சனி, 18 ஜூன், 2022

ராஜீவ் கொலை --- நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு நிராகரிப்பு! சென்னை உயர் நீதிமன்றம்

BBC tamil -: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து அந்த முடிவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது.
இரண்டரை ஆண்டுகாலம் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்த ஆளுநர் பிறகு அதை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார்.
இதை தமிழ்நாடு அரசு ஆட்சேபித்தது.
அத்துடன், பேரறிவாளனும் தம்மை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச்,

ஒரு சிறைவாசியை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை முடிவெடுத்து அதனை பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பிய பிறகு, 161வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை செயல்படுத்தாமல் இருப்பது அல்லது அப்படி செயல்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதத்தை ஏற்படுத்துவது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரியது என்று கூறியதுடன்,

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை இரண்டரை ஆண்டு காலம் கழித்து குடியரசுத் தலைவருக்கு மாநில ஆளுநர் அனுப்பியிருக்கும் செயலை அரசமைப்புச் சட்டம் ஆதரிக்கவில்லை; அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கும் அது விரோதமாக இருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் கருத்தை ஆளுநர் பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.

அத்துடன், மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநருக்கே திரும்பி அனுப்புவது பொருத்தமற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக கூறியது.

இந்த தீர்ப்பு பேரறிவாளனை விடுதலை மட்டும் செய்யவில்லை. தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் நடவடிக்கை அல்ல என்பதையும் குறிப்பிட்டது.

ஆனாலும், அந்த தீர்மானம் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது. இந்நிலையில், மேலும் இதே வழக்கில் சிறையில் உள்ள 6 பேரில் நளினி மற்றும் ரவிச்சந்திரன், தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகினர்.

உயர் நீதிமன்றம் என்ன சொன்னது?

தங்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்வதால், சிறையிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென நளினி தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்திற்கு 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவில்லை என்பதால், தாங்கள் விடுவிக்க முடியாது என்று கூறி நளினி மற்றும் ரவிச்சந்திரனின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு துவங்கியபோது, பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து இந்த வழக்கில் வாதங்களைச் செய்யப் போகிறீர்கள் என்றால், தாங்கள் இந்த வழக்கை விசாரிக்கப்போவதில்லையென்றும், நேரடியாக உச்ச நீதிமன்றத்தையே அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதனால், இரு வழக்குகளையும் தொடர்புபடுத்தாமல் தனது வாதங்களை முன்வைத்தார் நளினி தரப்பு வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன்.

தன்னை விடுவிக்க வேண்டுமென 2014லும் 2018லும் தமிழ்நாடு அரசு முடிவுசெய்த நிலையிலும் தாங்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று வாதிடப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றம் போல அரசியல் சாஸனத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்படி விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

கருத்துகள் இல்லை: