சனி, 27 நவம்பர், 2021

கமல்ஹாசனின் உடல்நிலை .. மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை!

Rayar A  -   Oneindia Tamil :   சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் கமலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
இதனை தனது டுவிட்டரில் உறுதிப்படுத்திய கமல்ஹாசன், ''அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று அவர் கூறி இருந்தார்.


இதனை தொடர்ந்து அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். "கமலுக்கு சுவாச பாதையில் தொற்றும் காய்ச்சலும் உள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் உடல் தொடர்ந்து சீரான நிலையிலேயே உள்ளது" என ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை விடுத்து இருந்தது.

நடிகர் கமல்ஹாசன் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள வேண்டும் எனப் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசனுக்கு போன் செய்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். ''அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இதேபோல் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். மேலும், கமல்ஹாசனின் ரசிகர்களும். மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் அவர் விரைவில் குணமடைய வேண்டி கோவில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ''கமல்ஹாசன் நன்கு தேறி வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது'' என்று மருத்துவமனை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: