ஞாயிறு, 12 ஜூன், 2022

துணைக்கண்ட மொழிகளை அழித்து இந்தி வளர்ந்த வரலாறு

 இளங்கோவன் சந்திரன்  : ஹிந்தியின் வரலாறு:
1.12ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் ஏற்பட்ட முகலாயர்களின் ஆட்சியில் பார்சி, அரபி மொழிகளே ஆட்சியாளர்களின் மொழிகளாக இருந்தது. அதேநேரம் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட மொழியே உருது மொழி. பார்சி எழுத்துக்களில் எழுதப்பட்ட இம்மொழி பேச்சுவழக்கில் இந்திய மொழிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதே நேரம் மிகுதியாக பார்சி,அரபி சொற்கள் கலந்த மொழியாக இருந்தது.
2.19ம் நூற்றாண்டில் பரத்தேந் ஹரிஷ் சந்த்ர அகர்வால் என்பவர், "உருது மொழி இஸ்லாமியர்களின் மொழி. இந்துக்களுக்கான ஒரு மொழி வேண்டும்." என குரல் கொடுத்தார். இவரே இந்தி மொழியின் தந்தை என போற்றப்படுகிறார். இவரது தாய் மொழியும் உருது தான்.
3.1893ல் வாரணாசியில் நாகரி பிரச்சாரிணி சபா என்று ஹிந்தி மொழி பரப்புரைக்காக ஏற்படுத்தப்பட்டது.


4.1897ல் மதன்மோஹன்மாளவியா வடமேற்கு மாநில துணை நிலை ஆளுநர் சர் ஆண்டனி மெக்டொனால்டிடம் நீதிமன்றங்களிலும், தொடக்கக் கல்வி நிலையங்களிலும் பார்சி எழுத்துக்களில் எழுதப்படும் உருது நீக்கப்பட்டு தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்படும் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
5. 1900ல் அதுவரை இந்தியா முழுமைக்கும் ஆங்கிலத்துடன் நீதிமன்ற மொழியாக இருந்த உருது நீக்கப்பட்டு தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்படும் ஹிந்தி கொண்டு வரப்பட்டது. அன்று விழுந்த உருது இன்றுவரை எழவே இல்லை.
6.1910ல் அலகாபாத்தில் ஹிந்தி சாகித்திய சம்மேளன் என்ற அமைப்பு தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்தி மொழி வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது.
7. இவ்வாறு வேகமாக ஹிந்தி மொழி தோற்றுவிக்கப்பட்டாலும் இலக்கண இலக்கியங்களை ஏற்படுத்துவதில் பெரும் பின்னடைவு இருந்தது.
8.1870_1920: 50 ஆண்டு காலத்தில் ஹிந்தி மொழி இலக்கண இலக்கியங்கள் ஏற்படுத்தப்பட பெரும் போராட்டமே நிகழ்ந்தன.இந்த்ரப்ரஸ்தம் என வரலாற்றில் குறிப்பிடப்படும் தற்போதைய டெல்லியை சுற்றிலும் பேசப்படும் "கடிபோலி" என்ற மொழி நடையையே ஹிந்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு அதில் மிகுதியாக கலந்திருந்த பார்சி,அரபி சொற்கள் நீக்கப்பட்டு சமஸ்கிருத சொற்கள் திணிக்கப்பட்டது. இறுதியில் ஹிந்துக்களுக்கான மொழியாக ஹிந்தி உருவாக்கப்பட்டது. வட இந்தியாவில் முஸ்லிம்கள் இன்றளவும் உருது மொழியே பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
9.மேலும் பேச்சுவழக்கில் இரு மொழிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. எழுத்து வழக்கில் மட்டும் உருது மொழி பார்சி எழுத்துக்களிலும், ஹிந்தி மொழி தேவநாகரி எழுத்துக்களிலும் எழுதப்படுகிறது. அத்தோடு உருது மொழி பார்சி,அரபி சொற்கள் மிகுதியாக கலந்ததாகவும், ஹிந்தி மொழி சமஸ்கிருதச் சொற்கள் மிகுதியாக கலந்ததாகவும் இருப்பதால் ஹிந்தி மொழி ஹிந்துக்களின் மொழியாக நிலை பெறத் தொடங்கியது.
10. ஹிந்தி மொழியின் வளர்ச்சி என்பது பல வட்டார மொழிகளின் அழிவிலேயே ஏற்பட்டது எனலாம். தேவநாகரியை எழுத்து வழக்கிற்காக ஏற்றுக்கொண்ட மராத்தி, கொங்கணி, நேபாளி போன்ற பல்வேறு இலக்கண இலக்கிய வளம்பெற்ற மொழிகளும் தேய்ந்து வருவதை அம்மொழி பேசும் மக்கள் இன்று உணரத் தொடங்கியுள்ளனர்.
11. இந்தியாவில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு முதன்முதலில் தமிழகத்தில் தோன்றியிருந்தாலும் அது பிற மொழிகளை அழிக்கும் வேகத்தைக் கண்டு இன்று கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள், குஜராத், ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
12. மக்களின் தாய்மொழி அழியும்போது அவர்கள் அடையாளமும் அழிந்துவிடும்!
இளங்கோவன் சந்திரன்,BE,MBA, Energy Auditor,
०௯.०௬.௧௯(09.06.19)

கருத்துகள் இல்லை: