Mani Maran : 1967ல் சென்னை போயஸ் தோட்டத்தில் அந்த வீட்டை ஜெயலலிதாவின் தாய் சந்தியா வாங்கியபோது அதன் மதிப்பு 1.32 லட்சம் மட்டுமே. தொடர்ந்து அவ்வப்போது சில ஆயிரங்களில், சிறியளவில் புனரமைக்கப்பட்டு வந்தாலும், 91ல் ’ஜெ’ முதல்வரான பிறகே அக்கம் பக்கத்திலுள்ள நிலங்களையெல்லாம் மிரட்டி வாங்கி, கோடிகளை கொட்டி, 24 ஆயிரம் சதுர அடிகள் பரப்பளவில் மிக பிரமாண்டமாக உருவானது ’வேதா நிலையம்’.
இந்த பங்களாவிற்கு எடப்பாடி அரசு வழங்கிய இழப்பீடு தொகையே 67 கோடிகள். இந்த அடிப்படையில் இதன் உண்மையான மதிப்பு 150 கோடிகளை தொடும். இத்தனை மதிப்புமிக்க பங்களா, ஜெயலலிதாவின் சினிமா சம்பாத்தியத்தில் கட்டப்பட்டதல்ல என்பது ஊரறிந்த உண்மை. ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளை பணத்தில்தான் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் எடப்பாடி அரசு இதனை நினைவிடமாக்கியது பச்சை அயோக்கியத்தனம். அதைவிட கொடுமையானது… இந்த கொள்ளை பங்களாவை ஜெ.தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது.
எப்போதும் ’மயக்கத்திலேயே’ இருக்கும் இவர்களை தனது இறுதிமூச்சு இருக்கும்வரை ’ஜெ’ தனது பக்கத்திலேயே சேர்த்துக்கொள்ளவில்லை. இப்படியிருக்கும்போது இவர்களிடம் ’ஜெ’ சொத்தை, அதுவும் கொள்ளை பணத்தில் உருவான சொத்தை எப்படி ஒப்படைக்க முடியும்?
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ’ஜெ’ முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்ததே. அதை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை? இதுவரையாவது அடிமை ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆட்சிமாறி 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்?
எனவே இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்கி வேதா நிலையம் தொடங்கி, ஹைதராபாத் திராட்சை தோட்டம், பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள், 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இன்னபிற சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாங்கப்பட்ட இந்த சொத்துக்கள், சசி உள்ளிட்ட மன்னார்குடி மாபியா கும்பலிடமோ, தீபா, தீபக் உள்ளிட்ட ’ அரை மயக்க’ கும்பலிடமோ ஒருபோதும் போகக் கூடாது.
தமிழக அரசு இந்த விஷயத்தில் எவ்வளவு கடுமை காட்டினாலும் தகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக