hindutamil.in : கேரள மாநிலத்தில் 13 கல்லூரி மாணவர்களிடம் நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அளவுக்குத் தீவிரத் தன்மை இல்லாத வைரஸாக நோரோ வைரஸ் அறியப்பட்டாலும், அதன் தொற்றுத் தன்மை காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகவிலும் நோரோ வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசும் நோரோ வைரஸ் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நோரோ வைரஸ் குறித்தும், அவ்வைரஸிடமிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் வேலூர் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைமை மருத்துவர் ராமலிங்கத்திடம் பேசினோம்.
நோரோ வைரஸ் என்றால் என்ன?
நோரோ வைரஸின் முழுப்பெயர் நார்வாக் வைரஸ். இதற்குப் பெயரே ’விண்டர் வாமிட்டிங் பக்’ என்றுதான் கூறுவார்கள். இந்த வைரஸ் 1968ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் மழைக் காலங்களில்தான் பரவும். நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதே இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கியக் காரணம்.
எவ்வாறு பரவுகிறது?
மற்ற சாதாரண வைரஸ்கள் போன்றதே இந்த நோரோ வைரஸும். இந்த நோரோ வைரஸ் பெரும்பாலும் கழிவு நீர் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருருக்குப் பரவுகிறது. சுத்தமில்லா நீரினாலும், உணவினாலும் செய்யப்படும் உணவுப் பொருட்கள் மூலமாக நோரோ வைரஸ் பரவும். நோரோ வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரது மலத்தின் மூலமும், வாந்தியின் மூலமும் நோரோ வைரஸ்கள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
நோரோ வைரஸின் தீவிரத் தன்மை என்ன? எந்த வயதினரை இந்த வைரஸ் அதிகம் தாக்குகிறது?
நோரோ வைரஸ் ஒருவரது வயிற்றுக்குள் சென்ற 12 மணி நேரத்திற்குப் பிறகு அவருக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். முதலில் வயிறு மந்தம் ஏற்படும். உணவு சாப்பிடப் பிடிக்காது. வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும். சிலருக்குக் காய்ச்சல், கால், கைகளில் வலி ஏற்படும்.
நோரோ வைரஸ் தாக்குவதால் ஏற்படும் முக்கியப் பிரச்சினை என்னவென்றால் உடலில் உள்ள நீர்ச்சத்து மெல்ல மெல்ல வெளியேறிவிடும். இதுதான் முக்கியப் பிரச்சினை. மூன்று நாட்களில் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகி விடுவார்கள். ஆனால், அவர்களின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு வாரத்திற்காவது நோரோ வைரஸ் வெளியேறிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால் பிறருக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். எனவே நோரோ வைரஸுக்குத் தொற்றுத் தன்மைக்கான வாய்ப்பு அதிகம்.
நீர்ச்சத்து இவ்வைரஸால் வெளியேறிய பிறகு மீண்டும் நீர்ச்சத்தை எடுக்க உடல் சிரமத்திற்கு உள்ளாகும்போது கிட்னி போன்ற உறுப்புகளில் பிரச்சினை ஏற்படலாம். இதனால் அதன் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். மற்றபடி இவ்வைரஸால் உயிருக்கு நேரடியான பாதிப்பு கிடையாது.
குழந்தைகள், சிறுவர், சிறுமியர், வயதானவர்கள், கிட்னி, இதய பாதிப்பு உள்ளவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதிக்கிறது.
மருத்துவர் ராமலிங்கம்
நோரோ வைரஸுக்கான சிகிச்சை முறைகள் என்ன?
உங்களால் உணவை எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், வலுக்கட்டயமாக நீர்ச்சத்தை உடலுக்குள் செலுத்த முயற்சி செய்ய வேண்டும். காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை நாம் சிறிய இடைவெளியில் குடிப்பது நல்லது. நமது உடலிருந்து சிறுநீர் அதிக அளவில் வெளியேறும்படி நாம் தண்ணீரை அதிகமாகக் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து, நான்கு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீர் ஆகாரம் என்பது தண்ணீர் மட்டும் மல்ல கஞ்சி, இளநீர், மோராகவும் குடிக்கலாம்.
இத்துடன் மருந்துவர்கள் பரிந்துரைக்கும் ஓஆர்எஸ்ஸை அருந்துவதன் மூலம், நமது உடலிருந்து வெளியேறிய நல்ல உப்பு ஈடுசெய்யப்படும். இதன் மூலம் நமக்கு சக்தி கிடைக்கும். சோர்வு நீங்கும். நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் நீர்ச்சத்தைதான் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சிலர் என்ன கொடுத்தாலும் வாந்தியாக அதனை வெளியேற்றிவிடுவார்கள். அவர்கள் மருத்துவர்கள் அளிக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது நலம்.
நோரோ வைரஸைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஒன்றுமில்லை. கரோனாவிற்கு என்ன கூறினோம். கை சுத்தம் முக்கியம் என்றுதானே கூறினோம். தினமும் சாப்பிடுவதற்கு முன்னரும், பின்னரும் சோப்பினால் கைகளைக் கழுவிக் கொண்டாலே போதும். நோரோ வைரஸிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அடுத்து கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சமீப ஆண்டுகளாக வைரஸ்களால் ஏற்படும் நோயின் தாக்கமும், பரவும் தன்மையும் அதிகரித்துள்ளது. அதற்கான காரணம் என்ன?
ஒரு காலத்தில் பாக்டீரியாவினால் பரவும் நோய்கள்தான் தீவிரமாக இருந்தன. நாம் ஆன்டிபயாடிக் மருந்து மூலம் பாக்டீரியாக்களைக் கட்டுக்குள் வைத்து இருக்கிறோம். ஆனால், வைரஸ் என்பது நுண்கிருமி. அதற்கென தனியாக உயிர் கிடையாது. அது மனித உடலில் நுழையும்போதுதான் செயல்படும். வைரஸ்கள் ஏதேனும் உயிரைச் சார்ந்துதான் வளரும். பாக்டீரியாக்காள் அவ்வாறு இல்லை. அவை எங்கு இருந்தாலும் வளரும்.
தற்போது வைரஸ்களால் ஏற்படும் நோய் அதிகமாகி இருப்பது ஏன்?
மனிதன் இயற்கையை ஒட்டி வாழாததைத்தான் காரணம் என்று கூறுவேன். இயற்கைக்கு எதிராக நாம் வாழும்போது, பூமியின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் வைரஸ்களின் பெருக்கம் அதிகமாகும்.
கரோனா எவ்வாறு தற்போது மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதோ அவ்வாறு எதிர்காலத்தில் வைரஸால்தான் மனித குலத்திற்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கும். இயற்கைக்கு எதிராகச் செல்லாதிருத்தலும், தடுப்பூசிகள் மூலமே இதற்கு மனித குலம் தீர்வு காண முடியும்.
இவ்வாறு மருத்துவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
தொடர்புக்கு: indumathyg@hindutamil.co.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக