செவ்வாய், 23 நவம்பர், 2021

இலங்கை விவகாரம்: ஆளுநரின் அடுத்தடுத்த முக்கிய சந்திப்புகள்!

இலங்கை விவகாரம்: ஆளுநரின் அடுத்தடுத்த முக்கிய சந்திப்புகள்! 

மின்னம்பலம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (நவம்பர் 23) இலங்கைக்கான இந்தியாவின் ஹை கமிஷனர் கோபால் பாக்லே இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி கோபால் பாக்லேவை இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் இழுவை மீன்பிடி நடவடிக்கைகளால் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை பற்றி புகார்கள் அளித்து இருக்கிறார்கள்.


இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டுக்கு வந்த பாக்லே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்டப் பகுதிகளில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு மீன்வள துறை அதிகாரிகளும் ராமநாதபுரம் கலெக்டரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு தான் இன்று தமிழக ஆளுநரை சந்தித்து இருக்கிறார் இலங்கைக்கான இந்தியாவின் தூதர் பாக்லே.
இந்த சந்திப்புக்கு  சரியாக ஒரு வாரம் முன்னதாக  கடந்த 16 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநரை தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து சென்னையிலுள்ள தென்னிந்தியாவுக்கான இலங்கை தூதரகம் வெளியிட்ட செய்தியில்,  :

”கௌரவ தமிழ்நாட்டு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களை 2021.11.16ஆந் திகதி ராஜ்பவனில் வைத்து தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஷ்வரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

நேர்மறையானதொரு முடிவுக்கு வழிவகுக்கும் வகையில், இலங்கை அகதிகள் மற்றும் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புனர்வாழ்வு முகாம்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளுக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கௌரவ ஆளுநரிடம் பிரதி உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தார்.

ஆளுநர் தனது பதவியின் காரணமாக தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் வேந்தராக இருப்பதன் காரணமாக, கோயம்புத்தூர் மற்றும் இலங்கையில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்வி மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் குறித்து பிரதி உயர்ஸ்தானிகர் மேலும் கலந்துரையாடினார்.

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அபிவிருத்தி நடவடிக்கைகள், நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தொடர்பை அதிகரித்தல் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது மேலும் கலந்துரையாடப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதி முகாம்களில் ஆளுநர் சென்று ஆராய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாரா அல்லது இலங்கை தூதர் சென்று ஆராய வேண்டுகோள் வைத்திருக்கிறாரா என்பது இந்த செய்திக் குறிப்பின் மூலம் விவாதமாகியிருக்கிறது.

கடந்த நவம்பர் 11 ஆம் தேதி டெல்லியில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,  “சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் அல்லது கடலோர மாநிலங்களின் ஆளுநர்கள், எல்லையோர அல்லது கடற்கரையோர கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். மேலும், ஆளுநர்கள் தங்கள் மாநிலங்களில் பணிபுரியும் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாட வேண்டும்.

தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் ஆளுநரின் அமைப்பு முக்கியமானது. நீங்கள் உங்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்தபின், எனது ‘மன் கி பாத்’ உரைக்காக மாநிலத்தில் உள்ள அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செல்லும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமரின் அசைன்மென்ட் படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் இலங்கை அகதி முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்தலாம் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நாளை நவம்பர் 24 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக கன்னியாகுமரி செல்கிறார்.

-ஆரா

கருத்துகள் இல்லை: