸ்னைப்பரும் இரவின் நிழல்களில் மறைந்து  உளவுசெய்யத்தெரிந்தவனும் நிறக்குருடுகளே என்றார்.   

 நான் ஆயுதப்பயிற்சி எடுத்த நாளிலிருந்தே என் குறிபார்த்துச் சுடுதல் இயக்கத்தில் பிரபல்யமாகிவிட்டது.  எந்தக் குறியையும் நான் தவறவிடடதில்லை. கருணா அம்மான் என்னை சமர்க்களத்துக்கு அனுப்பவில்லை. சின்னப்பொடியனாக இருந்தாலும் ஸ்னைப்பர் படைகளை பயிற்றுவிக்கும் மாஸ்ரர் ஆக்கினார்.

 வன்னியில் பொட்டம்மான் என் திறமைகளை சோதித்தார். பொட்டம்மான் ஒரு சராசரி  ஸ்னைப்பர். அவர் ஒரு தடவை என்னை தலைவரிடம் கூட்டிச்சென்றார். பதுங்குகுழியொன்றில் நான் தலைவர், அம்மான் மூவரும் இரவில் தேய்பிறை மங்கியதுபோன்ற லைற் செற்றிங்கில்  குறிபார்த்துச் சுடும் விளையாட்டு ஆடினோம். நான் ஒரு குறியையும் தவறவிடவிலலை. தலைவர் ஒரேயொரு தடவை சுட்டார். குறி தப்பியது. பிறகு அவர் கலந்து கொள்ளவில்லை. நானும் பொட்டம்மானும் ஆடினோம். எனது குறி வெற்றி வீதம் 100. பொட்டம்மானினது 43.

 2005ம் ஆண்டு கொழும்பில் ஸ்ரீலங்காவின் மிகப்பிரயல்மான வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இரவில் குறிபார்த்துச் சுடடுக்கொன்றது மட்டுமே எனது ஒரேயொரு மனிதக்கொலை. நான் எண்ணுக்கணக்கில்லாத தொங்குமான், மான், மரை, முயல், பன்றி, பறவைகள், உடும்பு புறா, இன்னபிறவற்றை கொன்றிருக்கிறேன். எனது முதற் கொலை என்னுடைய ஒன்பது வயதில்  எங்கள் மாந்தோட்டத்தில் வந்த தொங்குமானை அப்பாவின் கட்டுத்துவக்கால் தேய்பிறைக்கால இரவொன்றில்  சுட்டுக் கொன்றது. அதற்கு முதல்நாள் பகலில்தான்  எங்களது கிழட்டு பெட்டைநாய் ஜிம்மி நிலத்தில் ஓடிய ஒரு தாட்டாங்குரங்கை கொன்றிருந்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பா மூன்று நாட்கள் என்னுடன் பேசவில்லை. முதல் தடவையாக அன்றிரவு  அம்மா எனக்கு அப்பா சாப்பிடுவதற்கு முதல் தனியாக இலை போட்டார். அம்மா நான் குரங்கு சுடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். குரங்கு நிலத்தில் வந்து விழுந்தபோது ஓடிவந்து பதட்டத்தோடும் பயத்தோடும் கட்டியணைத்து விட்டு அடுப்படிக்குள் ஓடிவிட்டார். அப்பா வெடிச்சத்தம் கேட்டு வந்தவர் என்மீதான காதலையும் கோபத்தையும் ஜிம்மி மீதே காட்டினார். ஜிம்மி அன்று மிகப்பரவசத்தில் நடனமாடியது. எனது களிசானை வாயால் இழுத்துவிட்டு அப்பாவின் சால்வையை பாய்ந்து கவ்வி என்னிடம் கொண்டுவந்தது. நான் அதனை எடுக்கமுதல் அடுப்படிக்குள் அப்பாவின் சால்வையை அம்மாவிடம் கொண்டு சேர்த்துவிட்டு வெளியில் வந்து செத்த குரங்கை வட்டமிட்டு குரைத்து நடனமாடியது. அப்பா ஜிம்மியை பறை வேசை என்று திட்டிக் கொண்டு தனது அறைக்குள் போனார்.

 கதிர்காமரை முடிக்கும் ஒப்ரேசனில் நான் வெறும் ஸ்னைப்பர் மட்டுமே.  வன்னியில் பொட்டம்மான் கதிர்காமரின் பல புகைப்படங்களை வீடியோக்களை  காட்டினார். அவரது இளவயதுப் படங்கள். இப்போதைய படம்.  அவரது இப்போதைய உடல் உயரம், பருமன், நிறம், நடக்கும் வேகம், ஓடும் வேகம். நீந்தும் வேகம், தலை சாந்திருக்கும் கோணம் இப்படி இன்னபிற துல்லிய தகவல்கள் தந்தார். கதிர்காமர் உண்மையில் திருமணமாகாத என்னுடைய பெரியப்பா போலவே இருந்தார். அப்பாவைப்போல கறுப்பு. அப்பாவின் இரட்டை சகோதரன் போல.

 ஒப்பரேசன் கதிர்காமர் நிகழ்ச்சிக்கு முதல் வாரமே நான் கொழும்புக்கு வந்தேன். எனது புலி உதவியாளன் ஜெகன் எல்லா ஏற்பாடுகளையும் கன கச்சிதமாக செய்திருந்தான்.

“கதிர்காமர் புதிதாக வாங்கிய வீட்டில் உள்ள நீச்சல் தடாகத்தில் அவர் நீந்தும்போது கொல்லவேண்டும். இரவில் விழக்கூடிய கொலை என்பதால் தான் நிறக்குருடான உன்னைத் தெரிவுசெய்தேன். இப்போது முழு உளவுத்தகவலும் வந்து சேராதபடியால் எந்த ஸ்னைப்பர் துப்பாக்கியை பாவிப்பது என்பது முடிவாகவில்லை. நீயறியாத பாவிக்காத துப்பாக்கியாகக் கூட இருக்கலாம். உன்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

2005 ஆகஸ்ட் 5  அமாவாசை பின்னேரம்  கிளிநொச்சியில் என்னை வழியனுப்பும்போது பொட்டம்மான் சொன்ன வரிகள்👆

அப்போது நோர்வே பேச்சுவார்த்தை சமாதான காலம். நான் வவுனியா நிலப்பாதையூடாக வருவது கண்காணிக்கப்படுவதையும் பொட்டம்மான் விரும்பவில்லை. காட்டுவழியால் புத்தளத்துக்கு போய் அங்கிருந்து மீன்பிடிப்படகில் நீர்கொழும்பு போனேன். நீர்கொழும்பு கடற்கரையில் ஜெகனை சந்திக்கும்போது இரவு பதினொரு மணியிருக்கும்.  ஒரு வெள்ளைவானில் அப்போதே கிளம்பினோம். ஜெகன் சரளமான சிங்களத்தில் வான் சாரதியோடு  உரையாடிக்கொண்டிருந்தான். ஜெகன் என்னைத்தட்டி நான் விழித்தபோது கொக்கட்டிச்சோலை இரவு திருவிழா போல இருந்தது. நாங்கள் இறங்கினோம் ஜெகனிடம் இரண்டு பெரிய கிரிக்கெட் துடுப்பு மட்டை காவும் பைகள் இருந்தன. ஒன்றை என்னிடம் தந்தான்.

காட்டு வன்னியை விட மிக இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த அதுதான் கொழும்பு என்றுணர எனக்கு நேரம் செல்லவில்லை. அப்போது நள்ளிரவு இருக்கும். பெரு நகரொன்றின் இரவு வாகன இரைச்சலும் புகைமணமும் மஞ்சள் மற்றும் மண்ணிற வீதித்தடுப்பு விளக்குகளில் வாகனங்கள் நிற்பதையும் காண எனக்கு பரபரப்பாயிருந்தது.

ஓரு பாலத்தில் சிற்றாறு ஓடும் ஓசை கேட்டது.  அப்போது ஆங்கிலத்தில் சவோய் என்றெழுதப்பட்ட பல மின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.  வாயிலிலிருநத இரண்டு  செக்கியூரிட்டிகள் ஜெகனிடம் ஓடிவந்தார்கள். ஜெகன் எங்களின் பைகளை அவர்கள் காவ அனுமதிக்கவில்லை.

நாங்கள் உள்ளே போனோம். இரண்டு சிங்கள சிப்பந்திகள் ” பாஸ்” என்று ஓடிவந்தார்கள். அப்போதும் எங்கள் பைகளை அவர்கள் காவ ஜெகன் அனுமதிக்கவில்லை.

சிங்களதேசமே உள்ளே ஒக்கம இருந்து கள்ளுக்குடித்துக்கொண்டிருந்தமாதிரி இருந்தது. ஓராயிரம் குடிகாரர்கள் அப்போதிருந்திருப்பார்கள்.

எங்களுக்கு ஆறு ஓடுவது தெரிய மூங்கில் இலைகளை சரசரக்கும் கண்ணாடி அருகில் ஒரு மேசை போட்டார்கள். ஜெகன் சிங்களத்தில்

” நண்பர்களே என்னை மன்னிக்கவேண்டும். இது என் மனைவியின் தம்பிக்காரன்  லக்கி( ஒப்பரேசன் கதிர்காமருக்காக பொட்டம்மான் எனக்கு தெரிந்த சங்கேதப் பெயர்) இவன் குடிப்பதில்லை.  எங்களுக்கு ஒரு டெவில் மாட்டு இறைச்சியும் ஒரு றால் கொத்துரொட்டியும் சாப்பிடத்தாருங்கள். இரண்டு கோழிக்க்கொத்துரொட்டிகளும் இரண்டு இரண்டு மாட்டுக்கொத்து ரொட்டிகளும் பாசல் கட்டித்தாருங்கள். எனக்கு நானருந்தும் காப்போத்தல் சாரயமும் தாருங்கள் போதும். நான் நாளை தனியே வருவேன்”

என்றான்.

ஜெகனின் சாரயப்போத்தல் வந்த கணமே அவன் ரகசியக்குரலில் சொன்னான்.

” லக்கி அரைமணித்தியாலத்தில் இவ்விடத்தை நாம் காலி பண்ணவேண்டும். சாராயக்கடைகளுக்கு வரும் வாகனங்களும் சாராயக்கடைகளிலிருந்து வெளியேறும் வாகனங்களும் ஸ்ரீலங்கா ஒற்றர்களின் றாடரில் விழாது. அதான் இந்த நாடகம்..

கடற்பயணக் களையில் 5 நிமிடத்தில் றால் கொத்துரொட்டியைக் காலிபண்ணினேன். ஜெகன் டெவில் மாட்டுறச்சியை பாதி சாராயத்தோடு காலி பண்ணினான். கொத்துரொட்டிப் பாசல் வந்ததும் பாதியருந்தாதிருந்த சாராயப் போத்தலை மூடி கொத்துரொட்டிகளோடு தன் பையில் வைத்தான். ஆயிரம் ரூபாய் ரிப்ஸ் வைத்தான். வெளியே வரும்போது நமக்கு ஓட்டோ பிடித்துவந்த இரண்டு செக்கியூரிட்டிகளின் பொக்கற்றுக்களில் இரண்டு ஐநூறு ரூபாய்த்தாள்களை செருகினான்.

இன்னொரு பணக்கார தமிழனின் வீடுதான் நான் கதிர்காமரை குறிபார்த்து கொல்லவேண்டிய “சென்றி” ஆக இருந்தது.  கிழவனும் கிழவியும் கீழ்வீட்டில் வசித்தார்கள். அவர்கள் மேல்  வீட்டைப்பாவிப்பதில்லை.  அடுத்த ஆறு நிமிடத்தில்  சந்தியொன்றில் இறங்கினோம். ஓட்டோ போய் மறைந்தபின் ஜெகன் சைகைகளால் என்னோடு பேசியபடி போக அந்த அமாவாசை இரவில் ரோட்டைக்கடந்து அடிமேல் அடிவைத்து ஒரு ஒழுங்கைக்குள் போனோம். ஒரு மதிலைக்காட்டிவிட்டு  பூனையைப்போல  ஓசை வராது பாய்ந்து குதித்தான். நானும் உள்ளே குதித்தேன்.  சில நிமிடம் சத்தம் ஏதும் வருகிறதா என்று ஜெகன் அவதானித்தான். பிறகு மேல்மாடி ஜன்னல் ஒன்றைக்காட்டிவிட்டு தனது பையையும் என்னிடம் தந்துவிட்டு அங்கிருந்த ஒரு பெருமரத்தில் ஏறினான். இரண்டு தடவை கிளையில் ஆடிவிட்டு குரங்கைப்போல தாவி  சுவரில் மேலே போகும் தண்ணீர்க்குளாயில் பற்றி விறுவிறுவென்று ஒரு Spiderman போல ஏறி யன்னலைப்பிடித்து உள்ளே போனான். மேலிந்து ஒரு  தடித்த நைலோன் கயிற்றை இறக்கினான். நான் இரண்டு பைகளையும் தோளில் போட்டுக்கொண்டு  கயிற்றில் தொங்கி மேலே ஏறினேன்.

பெரிய அறை அளவிலிருந்த ஒரு குளியலறை அது. மலங்கழிக்கும் கொமோட்,  ஷவர், குளியல் தொட்டி, அலுமாரி, எல்லாமிருந்தது.

ஜெகன் விதிகளை எனக்குச்சொன்னான்.

1. ஒரு சொட்டு தண்ணீர் கூட கழுவவோ குடிக்கவோ இக்குழாய்களிலிருந்து பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் கீழே சத்தம் கேட்கும்.

2. குடிக்கமட்டும்  போத்தல் தண்ணீர் நான் அலுமாரியில் வைத்திருக்கிறேன் என்று அலுமாரியை திறந்தான். அதில் 2 டசின் போத்தல் தண்ணீர், சொக்கலேட்டுகள், பிஸ்கெட்டுகள், குழந்தைகளின் மலந்துடைக்கும் ஈர நப்பிகள், சூயிங் கம், பொலித்தீன் பைகள் முதலியன இருந்தன.

3. மூத்திரம் பெய்து கட்டிவைக்க பொலித்தீன் பைகள் இவை. கக்கூசிருந்து கட்டிவைக்க மற்றப்பைகள்.

4. எந்த மின்சார விளக்குகளையும் பயன்படுத்தக்கூடாது. எநத மின்சார சுவிச்சையும் தொடக்கூடாது.

” இப்போ இரவில் ஆயுதத்தை உனக்கு காட்டமுடியாது . விடிந்தபின். இப்ப தரையில் படுப்போம்” என்றவாறு தூங்கிவிட்டான்.

விடிந்தும் விடியாது இருக்கிற பொழுதில் ஜெகன் என்னை எழுப்பினான். யன்னலைக்காட்டினான். அங்கிருந்து பார்க்க நீச்சல் தடாகத்தின் ஒரு மிகச்சிறிய கரைதான் தெரிந்தது. தெரிந்தது என்னவென்றால் சில மரக்கிளைகளின் மறைவுக்குப்பின்னாலிருந்த இரண்டு தூண்கள். நீச்சல் தடாகக் கரையில் பதித்த பளிங்குக்கற்கள்.

” அவன் நீந்தும்போது உன்னால் சுட வியூ இல்லை. எங்களுக்கு லக்கிருந்தால் எங்களுக்கு வியூ கிடைக்கும் பகுதிக்கு அவன் தப்பித்தவறி வரும்போது வெடிவைப்பதே”

 என்ற ஜெகன் தனது கிரிக்கெட் பையைத்திறந்து கொல்லாயுதத்தின் பகுதிகளை எனக்கு தந்தான். எப்படி பூட்டுவது என்ற விளக்க நூலில்லை. சில நிமிடங்களில் அதனை நான் Assemble பண்ணிவிட்டேன். பிறகு பைனாகுலர், Tripod, சைலென்சர் முதலிய உதிரிகளை பரிசோதித்தேன்.

நான் ஒருபோதும் அறியாத துப்பாக்கி. புத்தம் புதிய துப்பாக்கி. ஆனால் 1960 கால டிசைன்.  பைனாகுலரில் பார்த்தபோது இலக்கு வெறும் 120 மீற்றகளிலேயே இருந்தது.

அம்மான் எனக்கு மிகத்தெளிவாகச் சொல்லியனுப்பினார். 24/7 நீ தெளிவாயிருக்கவேண்டும். நீ தூங்கலாம். தூங்கவேண்டும். உங்களிருவரில் ஒருவர் மட்டுமே தூங்கவேண்டும். மற்றவர் விழித்திருக்கவேண்டும். கதிர்காமர் ஒரு காட்டான். அவன் நண்பகலிலும் நீந்தலாம். நள்ளிரவிலும் நீந்தலாம்.”

கதிர்காமர் அந்தவீட்டை தான் நீந்த மட்டும்தான் பயன்படுத்தினார். அவர் பாதுகாப்பு படைகள் சூழ அவ்வீட்டுக்கு வருகிறார் என்றால் அப்பகுதியே களேபரம் ஆகிவிடும். வாகனச்சத்தங்கள், சைரன் ஒலிகள் கேட்கும். முதல் 6 நாட்களில் இரண்டு இரவுகள் மட்டுமே வந்தார். எங்கள் வியூவில் மெய்ப்பாதுகாப்பாளர்கள் மட்டுமே தெரிந்தார்கள். நீச்சல் தடாக மூலையில் தண்ணீர் ஆர்ப்பரிப்பது மட்டுமே எனக்கு தெரிந்தது.

 ஏழாம் நாள் இரவு 10  மணிக்கு தூக்கத்திலிருந்த என்னை ஜெகன் எழுப்பினான். நித்திரைத் துயரில் பார்த்தேன். என் வியூவில் ஒரு மெய்ப்பாதுகாப்பாளன் தெரிந்தான். தடாக மூலையில் நீர் ஆடிக்கொண்டிருந்தது. கதிர்காமர் நீந்திக்கொண்டிருந்த ஒலி கேட்டது.

அந்நாள் ஆகஸ்ட் 12. வளர்பிறை 7ம் நாள் மங்கின நிலவு. கதிர்காமரின் புதுகாப்புக்காக அனைத்து மின்சார விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது.

ஒரு அரை மணித்தியாலம் நமது அதிஸ்டத்துக்காகக் காத்திருந்தோம்.  அப்போது தான் அவதானித்தேன். இன்றுவரையும் கிடைக்காத ஒரு புதிய வியூ கிடைத்தது. முன்னர் அவ்விடத்தை மரக்கிளைகள் மறைத்துக்கொண்டிருந்தன. அவை இப்போது வெட்டப்பட்டிருந்தன. அக்கணத்தில் கதிர்காமர் அவ்விலக்கில் எனக்கு  நீச்சல் அண்டவெயரோடு  முதுகைக் காட்டிக்கொண்டு நின்றார். எதிரே இருந்த பூஞ்செடியை நிலவில் இரசித்துக்கொண்டிருந்தார்.

ஏன்கெனவே Tripod ல் ஏற்பாடு செய்து வைத்திருந்த கொல்லாயுதத்தின் நிலை அவ்விலக்குக்கு உடந்தையாக இல்லை. நான் ஓரு செக்கனில் ஆயுதத்தை Tripod இலிருந்து கழட்டி என் வலது தோளில் வைத்து இலக்கு பார்த்தேன்.

மண்டைக்கு வைப்பதைவிட இட முதுகுக்கு வெடிவைத்தேன். மூன்றே மூன்று வெடிகள். ஒரு வெடி அவரின் இதயத்தை துளைத்துச் சென்றிருக்கவேண்டும். கதிர்காமர் நெற்றி அடிபட விழுந்தார். அதே கணத்தில் என் வலது  தோள்மூட்டு உடைந்ததுபோல பெருவலியை உணர்ந்தேன்.

முதல் ஏழு செக்கனில் கதிர்காமர் நிலத்தில் நெற்றியடிபட விழுந்தார். சைலென்சர் வெடி. அவர் மயங்கி விழுகிறார் என்று நினைத்து முதல் மெய்ப்பாதுகாவலன் அவரிடம் ஒடிவரும்போது  19 செக்கன்கள். அவரின் குருதியைக்கண்டு மெய்ப்பாதுகாவலன் சுதாகரிக்கும் போது 29 செக்கன்கள். மெய்ப்பாதுகாவலன் அலறியடித்து கத்தி மற்ற மெய்ப்பாதுகாவலர்கள் வந்து அவரைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிப்போய்  STF பாதுகாப்புப்படை வாகனத்தில் ஏற்றும்போது 3 நிமிடங்களாகிவிட்டது. அப்போது அவர் இறந்து கொண்டிருந்தார்..

அந்த மூன்றாவது நிமிடம் நானும் ஜெகனும் பௌத்தலோக மாவத்த வீதியில் எமக்காகக் காத்துக்கொண்டிருந்த வெள்ளை வானில் ஏறி வாகனம் ஓடத்தொடங்கி  ஒரு நிமிடம் ஆகிவிட்டது .

2 வது நிமிடம் நாங்கள் கிரிக்கெட் பைகளோடு ஓடிக்கொண்டிருந்தோம். 59வது செக்கனில் நான் ஆயுதப் பையோடு  மதிலேறிக் குதித்தேன். 49வது செக்கனில் ஜெகன் மதிலேறிக்குதித்தான். ஸ்னைப்பர் துப்பாக்கியை மடித்து கிரிக்கெட் பையில் போட்டு நைலோன் கயிற்றில் தொங்கி நான் இறங்கியபோது 29 செக்கன்ட். ஜெகன் கதிர்காமர் விழுந்த 7வது செக்கன்டே இறங்கிவிட்டான்.

பொரள்ளை, தெமட்டகொட வழியாக நாங்கள் கொழும்பு நகரை கடந்தது  9வது நிமிடம். பத்தாவது நிமிடம் நகரின் எல்லைகள் மூடப்பட ஆயிரம் ஸ்ரீலங்கா பொலிசார் இறக்கப்படுகிறார்கள். அதே நிமிடத்தில் ஹெலிகொப்டர்களும் வானில் தோன்றி எங்களை தேடத் தொடங்குகின்றன. 11வது நிமிடத்தில் கதிர்காமர் இறக்கிறார். இறந்த கதிர்காமரை 13 வது நிமிடத்தில் கொழும்பு வைத்திசாலை காடியோலிஜிட் உயிர்ப்பித்து Live Support ல் போடுகிறார். 23வது நிமிடத்தில் ஜனாதிபதி சந்திரிகா அம்மா செயற்கை உயிரில் மயக்கத்திலிருந்த கதிர்காமரை பார்த்துவிட்டு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி வெடித்து அழுகின்றார்.

நாங்கள் நள்ளிரவு நேரம் நீர்கொழும்பை அடையும்போது சிங்கள ரேடியோவில் பிறேக்கிங் நியூஸ் என்று ஒரு அறிவிப்பு வந்தது. மத்திய கொழும்பு வைத்தியசாலை விபத்துப்பிரிவு  வைத்திய அதிகாரி அனில் ஜயசிங்கவின் குரலில் வந்தது.

” ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் துப்பாக்கி சூட்டுக்காயங்களால் இன்றிரவு இறந்தார். அவரை வைத்தியசாலை பொறுப்பேற்கும்போதே இறந்து கொண்டிருந்தார். அவரின் உயிரைக்காப்பாற்றும்  நம் வைத்தியர்களின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.”

மூனறு நாட்கள் நாங்கள் நீர்கொழும்பில் ஒரு தமிழ் மீனவரின் வீட்டில் தங்கியிருந்தோம்.  ஏழு நாட்களுக்குப்பின் அவ்விரவில் ஆசை அருமையாகக் குளித்துவிட்டுப் படுத்தேன். அந்த அதிகாலையே ஒரு மீன்பிடிப்படகில் போய் கடலில் ஜெகன் கதிர்காமரைச் சுட்ட அரிய துப்பாக்கியை கடலில் டம்ப் பண்ணிவிட்டான் என்ற செய்தியை அடுத்தநாள் காலை கடலிலிருந்து வந்து சொன்னான்.

 பிறகு திட்டத்தின் படி நீர்கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரு கடத்தல் படகில் தப்பிச்சென்றோம். எங்கள் அடுத்த வேலை இந்தனேசியாவுக்குப் போய் அங்கிருந்து இயக்கத்தின் ஆயுதங்களை கொண்டுவரும் கப்பலை முல்லைத்தீவுக்கு கொண்டுசெல்லும் புலிகளின் மாலுமிகளோடு இணைவது. 2005 நவம்பர் மாதத்தில் நானும் ஜெகனும் விமானம் மூலம் ஜகார்தாவுக்கு போய்விட்டோம். டிசம்பர் மாதம் நத்தாருக்கு அடுத்தநாள் ஹோட்டலில் என்னோடு தங்கியிருந்த ஜெகன் காணாமல் போய்விட்டான். ஒரு வாரம் செய்வதறியாது காத்திருந்தேன். அப்போதுதான் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது. ஜெகன் தான் பொட்டம்மானின் தொடர்பாளர். அவன் காணாமல் போகவில்லை. நான் மட்டக்களப்பு என்பதால் கருணாவின் விசுவாசியாக இருக்கலாம் என்பதால் பொட்டம்மான் உத்தரவுப்படியே என்னை காய்வெட்டிவிட்டான். இந்த துரோகத்தை என்னால் தாங்கமுடியவில்லை. கனடாவிலிருக்கும் என் மாமாவிடம் என் நிலமைச் சொல்லி உதவி கேட்டேன். அவர்தான் என்னை ஏஜென்சிக்காரன் மூலம் ஒஸ்றேலியாவுக்கு அனுப்பினார்.

கருத்துகள் இல்லை: