சனி, 27 நவம்பர், 2021

கரூர்மாவட்டம் செந்தில் பாலாஜியின் கோட்டையா ? ஜோதிமணி போராட்டம் உணர்த்துவது என்ன?

aramonline.in:  ஜோதிமணி போராட்டம் உணர்த்துவது என்ன?  - சாவித்திரி கண்ணன் :  
எந்த ஒரு எம்.பியானாலும், மக்கள் நலத் திட்டங்களை மாநிலஅரசின் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும்!
மாநில அரசு என்றால், மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்!
ஜோதிமணி அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு சமூக செயல்பாட்டாளர்! கரூர் எம்.பி தொகுதியில் சுமார் 10,000 மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை கேட்டு காத்துள்ளனர். இந்த நிலையில் மாநில அரசால் மட்டுமே இந்த தேவைகளை நிறைவு செய்துவிட முடியாது! ஆகவே, அவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையிடம் விலையில்லாமல் பெறுகின்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கேட்டுத் தர திட்டமிடுகிறார்!


அந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து நடத்தித் தர அவர் மூன்றுமுறை விண்ணப்பித்தும் அவர் இசைவு தர மறுத்ததின் பின்னணியில் மாவட்டத்தின் முக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக தெரிய வருகிறது!

கரூர் மாவட்டத்தில் தன்னை மீறி அணுவும் அசையக் கூடாது என ஒரு அதிகார அரசியலை நடத்தி வருகிறார் செந்தில் பாலாஜி! அவரது அதிகார அரசியலை மீறி அந்த தொகுதிக்கு உட்பட்ட திமுக எம்.பிக்களே மக்கள் பணி செய்ய முடியவில்லை. பாரம்பரியமான கரூர் திமுகவினர் அனைவருமே இன்று ஓரம் கட்டப்பட்டு கரூர் திமுக என்பது செந்தில் பாலாஜி என்ற ஒற்றை அதிகாரத்தின் கீழ் தான் உள்ளது.

மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளை பெற்று முதலமைச்சருக்கு நெருக்கமாக திகழ்பவர் என்ற காரணத்தால் கரூர் மாவட்டத்தின் ஜனநாயகச் சூழலையே அவர் கட்டுப்படுத்தி வருகிறார்! இந்தச் சூழலை கவனத்தில் கொள்ளாமல் இந்த பிரச்சினையை புரிந்து கொள்வது இயலாது.

இது ஒரு ஜனநாயக இயக்கத்திற்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல! ஜோதிமணிக்கு பதில் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர் பதிலேயே அவர் செந்தில் பாலாஜியால் வழி  நடத்தப்படுவது தெரிகிறது.

மாற்றுத்திறனாளின் நலம் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கரூரில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ஒரே நேரத்தில் வழங்கும் விதமாக ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முகாம்களை நடத்துமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் ஒரு பகுதியான தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மூலமாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது…’’ என்கிறார் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்!

மத்திய அரசின் உதவியில் கிடைப்பதை கொண்டு முகாம் நடத்த வேண்டும் என்ற ஜோதி மணியின் கோரிக்கைக்கு பதில் சொல்லாமலே தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் போதுமானது என்பதாக அதை நாசூக்காக நிராகரிக்கிறார் மாவட்ட ஆட்சியர்!

மாநில அரசின் உதவியில் நடைபெறும் முகாம்களில் வெறும் 90 பேருக்கு மட்டுமே உதவ முடிந்துள்ளது. அதுவே நான் மத்திய அரசின் உதவியை கேட்டு பெற்றதின் மூலமாக செயல்படுத்தப்படும் போது ஆயிரக்கணக்கானோர் பயன் பெறுவர் என்பது ஜோதிமணியின் வேண்டுகோள்!

மக்கள் பலன் பெறுவது எல்லாம் இரண்டாம் பட்சம் என்னோட அதிகாரம், என்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்ற தோற்றம் ஆகியவை சிதையக் கூடாது. ஆகவே, அது நடைபெறாமல் தவிர்க்க மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்துள்ளார் அமைச்சர். மாவட்ட ஆட்சியர் நேர்மையாளராகவோ, சுயாதீனமானவராகவோ இருக்கும் பட்சத்தில் செந்தில் பாலாஜியின் நிர்பந்தத்திற்கு பணிய வேண்டியதில்லை! அது இல்லாமல் போனது மட்டுமல்ல, ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எப்படி கைகோர்ப்பார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு உதாரணமாகிவிட்டது!
போராட்டத்தில் ஜோதிமணி,                                                                                          கரூர் மாவட்ட ஆட்சியர்

இந்த நிகழ்வு குறித்த ஜோதிமணி சுட்டிக் காட்டிய ஒரு விஷயம் முக்கியமானது.

”இது கரூர்‌ மாவட்டத்தில்‌ கடினமான வாழ்க்கைச்‌ சூழலில்‌ உழலும்‌ ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களின்‌ பிரச்சினை மட்டுமோ, ஒரு தனிப்பட்ட கரூர்‌ நாடாளுமன்ற உறுப்பினரின்‌ உரிமைப்‌ பிரச்சினை மட்டுமோ அல்ல. ஒன்றிய, மாநில அரசுகளின்‌ நிர்வாகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ தலைமையிலான மாவட்ட நிர்வாகத்தின்‌ எல்லைகள்‌, செயல்பாடுகள்‌, மக்கள்‌ பிரதிநிதிகளின்‌ பொறுப்புகள்‌ என்று அனைத்தையுமே கேள்விக்கு உள்ளாக்கியுள்ள, அரசியல்‌ சாசனம்‌ வரையறுத்துள்ள விதிகளை கேலிக்கூத்தாக்கியுள்ள ஒரு மாபெரும்‌ தவறு!”

ஒரு ஊழல் அதிகாரிக்கு அரசியல்வாதியின் அனுசரணை கிடைத்தால் அவர் எப்படி எல்லாம் ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் பயன்பெறுவதை மனசாட்சி இல்லாமல் தடுக்க முடியும் என்பதை இந்த விவகாரம் பட்டவர்த்தனமாக்கியுள்ளது என்பது மட்டுமல்ல, ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தடைகளை மீறி மக்கள் பணி செய்வது என்பது ஒரு எம்.பிக்கே மிகப் பெரிய சவால் என்பது தான் இந்த நிகழ்வு உணர்த்தும் செய்தியாகும்!  தலைமைச் செயலாளர் இறையன்பு எடுத்துச் சொல்லியும் மாவட்ட ஆட்சியர் பிடிவாதம் காட்டியது சரியல்ல! முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் மாவட்டத் தலைவரை தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். இனியாவது முறைப்படி முகாம் நடக்குமா? என்பதில் தான்  இன்னும் நமக்கு பல புரிதல்கள் கிடைக்கும்!

சாவித்திரி கண்ணன்  -  அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: