ஞாயிறு, 21 நவம்பர், 2021

இஸ்லாமிய கூட்டமைப்பு : வாழ்நாள் சிறைவாசி விடுதலை விவகாரம் ஏமாற்றம் அளிக்கிறது திமுக அரசுக்கு எதிராக தயாராகிறது?

சமுதாயமா? கூட்டணியா? திமுக அரசுக்கு எதிராக போராடத் தயாராகும் இஸ்லாமியக் கூட்டமைப்பு!

மின்னம்பலம் : பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது என்று மமக தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த விடுதலை செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படாத நிலையில், கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 488 திமுகவின் கூட்டணிக் கட்சிகளான முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காரணம், 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது ஏனென்றால், வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/மத, இன ரீதியான மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, “கடந்த காலங்களில் வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் காட்டப்பட்ட பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு கருணையுடன் விடுதலை செய்யும் என்று நம்பியிருந்த வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் மொத்த சமூகத்திற்கும் இந்த அரசாணை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விரக்தியையும் அளித்துள்ளது.

நவம்பர் 15, 2021 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 488 விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஏழு தமிழர்களின் விடுதலையும் கேள்விக்குறியாகியுள்ளது. நடைபெற்ற குற்றத்திற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில் தான் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுகின்றார்கள்.

இப்படி தண்டனை பெற்றவர்களை அவர்கள் சார்ந்த மதங்களுடன் தொடர்புப்படுத்தி வகைப்படுத்துவதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே வகுப்புவாத/மத மோதல்கள் எனக் காரணம் கற்பித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு முன் விடுதலையை மறுத்திருப்பது பெரும் வேதனையை அளித்துள்ளது. மேலும் நீண்ட காலம் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் யாரும் பயங்கரவாத தடைச் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசமைப்பு சட்டத்தின் விதி 161 மாநில அரசுக்கு முன் விடுதலைக்கு நிபந்தனையற்ற உரிமையை அளித்துள்ளது. இந்த விதியை பயன்படுத்தி உடனடியாக தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன் விடுதலை செய்ய புதிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட கருணை உள்ளம் மிகுந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2௦ ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்து முதுகலைப் பட்டங்கள் வரை பெற்று சீரிய முறையில் சீர்திருத்தம் பெற்றுள்ள நிலையில் விடுதலைச் செய்யப்படும் முஸ்லிம் சிறைவாசிகள் இனி எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கின்றேன்” என்று கூறியிருக்கிறார் ஜவாஹிருல்லா.

கோட்டை வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, “மோடியின் கேதார்நாத் நிகழ்ச்சியை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியது, ஆளுநரிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியது என்ற வரிசையில்தான், தமிழக உள்துறையின் இந்த அரசாணையிலும் ஒன்றிய அரசு நிர்வாக அலுவலகங்கள் மூலம் கொடுத்திருக்கும் அழுத்தம் வெளிப்பட்டுள்ளது. இந்த அரசாணை மூலம் இஸ்லாமியர்களையும், தமிழர் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டு கைதானவர்களும் விடுதலையாவது கடினமாகியுள்ளது” என்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 20) மாலை தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் கூட்டம் தலைவர் மௌலானா P.A.காஜா முயீனுத்தீன் பாக்கவீ தலைமையில் சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, தமுமுக மமக துணைத்தலைவர் பி.எஸ்.ஹமீது ஆகியோர் கலந்து கொண்டார்கள்

இக்கூட்டத்தில், நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த சிரமங்களை மிகுந்த கவலையுடன் பேசப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி மறு வரையறையில் செய்யப்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் சமுதாய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கிறார்கள்.

இதே நிலை தொடர்ந்தால், தமிழக அரசு இதில் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் திமுக அரசை எதிர்த்து அனைத்து இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்களைத் தொடங்கவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ‘சமுதாயமா அரசியல் கூட்டணியா என்று வந்தால் நாம் சமுதாயத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று இக்கூட்டத்தில் சிலர் பேசியிருக்கிறார்கள். எனவே திமுக அரசுக்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்பினரின் போராட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம். அதை திமுக அரசு எப்படி கையாளப் போகிறது என்பது எதிர்பார்ப்புக்கு உரியதாக இருக்கிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: