ஞாயிறு, 21 நவம்பர், 2021

அரசு வழக்கறிஞர் நியமனம்: அதிருப்தியில் திமுக கூட்டணிக் கட்சிகள்!

அரசு வழக்கறிஞர் நியமனம்: அதிருப்தியில் திமுக கூட்டணிக் கட்சிகள்!

மின்னம்பலம் : திமுக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முதல் மூன்று மாதங்கள் கொரோனா தடுப்புப் பணியில் போய்விட்டதால்...அரசுப் பதவிகளுக்கான புதிய நியமனங்கள் தாமதமாகவே தொடங்கியது. இந்த வகையில் திமுக அரசு அமைந்ததும் திமுக வழக்கறிஞர்களோடு அதன் கூட்டணிக் கட்சிகளின் வழக்கறிஞர்களும் தங்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவிகள் கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மமக கட்சியின் தலைமைகள் அரசு வழக்கறிஞர் பதவிகள், தங்கள் கட்சிகளில் இன்னாருக்கு வேண்டும் என்று தனித்தனியாக திமுக தலைமைக்கு பட்டியலை கொடுத்திருந்தன.
இப்போது அரசு வழக்கறிஞர்கள் பதவி மாவட்ட ரீதியாக வேகமாக நிரப்பப்பட்டு வரும் நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த நியமனங்கள் திருப்தியளித்திருக்கிறதா?
திமுக கூட்டணிக் கட்சிகளின் வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகளிடம் பேசினோம்..


காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் சந்திரமோகனிடம் கேட்டோம்.

“எங்கள் குமுறல்களை, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் தெரிவிக்க வழியைத் தேடிக்கொண்டிருந்தோம். நல்லவேளையாக நீங்களே எங்களை கேட்டுவிட்டீர்கள். எங்கள் கட்சி வழக்கறிஞர்களுக்கு மொத்தம் 17 பதவிகள் கேட்டிருந்தோம்.

அதில் இரண்டு மூன்று கொடுக்கவே ஏளனமாகப் பேசிவருகிறார்கள் திமுக தரப்பில். நேற்று நவம்பர் 19ஆம் தேதி, திமுக வழக்கறிஞர் அணி முக்கிய நிர்வாகியும் எம்பியுமான என்.ஆர்.இளங்கோவை அவரது அண்ணாநகர் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். நானும் (சந்திரமோகன்) நவாஷ், செய்தி தொடர்பாளர் கோபண்ணா மூவரும் சென்றோம். பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நொந்து போய் வெளியே வந்தோம்” என்கிறார் சந்திரமோகன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில தலைவர் பார்வேந்தனிடம் பேசினோம்.

“மு.க..ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டதும், எங்கள் தலைவர் திருமாவளவன், முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது தனது கட்சியில் உள்ள வழக்கறிஞர்களுக்கு அரசு பதவி கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உங்களுக்குத் தேவையான இடத்தையும் பெயரையும் ஒரு லிஸ்ட் கொடுங்கள் என்றார் முதல்வர். அதன்படியே தமிழகம் முழுவதுமுள்ள விசிக வழக்கறிஞர்களுக்கு அரசு பதவி கேட்டு பெரிய பட்டியலையும் கொடுத்து அனுப்பினார், ஆனால் இன்று வரையில் எந்தவிதமான பதிலும் இல்லை. நாங்களும் அவ்வப்போது பேசிவருகிறோம். , அவர்களோ ஒன்று அல்லது இரண்டு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதுவும் இன்னும் கொடுக்கவில்லை” என்று அதிருப்தியான குரலில் கூறினார்.

.சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். “நாங்கள் திமுக தலைமையிடம் அதிகாரப்பூர்வமாக எந்த பதவியும் கேட்கவில்லை, அவர்களே பார்த்து கட்சியில் உள்ள சீனியர்களுக்கு கொடுத்தால் நல்லது, இல்லை என்றாலும் நாங்கள் தேடிப்போய் கேட்கமாட்டோம்” என்றார் அதிரடியாக.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ,வுமான தி.வேல்முருகனிடம் இதுபற்றி கேட்டோம். “கடலூர், தர்மபுரி, சேலம், சென்னை போன்ற இடங்களுக்கு எங்கள் கட்சியில் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஜிபி, பிபி எனப் பதவிகளைக் கேட்டு தமிழக முதல்வரிடம் நேரடியாக மனு கொடுத்தேன், சந்திக்கும்போதெல்லாம் கேட்டுள்ளேன். என்னவோ தெரியவில்லை இதுவரையில் கேட்டது கிடைக்க வில்லை” என்றார் விரக்தியான குரலில்.

அரசு வழக்கறிஞர் பணி நியமனங்களில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் நிலைமை இதுதான்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: