வெள்ளி, 17 ஜூன், 2022

ஓ பன்னீர்செல்வம் : ''ஜெயக்குமார்தான் இதற்கு காரணம்.... என்னை ஓரங்கட்டவோ, பிரிக்கவோ முடியாது'

 நக்கீரன்  -கலைமோகன்  :  அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக பேசுகையில், ''இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது அப்போதிருந்த 19 மாவட்ட கழகச் செயலாளர்கள், 90க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கினார்கள். 1972ஆம் ஆண்டு அதிமுக என்னும் மாபெரும் தொண்டர்கள் இயக்கத்தை எம்ஜிஆர் ஆரம்பித்த பொழுது இது தொண்டர்களுக்கான இயக்கம் என்றுதான் எம்ஜிஆர் ஆரம்பித்தார். 

அப்பொழுது முடிவெடுத்தார்கள் லட்சோபலட்சம் தொண்டர்களைக் கொண்ட இந்த இயக்கத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி பொதுச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கவோ, நீக்கவோ முடியாது. பொதுச்செயலாளர் பதவி என்பது கழகத்தில் இருக்கின்ற அடிப்படை உறுப்பினர்களால் உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் முறையில் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும் என்றுதான் தொண்டர்களுக்கு அடிப்படை உரிமையாக எம்ஜிஆரால் வழங்கப்பட்டது.


பொதுக்குழுவில் தீர்மானங்கள் மூலமாக பல்வேறு விதிகளை உருவாக்குவதும், திருத்தங்கள் கொண்டு வருவதும், மாற்றங்கள் கொண்டு வருவதும் முடியும் ஆனால் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதியை மட்டும் எந்த சூழலிலும் எப்பொழுதும் மாற்றக்கூடாது என்பதுதான் அதிமுகவில் பைலாவில் இருக்கக்கூடியது. அப்படி உருவாக்கப்பட்ட இந்த பொதுச்செயலாளர் பதவியை தான் பல்வேறு தலைவர்கள் வகித்தனர். கடந்த 30 ஆண்டுகளாக ஜெயலலிதா வகித்தார். ஜெயலலிதாவும் ஒவ்வொருமுறையும் ஜனநாயகப்படி தேர்தல் மூலமாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னால் கழக சட்ட விதிப்படி கழகத்தின் அமைப்பு ரீதியான தேர்தல், கிளை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நகராட்சி தேர்தல், மாவட்ட கழக செயலாளர் தேர்தல், தலைமை கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கான தேர்தல் என நடத்தினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைகின்ற பொழுது 'பொதுச்செயலாளர்' என்ற பொறுப்பு ஜெயலலிதா ஒருவருக்கு மட்டுமே உரித்தானது, உரிமையானது.  நாம் அவருக்கு கொடுக்கும் மிகப் பெரிய அந்தஸ்து. அவருக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய மரியாதை. யாரும் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் இருக்கக் கூடாது என முடிவெடுத்து இரட்டை தலைமை கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

அதை உருவாக்குகின்ற நேரத்தில்கூட நான் கேட்டேன் இந்த இரட்டை தலைமை என்பது இதுவரை இல்லாத ஒன்றாக இருக்கிறது. வேறு ஏதேனும் பதவியைக் கொடுத்து தலைமையை நிர்வகிக்கலாம். எனக்கு முதலமைச்சர் பதவியும், துணை முதலமைச்சர் பதவியும் தேவை இல்லை. ஏற்கனவே ஜெயலலிதாவால் இரண்டுமுறை முதலமைச்சராக்கப்பட்டவன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னாலும் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்று பணித்ததன் காரணமாக அப்பொழுது அந்த முதல்வர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதற்கு பின் பல பிரச்சனைகள் உருவானது. இந்த இணைப்பு அவசியம் தேவை என்ற நிலை உருவானது.  டிடிவி தினகரன் 18 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடப்பாடி அரசு மீது கொண்டு வந்த பொழுது டிடிவி தினகரன் உடனிருந்த பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், எங்களிடம் இருந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களை சேர்த்தால் அந்த ஆட்சி பறிபோகின்ற ஆட்சியாக இருக்கக்கூடிய சூழல் உருவானது. அந்த சூழலில்தான் தன்னுடைய உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதா கஷ்டப்பட்டு 2016-ல் இந்த ஆட்சியை நிறுவினார்கள். அந்த ஆட்சி பறிபோய் விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் நான் டிடிவி தினகரன் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததன் காரணமாக ஐந்து ஓட்டில் எடப்பாடி பழனிசாமியின் அரசு காப்பாற்றப்பட்டது. இந்த இரட்டை தலைமை என்பது முதலில் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மட்டும் சொன்னார்கள். சரி என்று ஒப்புக்கொண்டேன். இரண்டு நாள் கழித்து ஒவ்வொரு கழக நடவடிக்கைகளிலும் இரண்டு பேருமே கையெழுத்து போட வேண்டும் என்று சொன்னார்கள்.
 
இந்த 6 காலமாக இருவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக நான் துணை முதல்வர் என்ற பதவியில் இருந்தோம். துணை முதல்வர் என்ற பதவிக்கு இந்திய அரசியல் சட்டத்தில் எந்த வித பிரத்தியேக எந்த அதிகாரமும் இல்லை. துணை முதல்வர் என்று போட்டுக் கொள்ளலாமே ஒழிய முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய எந்தவிதமான பிரத்தியேக அதிகாரமும் துணை முதல்வருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. அதுதான் நிதர்சனமான உண்மை. இருந்தாலும் இடையில் எனக்கு இந்த துணை முதலமைச்சர் பதவியை வேண்டாம் என்று ஆணித்தரமாக சொல்லி வந்த வேளையில் டெல்லி சென்று பிரதமரிடம் உரையாடும் பொழுது பிரதமர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன். நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு... இன்னைக்கு நீங்கள் கேட்கின்ற இந்த ஒற்றைத் தலைமை ஏன் உருவாகியது என்று எனக்கே தெரியவில்லை. இது கனவா நனவா என்ற நிலை இருக்கிறது.

இதுகுறித்து கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கிப் பேசினார். நானும் விளக்கி பேசினேன். கூட்டம் நன்றியுரை கூறி முடிய வேண்டிய நேரத்தில் சிலபேர் கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மாதவரம் மூர்த்தியை முதன்முதலில் அழைத்தார். அவர் தான் முதலில் ஆரம்பித்தார் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று. இதனை என்னிடம் கலந்து பேசவில்லை. ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய என்னிடம் கலந்து பேசவில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதனை வெளிப்படையாகப் பேசினார்கள். யாரும் வெளியில் சென்று இதுகுறித்து பேட்டி கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தோம். நம்முடைய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியில் போய் பேட்டியில் சொன்னதன் காரணமாக இது மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக மாறியுள்ளது. நன்றாக ஆறாண்டு காலம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருந்த இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை என்ற கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தேவைதானா என்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இன்று பல்வேறு கருத்துக்கள் சென்று கொண்டிருக்கிறது. தொண்டர்கள் பல்வேறு நிலைகளில் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தொண்டர்கள்  உணர்ச்சிவசப்பட வேண்டாம் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்'' என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் 'நீங்கள் ஓரம்கட்டப்படுவதாக நினைக்கிறீர்களா?' எனக் கேட்டதற்கு,

''நான் எப்பொழுதுமே அதிமுகவில் தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். உச்சபட்ச பதவியாக இரண்டு முறை ஜெயலலிதாவால் முதல்வராக மனநிறைவோடு பணியாற்றினேன். ஜெயலலிதா உயிரிழப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமாக இருந்தபோதுகூட அவருக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் நீங்கள் தான் முதல்வராக வரவேண்டும் என்று என்னிடம் பேசி ஒருவரிடம் நான், முடியாது என்று சொன்னேன். அதற்கு பல்வேறு காரணங்களை அவரிடம் நான் சொன்னேன். அப்பொழுது மூன்று மாதங்கள் மட்டும் முதல்வராக இருக்கிறேன். மூன்று மாதத்திற்குள் நீங்கள் கலந்துபேசி வேறு யாரையாவது முதல்வராக நியமித்து கொள்ளுங்கள் என்று சொல்லித்தான் அந்த பதவியில் நான் இருந்தேன். எந்தவித அதிகார ஆசையும் கொண்டவன் அல்ல நான். தொண்டர்கள் இயக்கத்தில் தொண்டனாக இருந்து மட்டும்தான் முதலமைச்சராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தொண்டர்களிடம் இருந்து எந்த நேரத்திலும் என்னை ஓரங்கட்டவோ, பிரிக்கவோ எந்த நிலையிலும் முடியாது. இதுகாலத்தின் கட்டாயம். ஏனென்றால் நான் தொண்டர்களுடன் கலந்து பணியாற்றியிருக்கிறேன். எதிர்க்கட்சியாக நாம் இருக்கிறோம் இந்த நேரத்தில் இது தேவையா? திறமையோடு பணியாற்றி மீண்டும் அதிமுகவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டுமே தவிர, இந்த நேரத்தில் இந்த பிரச்சனை தேவையா என்ற கேள்வியை கேட்டேன். இதுவரைக்கும் இந்த பேச்சை பேசியதில்லை நானும் எடப்பாடி பழனிசாமியும்.  இரண்டு பேரும் சேர்ந்து இந்த பிரச்சனையை யாரிடமும் பகிர்ந்ததே இல்லை. இன்றைய காலத்தில் இரட்டை தலைமை என்பது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவிற்குத்தான் பொதுச்செயலாளர் பதவி என முடிவெடுத்த பிறகு மீண்டும் ஒற்றைத் தலைமையான பொதுச்செயலாளர் பதவியை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் ஜெயலலிதாவிற்கு நாங்கள் கொடுத்த மதிப்பு, மரியாதை காலாவதியாகக் கூடிய சூழ்நிலையை நாமே உருவாக்கிவிட்டால் இது அவருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் என்று நாங்கள் நினைக்கிறோம்'' என்றார்.

அப்பொழுது 'மீண்டும் ஒற்றைத் தலைமை என்ற வலியுறுத்தலைக் கட்சிக்குள் கொண்டு வருவது யார்?' என செய்தியாளர் கேள்வி எழுப்ப, ''யாரையும் குறிப்பிட்டு மனம் நோகவைக்க விரும்பவில்லை. இதையும் தாண்டி ஒற்றைத் தலைமை வேண்டுமா வேண்டாமா என்பதை இபிஎஸ்தான் சொல்ல வேண்டும்.'' என்றார்.

கருத்துகள் இல்லை: