புதன், 24 நவம்பர், 2021

இலங்கை சுய மரியாதை இயக்கத்தின் தோற்றம் - 1 (எழுதாத வரலாறு) - பெ.முத்துலிங்கம்.. நமது மலையகம்

namathumalayagam.com :   மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார்.
அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை.
அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த "எழுதாத வரலாறு" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது.
குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே "நமது மலையகம்" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.


இருபதாம் நூற்றாண்டு மானுடவரலாற்றில் ஓர் திருப்பு முனையாகும். சமூகத்தில் நிலவிய பல்வேறு அநீதிகளுக்கு எதிராக புரட்சிகளையும் எழுச்சிகளையும் பிரசவித்த நுாற்றாண் டு இதுவாகும். அடிமைத்தனத்திற்கு எதிராக, முடியாட்சிக்கெதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக காலனித்துவத்திற் கெதிராக. பாசிசத் திற் கெதிராக இனவாதத்திற்கெதிராக, இராணுவ ஆட்சிக்கெதிராக, அதிகாரத்துவத்திற்கு எதிராக, சாதியத்தியத்திற்கு எதிராக, முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிகளும், எழுச்சிகளும் இந்நூற்றாண்டிலேயே தோன்றின. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய காலனித்துவத்திற்கெதிரான தேசிய விடுதலைப் போராட்டம் இவற்றுள் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். காலனித்துவத்திற்கு எதிரான போராட்டம் தனியே ஏகாதிபத்தியத் திற்கெதிராக மட்டுமல்லாது குறிப்பிட்ட நாடுகளில் காணப்பட்ட ஏனைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தினையும் அதனுடன் இணைத்துக்கொண்டது. |   ஆசியாவைப் பொறுத்தமட்டில் காலனித்துவத்திற் கெதிரான போராட்டத்தில் இந்தியத் துணைக்கண்டம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. காலனித்துவத்திற்கு எதிரான இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திரப் போராட்டம் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 

 

இந்திய துணைக்கண்டத்தின் சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மகாத்மா காந்தி கருதப்பட்ட போதிலும், அது ஓர் கூட்டு முயற்சியேயாகும். பல்வேறு மொழியினைப் பேசும் மக்களைக் கொண்ட துணைக்கண்டமாக இந்தியா இருந்தமையினால் காலனித்துவத்திற்கு எதிரான சுதந்திர வேட்கை குறிப்பிட்ட மொழியினைப் பேசும் மக்கள் மத்தியில் எழுந்ததுடன் அதன் தலைமைகளும் குறிப்பிட்ட மொழியினைப் பேசும் மக்கள் மத்தியில் சுயமாகவே தோன்றியது. இவ்வாறு தோன்றிய தலைமைகளில் கம்யூனிச கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தலைமைகள் ஓர் வர்க்க பேதமற்ற சோசலிச கட்டமைப்பினை உருவாக்குவதை தமது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைந்துக் கொண்டன. இன்னுமொரு பிரிவினர் காலனித்துவத்திற்கு முன்பிருந்து நிலவி வரும் இந்தியாவிற்கே உரித்தான சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை, காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்துக் கொண்டனர். இவ்வாறு சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை வடக்கில் மராத்தி மொழி பேசும் மக்கள் மத்தியில் தோன்றிய டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கார் அவர்களும், தெற்கில் தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் தோன்றிய ஈ. வே. ராமசாமி பெரியார் அவர்களும் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை இணைத்துக் கொண்டனர்.


தமிழ் நாடு ஈரோட்டில் பிரபல வர்த்தகராகவிருந்த வெங்கிடசாமி நாயக்கரின் மகனான ஈ. வெ. ராமசாமி பெரியார் இருபதுகளில் சாதியத்திற்கு எதிராக குரலெழுப்பலானார். எவ்வித உயர்கல்வியும் பெறாத ஈ. வெ. ராமசாமி பெரியார் தமிழ் நாட்டு மக்கள் பிரிவினரில் ஒரு பகுதியினர் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக சுயமாகவே கருத்துக்களை முன்வைத்ததுடன் அவ் வொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதியினைச் சார்ந்த மக்களை அணிதிரட்டலானார் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக மக்களை அணி திரட்டிய திரு ஈ. வெ.ரா. பெரியார் முழு நாட்டையும் ஒடுக்குதலுக்கு உட்படுத்தி வந்த பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் குரலெழுப்பினார். 1920 களில் இந்தியாவிற்கு சுதந்திரம் கோரி அகிம்சை போராட்டத்தை முன்னெடுத்த மகாத்மாகாந்தி, பிரித்தானியருக்கெதிராக ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்தமையினால் சாதியத்திற்கெதிரான போராட்டத்துடன் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்த பெரியார். மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.

மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்ட பெரியார் நாளடைவில் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டிருந்த தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று பிரித்தானியருக்கு எதிரான ஒத்துழையாமை போராட்டத்தினை முன் னெடுக் கலான ார். எனினும் தமது சுய போராட்டமான சாதிக்கொடுமைக்கெதிரான போராட்டத்தினை கைவிடவில்லை. மாறாக இவ்விரு போராட்டத்தையும் முன்னெடுத்ததுடன் சாதிக்கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கலானார். இந்திய, தேசிய காங் கிரஸ் தலைமை பல் வேறு உயர் சாதியினரைக் கொண்டமைந்திருந்ததுடன் சாதிக்கொடுமைக்கெதிரான போராட்டத்தை பிரதான போராட்டமாக கொண்டிருக்கவில்லை. மாறாக சாதிக் கொடுமைக் கெதிராக அதன் தலைவர்கள் அவ்வப்போது அனுதாபர்தியில் இப்பிரச்சினை தொடர்பாக உரையாற்றிய போதும் நடை முறையில் பாரிய செயற்பாட்டில் ஈடுபடவில்லை. இதே நிலைப்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் கிளையும் கொண்டிருந்தது. தமிழ் நாட்டு காங்கிரஸில் இணைந்து செயற்பட்ட பெரியார் இந்நிலைப்பாட்டினை எதிர்க்கலானார். இதன் காரணமாக தமிழ் நாடு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் பெரியாருக்கும் இடையில் முரண் பாடு உருவாகியது. இவ்வாறான முரண் பாடு உருவாகிய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களைப் பகிஷ்கரிக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கைக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் தமிழ்ப் பள்ளிக்கூடத்தை நடாத்தி - வந்ததுடன் அப்பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சாதிரீதியாக பிரிக்கப்பட்டு உணவளிக்கப்பட்டனர்.

சாதிரீதியாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு உணவளிக்கப்பட்டு வருவதை கண்ணுற்ற - பெரியார் அவ்வாறான செயற்பாட்டினை குறிப்பிட்ட காங்கிரஸ் உறுப்பினர் கைவிட வேண்டுமெனக் கோரினார். குறிப்பிட்ட காங்கிரஸ் உறுப்பினரும் ஏனைய காங்கிரஸ் உறுப்பினர்களும் இக்கோரிக்கையை மறுத்ததுடன் பெரியார் அவர்களும் இக் கோரிக் கையில் - விடாப் பிடியான நிலைப் பாட்டினைக் கடைப்பிடிக்கலானார். இந்நெருக்கடியைத் தீர்க்க பல சமரச முயற்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும் அவையனைத்தும் பயனளிக்காது விட்டதுடன் ஈற்றில் மகாத்மாகாந்தி சென்னை வந்து சமரச முயற்சியில் ஈடுபடலானார். மகாத்மா காந்தி அவர்களது சமரச முயற்சியும் தோல்வியுற்றதுடன் ஈற்றில் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸிலிருந்து விலகலானார்.

ஆங்கிலப் பள்ளிகளைப் பகிஷ்கரித்து தேசிய பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டும் என்ற காந்திஜியின் திட்டத்தை அனுசரித்து வ.வே.சு. அய்யர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன் மாதேவியில் "பாரத் வாஜா ஆசிரமம்" என்ற பெயரில் ஒரு தேசியப் பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஆசிரமம் தேசிய இயக்கத்தின் ஆதரவைப் பெற்றது. அன்று தமிழ் நாட்டிலிருந்த வர்ணாசிரம பிரிவினையின்படி அந்த பள்ளிக்கூடத்திலும் பிராமணப் பிள்ளைகளுக்குத் தனியான இடத்திலும் மற்ற பிள்ளைகளுக்கு வேறொரு இடத்திலும் உணவளிக்கப்பட்டு வந்தது. இதைப்பற்றிய தகவல் ஈ.வெ.ராவுக்கு எட்டியது. அவரும் சேலம் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவும் சேரன் மாதேவிக்குச் சென்று இந்தச் செய்தி உண்மை என்பதைக் கண்டறிந்தனர். பெரியாருக்கு இதைக்கண்டு ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டது. காங்கிரஸ் கமிட்டிக்குள் இதை எதிர்த்து இந்தமுறை கைவிடப்பட வேண்டும் என்று கிளர்ச்சி நடாத்தினார். சமரசம் செய் வதற்கு காந்திஜி சென் னைக் கு வந் தார். எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டில் சமரசப் பேச்சு வார்த்தை மூன்று நாட்கள் நடைபெற்றன. காந்திஜி ஒரு சமரச யோசனையை சொன்னார். அதாவது இப் பொழுது அந் த தேசியப் பள்ளியில் இருக் கும் மாணவர்களுக்கு தனித்தனியே உணவு அளிப்பது நீடிக்கட்டும். இனி புதிதாகச் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒரே பந்தியில் உணவு அளிக்கப்படட்டும். இதுவே காந்திஜி கூறிய சமரச யோசனை இந்த யோசனையை ஈ வெ ரா நிராகரித்தார் (1) தொடர்ந்து இக்கிளர்ச்சியை காங்கிரஸ் இயக்கத்திற்குள் நடத்தினார். சம பந்தி போஜனம் வேண்டும் என்ற கோஷத்தைக் கிளப்பினார். உடனே அதை காஞ்சிபுரம் மாநாட்டில் பெரிய பிரச்சினையாக கிளப்பினார். ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற தலைவர்கள் அந்த முறை ஒரு தனியார் நடத்தும் பள்ளிக்கூடத்தில் இருப்பதை காங்கிரஸ் தடுக்க முடியாது என்று வாதாடினர். பெரியார் விடவில்லை . அப்படியானால் இது ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸ் இயக்கத்தின் முப் பகிஷ் காரத் தின் ஒன்றாகிய ஆங்கிலக் கல்வி நிலையங்களை பகிஷ்கரிக்கும் திட்டத்தை அமுலாக்குவது என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள். இதை வெறும் ஒரு தனியார் நடத்தும் பள்ளி என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த அநீதியான முறை அமுலில் இருக்கும் இந்தப்பள்ளிக்கு காங்கிரஸ் இயக்கத்தின் தார்மீக ஆதரவு கிடையாது என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல ஆட்சேபனைகளுக்கிடையே ( கூச்சல்காரர்களை, தலைமை வகித்த திரு. வி. கல்யாண சுந்தரமுதலியார் சமாதானப்படுத்தி அமைதியை நிலைநாட்டிய பிறகு), பலமாக வாதாடிவற்புறுத்தினார். அந்த யோசனையும் மாநாட்டில் நிராகரிக்கப்பட்ட பிறகுதான் பெரியார் அன்று மாலை (அல்லது மறுநாள் மாலை) ஒரு பொதுக்கூட்டம் போட்டு “சுயமரியாதை” இயக்கத்தை துவக்கினார். அந்த இயக்கத் திற்கு அவர் கொடுத்த பெயரிலிருந்தே இது தெளிவாகும். (2)

காங்கிரஸ் காரர்களுடன் முரண்ப் பட்டு 1926ல் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஈ. வெ.ரா. பெரியார் சாதி ஒழிப்பு போராட்டத்தை தமிழகத்தில் வேகமாக முன்னெடுக்கலானார். அரச துறை உட்பட இந்தியாவின் சகல கட்டமைப்புக்களிலும் பிராமணர் (பார்ப்பனர்) எனக் கூறப்படும் சாதியினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.

பிரித்தானியர்களினால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டமைப்புக்களிலும், பிரித்தானியர்களின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வந்த பிராமணப் பிரிவினர் சாதிரீதியான பாகுபாட்டினை நிர்வாகத்துறையிலும் கடைப்பிடித்து வரலாயினர். பிரித்தானியரின் வருகைக்குப் பின் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, குறிப்பாக கல்வித்துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக, பிற்படுத்தப்பட்டோர் எனக் கூறப்படும் சாதியினர் மத்தியிலும், தாழ்த்தப் பட்டோர் எனக் கூறப் படும் சாதியினர் மத்தியிலும் இக்காலகட்டத்தில் கற்றோர் தோன்றலாயினர். பிராமணர் எனக் கூறப்படுவோரின் ஆதிக்கம் காரணமாக இக்கற்ற பிரிவினருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இப்பிரிவினர் மத்தியில் எதிர்ப்புணர்வு தழைத்தோங்கியது. பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எனக் கூறப்படும் பிரிவினர்கள் சமூகத்தின் உயர் கட்டமைப்புக்களில் சமஉரிமையை கோரக்கூடிய நிலைமையினை எய்தியிருந்தமையினால் பெரியாரின் சுய மரியாதை இயக்கம் இவர்கள் மத்தியில் வேரூன்றலாயிற்று. சமூகத்தில் பெரும்பான்மையினராகக் காணப்படும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும், தாழ்த்தப்பட்ட பிரிவினரும் பார்க்கும் இடமெல்லாம் பார்ப்பனர் களின் ஆதிக்கம் இருந்தமையினால் பார்ப்பனர்களுக்கெதிரான பெரியாரின் போராட்டம் பலம் வாய்ந்ததாக அமைந்தது. பாம்பையும், பார்ப்பனனையும் ஒன்றாகக் கண்டால் முதலில் பார்ப்பனனை அடித்துக்கொல் எனும் சுலோகத்தை பெரியார் முன்வைத்தார் எனில், பிராமணர்களின் ஆதிக்கம் எவ்வாறானதாக இருந்திருக்கும் என்பதை அடையாளம் காணலாம். எவ்வாறாயினும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இக்காலகட்டத்தில் வளரும் அறிவுஜீவிகளை தம்பால் ஈர்த்துக் கொண்ட போதிலும் நாளடைவில் வளர்ச்சியுறும் நிலைமைககேற்ப நெகிழ்வுத்தன்மைகளை மேற்கொள்ளாமையினால் வளர்ச்சியுற்ற அறிவுஜீவிகளான ப.ஜீவானந்தம் போன்றோர் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் தமிழகத்தில் சுதந்திரத்துக்குப் பின்னும் சாதி ஒடுக்கு முறை தொடர்ந்தமையினால் சமூகத்தில் சாதி ஒடுக்குமுறைக்குட்பட்ட பிரிவினர் இவ்வியக்கத்தின் கீழ் அணிதிரண்டதுடன் தமிழகத்தில் தோன்றிய ஏனைய கட்சிகளைப் போலல்லாது இவ்வியக்கத்தின் பால் தமிழகத்தை விட்டகன்று ஏனைய நாடுகளில் குடியேறிய தமிழர்களும் ஈர்க்கப்பட்டனர்.

இந்தியாவை ஆண்ட பிரித்தானியர் தமது ஏனைய காலனிகளில் மேற்கொண்ட விவசாயத் தொழிற்துறைக்குத் தேவையான தொழிலாளர் பட்டாளத்தை இந்தியாவிலிருந்தே கொண்டு சென்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தையும் மேற்கு வங்காளத்தையும் சார்ந்தோர்களாக இருந்தனர். இவ்விரு பிரதேசங்களிலும் காணப்பட்ட வறுமை, சாதி ஒடுக்கு முறை மற்றும் தொழிலாளர் பட்டாளத்தை கொண்டு செல்வதற்கான கப்பல் போக்கு வரத்து வசதியை கொண்டிருந்தமை இதற்கான பிரதான காரணங்களாக அமைந்தன. தமிழகத்தைச் சார்ந்திருந்தோர் இலங்கை, மலேசியா, மொரீசியஸ், பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் முறையே இலங்கையிலும் மலேசியாவிலும் மேற்கொள்ளப்பட்ட கோப்பி, தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப் பட்டவர்களில் தொண்ணூறு சதவீதமானோர் சாதிரீதியாக தாழ்த்தப்பட்டோர் எனக் கூறப்படும் பிரிவினைச் சார்ந்தோராக இருந்தனர். சாதிரீதியாக பிற்படுத்தப்பட்டோர் எனக் கூறப்படும் பிரிவினர் ஏனைய பத்து வீதத்தினை பிரதிநிதித்துவப் படுத்தியதுடன் மேற்கூறப் பட்ட தொண்ணுாறு சதவீதத்தினரை அழைத்துவரும் பணியினை மேற்கொண்டவர்களாவர்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் 1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானியரிடம் வீழ்ச்சியுற்றதுடன் முழு இலங்கையும் பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கலாயிற்று. இதற்கு முன்னர் இலங்கையில் கரையோரப்பகுதியை ஆட்சிசெய்த பிரித்தானியர் கரையோரப் பகுதிகளைச் சார்ந்த தாழ்நிலப்பிரதேசத்தில் கறுவாப்பயிர்ச் செய்கையை மேற்கொண்டு ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். முழு இலங்கையையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்த பிரித்தானியர் மலைநாட்டுப்பகுதி கோப்பிப்பயிர் செய்கையை மேற்கொள்ளக்கூடிய சுவாத்தியத்தைக் கொண்டிருந்தமையினால் 1820களில் கண்டிப் பகுதியில் கோப்பிப்பயிர் செய்கையை மேற்கொண்டனர். இக்கோப்பிப்பயிர்ச்செய்கையில் ஈடுபட சுதேச சிங்கள மக்கள் மறுத்தமையினால் இத்தோட்டத்துறையில் வேலை செய்வதற்கான கூலியாட்களைத் தேடுவதற்கான முயற்சியில் பிரித்தானியர் ஈடுபட்டனர்.


சீனாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டதுடன் இது பொருத்தமற்றதாகவும் செலவிற்குரியதாகவும் இருந்தமையினால் கைவிடப்பட்டது. (3) இதனால் தோட்டத்துறை வறுமைக்குட்பட்ட மற்றும் பஞ்சம் கூர்மையடைந்த தென்னிந்தியாவை நோக்கியது. நிலமற்ற விவசாயிகள் தமது வாழ்வுக்காக (நிலைத்தல்) நிலச்சுவாந்தரின் தயவின்பால் தங்கியிருக்க நேர்ந்தது. இதனால் சுபீட்சத்தை எதிர்பார்த்த இப்பிரிவினர் தமது உடலையும் உயிரையும் பாதுகாத்துக் கொள் வதற்காக எந்தவொரு துன்பத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தனர். (4) இவ்வாறு வறுமைக்கும் நிலவுடைமையின் ஏனைய ஒடுக்குமுறைகளுக் குட் பட்டிருந்த பிரிவினரே இலங்கை யின் கோப்பித் தோட்டத்தில் வேலை செய்ய முன் வந்தனர். முதலாவது ஆட்சேர்ப்பு தமிழ் பகுதிகளான தின்னவேலி (திருநெல்வேலி), மதுரா (மதுரை), டெஞ்சூர் (தஞ்சாவூர்) போன்ற மாவட்டங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டதுடன் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட பிரிவினராவர். (5) இவர்கள் இராமநாதபுரத்திலிருந்தும் இதேவேளை, புதுக்கோட்டையிலிருந்தும் கொண்டுவரப்பட்டனர். இக்கோப்பிப் பயிர்ச் செய்கை அறிமுகத்துடன் இலங்கையில் தோன்றிய துணை சேவைத் துறைகளான பாதைகள் உருவாக்கம். இரும்புப் பாதை உருவாக்கம், புகையிரத சேவை, துறைமுகம் போன்றவற்றிற்கும் இப்பகுதியினைச் சார்ந்த தமிழ், மலையாள மக்களே கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கோப்பிப்பயிர்ச் செய்கையில் ஈடுபட வந்தவர்கள் கோப்பி அறுவடைக்காலம் முடிந்தவுடன் தாம் சம்பாதித்த செல்வத்துடன் தமது தாயகத்திற்கு திரும்புவதை வழமையாகக் கொண்டிருந்தனர். ( ஆயினும் கோப்பிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட வந்த தொழிலாளர்களில் ஒரு சிறு பிரிவினர் இங்கு நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.)

1861ல் கோப்பிப்பயிர்ச் செய்கை வீழ்ச்சியுடன் உருவாக்கப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தேயிலை அறிமுகத்துடன் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களின் தொகை அதிகரித்ததுடன் நிரந்தரமாகத் தங்குவோரின் தொகையும் அதிகரித்தது. இவ்வாறு கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டவர்கள் தமிழ் நாட்டில் சாதிரீதியாக குடியிருந்தது போல் தோட்டங்களிலும் குடியமர்த்தப்பட்டனர். 1871ல் தோட்டங்களில் நிலவிய சுகாதார சீர்கேடுகள் காரணமாக தொழிலாளர் மத்தியில் தொற்று நோய்கள் பரவியதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதைக் கண்டித்து இந்திய அரசியல்வாதிகள் குரலெழுப்பினர். இதனால் பிரித்தானிய அரசு இத்தொழிலாளர்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மெடிக்கல் வோன்ட் ஒர்டினன்ஸ்(Medical Wants Ordinance) எனும் சட்டத்தை கொண்டுவந்தது. இச் சட்டத்தினை கொண்டு வருவதற்காக தோட்டத்துறை தகவல் திரட்டல் ஒன்றை மேற்கொண்டது. இத்தகவல் திரட்டலை சமர்ப்பித்த திரு. வில்லியம் கிளார்க் கீழ்க்காணும் சாதி விகிதாசாரத்தில் இந்தியப் தோட்டத் தொழிலாளர்கள் இருப்பதாக சமர்ப்பித்தார்.

இவ்வறிக்கையில் முறையே பறையர் -(தா) -30% பள்ளர் - (தா) 26%, சக்கிலியர்-(தா) 16%, அகம்படியர்- (பி) 05%, கள்ளர் - (பி) 05%, மொட்டை வேளாளர் (உ) 3%, ரெட்டியார் (ம) 03%, இடையர் (பி) 02%, மறவர்(பி) 02%, புளுக்கர் (ம) 1 1/2%, ஆசாரி (ம) 1%, பித்தளை (பி). கம்மளாளர் (ம), சிற்பி (ம), சாணர் 1% (பி), வெள்ளாளர், (உ) 1/2%, செட்டி (உ) 1/2x, குரும்பர் (உ) 1/2%, வண்ணார் (ம) 1/2%, அம்பட்டையர் (ம) 1/2%, ஈழுவர் (ம) 1/4%, தாட்டியார் (ம)1/2%, நாயக்கர் (உ) 1/4%, கன்னாரஸ் (ம) 1/4%, வள்ளுவர் (ம) 1/2% பன் னார் (ம) 1/4% குரவர்-(தா) 1/4% பற்வர் (ம) 1/4%, - 16 (பி-பிற்படுத்தப்பட்டோர், ம- மத்திமம், உ - உயர்ந்தோர். தா- தாழ்த்தப்பட்டோர், (6) (இதில் மத்திமம் எனக்கூறப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானோர் பிற்படுத்தல் பிரிவினைச் சார்ந்தோராவர் என்பது குறிப்பிடத்தக்கது) இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தோட்டத்துறையுடன் உருவாகிய தொழிற்துறைகள் மற்றும் நகர உருவாக்கத்துடன் தோன்றிய தொழிற 'துறைகளிலும் தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினரே பெரும்பான்மையாக வேலைக்கமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பட்டாளத்தில் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக இருந்த அதேவேளை இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அறியும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இவ்வகையில் தமிழகத்தில் நடக்கும் மாற்றங்களை இலங்கை வாழ் இந்திய தமிழ் மக்கள் அடிக்கடி அறிந்தவாறு இருந்தனர். கொழும்பில் வசித்த இந்தியத் தமிழ் மக்களே இம் மாற்றங்களை முதலில் அறிந் த னர். 1930 களில் இந்திய சுதந்திர போராட்டம் முனைப்படைந்ததுடன் அதன் தாக்கம் இலங்கையையும் பாதித்தது. இலங்கையர் மத்தியில் சுதந்திரத்திற்கான இயக்கம் தோன்றியது. ஆனால் இவ்வியக்கம் இலங்கை வாழ் இந்திய மக்களின் பிரச்சினைகளைப் பற்றி குரலெழுப்பவில்லை . மாறாக ஒருசில அரசியல் வாதிகள் இந்திய வம்சாவளி மக்களுக்கெதிரான கருத்தினை முன்வைத்தனர். இவ்வாறான பின்னணியில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக இந்திய தலைவர்களே குரலெழுப்பினர்.

முப்பதுகள், இலங்கை அரசியல் வரலாற்றினைப் பொறுத்தமட்டில் முக்கிய காலகட்டமாகும். இலங்கை தொழிற்சங்க வரலாற்றின் தந்தையென வர்ணிக்கப்படும் திரு. ஏ. ஈ. குணசிங்ஹ தமது தலைமையின் கீழ் அணிதிரண்ட கொழும்பு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கெதிராக இனவாத நிலைபாட்டை இக்காலகட்டத்திலேயே கடைபிடிக்கலானார். இவருடன் இணைந்து செயலாற்றிய இந்தியரான கோ. நடேச ஐயர் திருஏ.ஈ.குணசிங் ஹவின் இனவாத நிலைப்பாட்டினைக் கண்டித்து திரு. ஏ. ஈ. குணசிங்ஹவின் தொழிற்சங்கத்திலிருந்து வெளியேறி தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடலானார். மறுபுறம் உயர் கல்விக்கென இங்கிலாந்து சென்று இலங்கை திரும்பிய இலங்கையின் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மார்க்ஸிய கருத்துக்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியதும் இக்காலகட்டத்திலேயாகும். இவையணைத்து நடவடிக்கைகளும் கொழும்பிலேயே நடந்தேறின. அதே வேளை இம்முயற்சிகள் அனைத்தும் ஸ்தாபனமயப்பட்ட தொழிற்துறைகளில் ஈடுபட்ட தொழிலாளர்களை அணிதிரட்டும் நடவடிக்கையாகவே அமைந்தன. ஸ்தாபனமயமற்ற தொழிற்றுறைகளான கடைகள், வீட்டு வேலையாளர் மற்றும், சிகையலங்காரம் உள்ளிட்ட ஏனைய பிற தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை இம் முயற்சிகள் சென்றடையவில்லை.

சாதிரீதியாக ஒதுக்கப்பட்டிருந்த இந்திய தமிழ் தொழிலாளர்களே இவ் வாறான தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். சாதி ரீதியாக ஒதுக்கப் பட்டிருந்த அதே வேளை தொழில் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டிருந்த இச்சிற்றுாழிய தொழிலாளர் மத்தியில் ஸ்தாபனரீதியான அணிதிரளல் இக்காலகட்டத்திலேயே உருவாகியது. ஏனைய தொழிற்துறைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போலன்றி இத் துறைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தமிழ் நாட்டிலிருந்து கொழும்பிற்கு வரும் தமிழ் சஞ்சிகைகளையும் நாளிதழ்களையும் பார்க்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தனர். ஒதுக்கப்பட்டிருந்த இத்தொழிலாளர் பிரிவினர் சமூகத்தில் அந்தஸ்து பெறுவதில் அக்கறை காட்டிய வேளையிலே .பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் வேகமாக பரவியதுடன் அவ் வியக்கத்தினால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளும், நாளிதழ்களும் இலங்கையில் விற்பனையாகின.

இச் சஞ்சிகைகளின் மூலம் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை அறிந்து கொண்ட இப்பிரிவினர் சமூகத்தில் தமக்கு அந்தஸ்து தேவையெனில் சுயமரியாதை இயக்கம் போன்ற ஓர் இயக்கத்தின் தேவையினை உணரலாயினர். இவ்வுணர்வுகளின் வெளிப்பாடே இவர்கள் மத்தியில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவாக வழி சமைத்தது. சிற்றூழியத் தொழிலில் ஈடுபட்ட திருவாளர்கள் நா. அ. பழனிநாதன், எஸ்.கே.மாயக்கிருஷ்ணன், எம்.ஏ.அமீது போன்றோரால் இலங்கை சுயமரியாதை இயக்கம் 1932ம் ஆண்டு கொழும்பில் (கொள்ளுபிட்டியில்) ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் சுயமரியாதை இயக்கம் ஆரம் பிக்கப் பட்ட வருடத்திலேயே ஈ.வே.ரா பெரியார் தமது மாஸ்கோ பயணத்தை மேற்கொண்டார். மாஸ்கோ பயணத்தை முடித்து தமிழ் நாடு திரும்பிய போது இலங்கையில் தரித்துச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். பெரியாரின் வருகையை அறிந்த சுயமரியாதை அமைப்பாளர்கள் பெரியாருடனான கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர். 1932ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி இரவு 9.00 மணிக்கு கொள்ளுபிட்டி கீரின் பாத். பாதையிலுள்ள மகளிர் நட்புறவு மண்டபத் தில் இக் கலந்துரையாடல் ஒழுங் கு செய் யப் பட்டிருந் தது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட திரு. பெரியார் சாதியத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான நீண்ட சொற்பொழிவொன்றினை நிகழ்த்தினார்.
"தோழர்களே எனது அபிப்பிராயத்திற்கும் முயற்சிக்கும் குறிப்பிடத்தகுந்த அளவு எதிர்ப்பு இருக்கின்றதை நான் அறியாமலோ அல்லது அறிந்தும் அவைகளை மறைக்க முயலவோ இல்லை. யார் எவ்வளவு எதிர்த்தபோதிலும், யார் எவ்வளவு தூஷித்து விஷமப் பிரச்சாரம் செய்த போதிலும், யார் எவ்வளவு எனது அபிப்பிராயம் வெளியில் பரவாமல் இருக்கும்படி சூழ்ச்சிகள் செய்து மக்களின் கவனத்தை வேறுபக்கம் திருப்பிய போதிலும் உலகத்தில் எல்லா பாகங்களிலும் வேத புராண சரித்திர காலம் முதல் இன்றைய வரையிலும் மனித சமூகமானது கடவுள், ஜாதி, மதம் தேசம், என்னும் பேர்களால் பிளவுபட்டு உயர்ந்தவன். தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, அரசன், பிரஜைகள், அதிகாரி, குடிஜனங்கள், குரு, சிஷ்யன் முதலியனவாகிய பலதன்மையில் விருப்பு வித்தியாசங்களுக்குள்ளாகி மேல் கீழ் தரத்தோடு கட்டுப்பாடான சமுதாயக் கொடுமைகளாலும், அரசாங்கச் சட்டங்களாலும் கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்றது. வருகின்றது, என்பதை மாத்திரம் யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது என உறுதியாய் சொல்லுவேன். இவ்வகுப்பு பேதங்களால் மக்கள் படும் துன்பத்தையும் அனுபவிக்கும் இழிவையும் அல்லும் பகலும் காடுகளிலும் மேடுகளிலும் தொழிற்சாலைகளில் கஷ்டமான வேலைகளைச் செய்தும் வயிறார கஞ்சியில்லாமலும் குடியிருக்க வீடும் மழைக்கும் வெய்யிலுக்கும் நிழலும் இல்லாமல் எத்தனைப்பேர் அவதிப்படுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களது நிலமையை உங்கள் மனதில் உருவகப் படுத்திப்பாருங்கள் ”. (07)
"தோழர்களே இனி இதற்கு அடிப்படையாகவும் அரணாகவும் இருந்து வரும் காரணங்கள் எவை என்பதைச் சற்று நடுநிலமையில் இருந்து சிந்தித்து பார்த்தீர்களானால் இக்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் முற்கூறிய கடவுள், மதம், ஜாதீயம், தேசியம் என்பனவாகிய மயக்க உணர்வை மக்களுக்கு ஏற்றி அதன் பயனாக பெரும்பான்மையான மனித சமூகத்தை மடைமையாக்கி ஏய்த்து சோம்பேரிகளாய் இருந்து கொண்டு சுகம் அனுபவித்து வரும் ஒரு சிறு கூட்ட மக்களின் சூழ்ச்சியே ஒழிய வேறில்லை என்பதைத் தெள்ளத்தெளிய உணர்வீர்கள்” (08) பெரியாரின் இவ் வுரை சாதியத் தினால் பாதிக் கப் பட்டிருந்த பிரிவினரை உற்சாகப்படுத்தியது.

பெரியாரின் வருகைக்குப் பின் சீர்திருத்தக் கருத்துக்களை பிரச்சாரம் செய்த சுயமரியாதை இயக்கத்தினர் தமது நடவடிக்கைகளை கொழும்பு வாழ் சிற்றூழியர்கள் மத்தியிலேயே மேற்கொண்டனர். பெரியாரின் கருத்துக்களைத் தாங்கிவந்த சுயமரியாதை இயக்க பத்திரிகைகளான "குடியரசு ' "விடுதலை" என்பன இவர்களது ஆசானாக அமைந்தன. தமிழக * சுயமரியாதை' இயக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை சுயமரியாதை இயக்கம் மேற்கொண்டது. 1937ல் சென்னை மாநில ஆட்சியை கைப்பற்றிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக கிளையினர் ஹிந்தி மொழியை பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கும் தீர்மானத்தை மேற்கொண்டனர். முதலமைச்சராக இருந்த சீ.ராஜாஜியின் இம்முயற்சியினை பெரியார் கடுமையாக எதிர்க்கலானார். ஹிந்தி மறியல் போராட்டங்களையும் எதிர்ப்புக் கூட்டங்களையும் சுய மரியாதை இயக்கம் நடாத்தியது. இதேவேளை இலங்கை சுயமரியாதை இயக்கத்தினர் ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களை சிறிய அளவில் நடாத்தியதுடன் இவர்களது செய்திகள் தமிழக பத்திரிகைகளான "விடுதலை" "குடியரசு" என்பவற்றில் வெளிவரலாயின.

தமிழக சுயமரியாதை கழகத்தின் நடவடிக்கைகளை எவ்வித மாற்றமுமின்றி அவ்வாறே. இலங்கை சுயமரியாதை இயக்கத்தினர் பின்பற்றிய வேளை இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வாழும் மலையகத்தில் (தோட்டங்களில்) பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 1931ல் ஏ.ஈ குணசிங்ஹவிடமிருந்து பிரிந்த திரு. கோ . நடேசய்யர் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டார். இவரது முயற்சி 1935ல் ஸ் தம் பித நிலையை அடைந் தது. இச்சந்தர்ப்பத்திலேயே இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான இலங்கை சமசமாஜக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதுடன் இக்கட்சியினர் மலையகத் தொழிலாளர்களை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டனர். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் எனும் பெயரில் தொழிற்சங்கத்தை உருவாக்கி செயற்பட்ட இப்பிரிவினர் 1938 முதல் 1939 வரையிலான ஒருவருட காலத்திற்குள் பல தொழிற்சங்கப் போராட்டங்களை மேற்கொண்டனர். 1939 டிசெம்பரில் நடந்த முல்லோயாப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வரலாற்றில் நடந்த முதலாவது தொழிற்சங்கப் போராட்டமான முல்லோயாப் போராட்டத்தினை வழிநடத்திய சமசமாஜ கட்சியினர் மலையக மக்களை அணி திரட்டுவதற்காக இந்திய இடதுசாரி தலைவர்களை இலங்கைக்கு வரவழைத்தனர். இவ்வகையில் இந்திய சோசலிசக் கட்சியைச் சார்ந்த திருமதி. கமலாதேவி சட்டோபாத்யாவை மலையகமெங்கும் கொண்டு சென்றனர்.

இதேவேளை 1939ல் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வந்த திரு. ஜவஹர்லால் நேரு இலங்கை வாழ் இந்திய சமூகத்தினரின் நிலமையைக் கருத்திற்கொண்டு தம்மை சந்தித்தவர்களிடம் இந்திய சமுதாயத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்பொன்றின் தேவையை வழியுறுத்தினார். இதன் பிரதிபலனாக இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகியதுடன் நாளடைவில் இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயரின் கீழ் இவ்வியக்கம் மலையகத் தோட்டப் பகுதிகளிலும் காலடி எடுத்து வைத்தது.

இவ்வாறான வளர்ச்சிகளுக்கு மத்தியில் இவ்வனைத்து அமைப்புகளுக்கும் முன்பதாக தோன்றிய ' சுயமரியாதை இயக்கம் தம்மை கொழும் புக்குள்ளேயே மையப்படுத்திக் கொண்டதுடன் தமிழக சுயமரியாதை இயக்கத்தின் மாற்றங்களை அப்படியே ஏற்றுச் செயற்பட்டது. 1944ல் தமிழக ஜஸ்டிஸ் கட்சியுடன் கூட்டிணைந்து சுயமரியாதை இயக்கத்தினர் பெரியாரின் ஆலோசனையின் பேரில் சுயமரியாதை இயக்கத்திற்கு திராவிடக் கழகம் என பெயரிட்டு செயற்பட்டனர். இதனைப் பின்பற்றிய இலங்கை சுயமரியாதைக் கழகத்தினர் தமது அமைப்பின் பெயரையும் இலங்கை திராவிடக் கழகம் என பெயர் மாற்றினர்.

திராவிடக் கழகமாகப் பிரகடனப்படுத்திய தமிழக ' சுயமரியாதை இயக்கத்தினர் 1948 ஜூலை முதலாம் திகதியை திராவிடப் பிரிவினை நாளாக அனுஷ்டிக் கும் படி தமிழக மக்களைக் கோரினர். இக்காலக்கட்டத்தில் இலங்கை சுயமரியாதை இயக்கத்தினர் தமது அமைப்பின் பெயரை திராவிட கழகமாக மாற்றியதாக பிரகடனப்படுத்தாத போதிலும் அதன் தலைவராக இருந்த காத்தமுத்து இளஞ்செழியன் இலங்கை திராவிடக் கழகம் என்ற பெயரில் தமிழக திராவிடக் கழகத்தின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் படி இலங்கை இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

01.07.1948ல் திராவிட நாடு பிரிவினை நாள் தமிழகம் எங்கும் கொண்டாடும்படி மத்திய திராவிடக் கழகத் தலைவர் த.பொ, வேதாசலம் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பதால் இலங்கை வாழ் மக்களாகிய நாமும் திராவிட நாடு பிரிவினையை ஆதரிக்கிறோம் என்பதை அரசியலாளருக்கு எடுத்துக்காட்டுமுகமாகதான் அன்றைய தினத்தில் கருப்புடை அணிந்து தங்களில்லங்களில் கருப்புக் கொடி உயர்த்தி தங்களாளியன்றளவு கழகத்திற்கு அங்கத்தினர்களை சேர்த்து கூட்டங்களை ஆடம்பரமில்லாத முறையில் கூடி கொள்கைகளையும் இலட்சியத்தையும் விளக்கப்பேசி தீர்மானங்களை நிறைவேற்றி எல்லா பத்திரிகைகளுக்கும் அரசியலாளர்களுக்கும் நமது தலைவர் பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்கட்கும் அனுப்பி வைக்குமாறு இ. தி. க. தலைவர் காத்தமுத்து இளஞ்செழியன் அறிவித்தார். (09)

திராவிடக் கழகமென உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்த முதலே அப்பெயரில் அறிக்கை விடுத்த சுயமரியாதை இயக்கத்தினர் 11.07.1948 அன்று தமிழக தி.க. உறுப்பினர் கோபி செட்டிபாளயம் p.என். இராசு, அவர்களை வரவழைத்து கொழும்பில் நடத்திய கூட்டத்தின் போது இப்பெயர் மாற்றத்தினை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தினர். இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய திரு - ஜீ. என். இராசு அவர்கள் இலங்கை திராவிட கழகத்தை திறந்துவைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தமைக்கு நான் பெருமையடைகிறேன், உலகத்திலே உள்ள ஒவ்வொரு இனமும் தம் இன முன்னேற்றத்திற்கு தனி ஆட்சி கோரி கிளர்ச்சி செய்கின்றனர். உலகில் எங்கு நோக்கினும் இன எழுச்சியும் கிளர்ச்சியுமே காணப்படுகின்றது. அவ்வவ்வினத்திற்கு அவ்வினத்தின் ஆட்சியின் மூலமே நன்மையும் பாதுகாப்பும் செய்ய முடியும். திராவிட நாடு தனி அரசு கோருவதை எந்த அறிஞர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் மறுக்க முடியாது. பூகோளரீதியாகப் பார்த்தாலும் சரித்திரபூர்வமாகப் பார்த்தாலும் சட்ட நுணுக்கங்களை கொண்டு பார்த்தாலும் திராவிட நாடு தனிநாடாக கோருவதை மறுக்க முடியுமா? பொருளாதார வளத்திலே திராவிட நாட்டை விடமிகச்சிறிய நாடுகள் தனி ஆட்சி செய்யவில்லையா?. நமது இலங்கைத் தீவு 65 இலட்சம் மக்களைக் கொண்டது. நிலப்பரப்பிலே கோயம்புத்தூர் ஜில்லாவுக்கு சமதையானது. இந்த நாடு தனி ஆட்சி செய்வதில் என்ன தீங்குகள் நேரிட்டு விட்டது. (10) எனக் கூறியதுடன் விழாவில் கலந்து கொண் டோரைக் கொண்டு புதிய நிர்வாகச் சபையொன் றும் உருவாக்கப்பட்டது. முறையே திரு. காத்தமுத்து இளஞ்செழியன் அவர்கள் தலைவராகவும் திருவாளர்கள் எம். ஜி. பிரகாசம் எஸ். கே . சுந்தரராஜன் என்போர் உப தலைவர்களாகவும் திரு. ஏ. எம் அந்தோணிமுத்து பொதுச் செயலாளராகவும் திருவாளர்கள் ஏ.கே. ஜமால்தீன், எஸ். வி.ஜெகநாதன் என்போர் இணைச் செயலாளர்களாகவும் , திரு. கே கந்தசாமி அவர்கள் பொருளாலராகவும் மற்றும் திருவாளர்கள் கு.யா திராவிடக்கழல் , எஸ் . வி. பாலக்கணபதி, ஏ. இளஞ்செழியன், எஸ் . கே. மாயக்கிருஸ்ணன் ஜே. எம். அருமை நாயகம், ரி. எம். ஏ அமீது, வி. பேதுரு, எம். . எஸ் பெருமாள், ஜே.பி. எம். ஜமால், மொகைதீன், இ. பா. க மாணிக்கம், எஸ். முனியசாமி, எஸ். சூசை, எஸ் கே. ராஜரத்தினம், ஜோக்கின், பி. எம் மாணிக்கம், என்போர் செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

கோபி செட்டிபாளையம் திரு. ஜீ.என். இராசுவின் உரை இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மட்டுமல்லாது இலங்கையைத் தாயகமாகக் கொண்ட, தமிழர்கள் மத்தியிலும் தமிழ் தேசிய உணர்வினைத் தோற்றுவித்தது. சென்னை முதலமைச்சர் திரு. சி. ராஜாஜி 1948ல் ஹிந்தியை அறிமுகப்படுத்த முனைந்தமைக்கு எதிராக இலங்கையில் பல எதிர்ப்புக்கூட்டங்கள் நடாத்தப்பட்டதுடன் இக்கூட்டங்களில் பங்கு கொண்டோரின் தரத்திலும் குணவியல்ரீதியான மாற்றம் தோன்றியது. ஹிந்தி திணிப் பினை எதிர்ப் பதற்கான நிர்வாகக்குழுவொன்றினை உருவாக்கும் நோக்கில் இலங்கை திராவிடக் கழகம் 31.07.1948 அன்று கொழும்பு மெயின் வீதி இல. 200க் கொண்ட இல்லத்தில் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த மறைந்த திரு. அ அமிர்தலிங்கம் கலந்து கொண்டதுடன் ஹிந்தி எதிர்ப்பு கூட்டமொன்றினை ஒழுங்கு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். (ஆயினும் இவர் இ. தி. க. வின் உறுப்பினராக இருக்கவில்லை. திரு. அ. அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினர் 1948.08.22 திகதியன்று ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை கொழும்பில் நடாத்தினர். அவ் வேளையில கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராகவிருந்த மறைந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் உட்பட பல அறிவு ஜீவிகள் உரையாற்றியுள்ளமையிலிருந்து தமிழக திராவிடக் கழகம் விதைத்த தமிழ் தேசிய வாதம் இலங்கையில் வேரூன்றியமையினைக் காணலாம்.

சான்றாதாரங்கள்

  1. பி. இராமமூர்த்தி, திராவிட மாயையா? ஆரிய மாயையா? 
  2. விடுதலைப்போரும் திராவிட இயக்கமும் - ப.137
  3. மேலுள்ளதே - ப.138
  4. Sundaram Lanka Article on Indian Labour in Ceylon,  International Lobour Review XXIII No. 3 Geneva 1921, PP 369-387 de Silva K. M. P. 257- ஜீ ஏ . ஞானமுத்துவின் Education and the Indian plantation worker in Sri Lanka என்ற நுாலில் மேற்கோள் காட்டப்பட்டது. ப. 3 
  5. G. A. Gnamuthu-Education and the Indian plantation  workers in Sri Lanka 4-3 
  6. Ibid 6. Proceedings of the planter's Association published Annu  ally from 1855 Donovan Moldrich-Bitter Berry Bondage the nine teenth century Coffee workers of Sri Lanka 61001 நுாலில் மேற்கோள் காட்டப்பட்டது  ப.114-15 
  7. ஈ. வெ. ரா. பெரியாரின் இலங்கை பேருரை 
  8. மேலுள்ளதே
  9. விடுதலை  - 29-06-1948
  10. சுதந்திரன் 12-07-1948

கருத்துகள் இல்லை: