புதன், 24 நவம்பர், 2021

கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு.. விவசாய சட்ட நீக்கம்.. நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் 26 மசோதாக்கள்

 Shyamsundar -  Oneindia Tamil :  டெல்லி: கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா ஆகிய மசோதாக்கள் உட்பட 26 மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் உத்தர பிரதேசம், பஞ்சாப் தேர்தல்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கியமானதாக பார்க்கிறது.

இந்த நிலையில் இந்த மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மக்களை கவரும் வகையில் பல முக்கியமான மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் தாக்கல் இருக்கும் 26 மசோதாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் முக்கியமான ஒரு மசோதா விவசாய சட்டங்களை திரும்ப பெறும் மசோதா ஆகும். மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். விவசாய போராட்டங்களை தொடர்ந்து இந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு இந்த சட்டம் குறித்து புரிய வைக்க முடியவில்லை என்பதால் சட்டத்தை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில்தான் இதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை கட்டுப்படுத்தும் மசோதா ( The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021,) கொண்டு வரப்பட உள்ளது.

அதன்படி பல்வேறு தனியார் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்படவும், சில கரன்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் உள்ளது. அதோடு ஆர்பிஐ மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கரன்சி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தற்கான அடிப்படை திட்டத்தை வகுக்கும் வகையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் மொத்தமாக தனியார் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்பட மாட்டாது. இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் சில நிறுவன கரன்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

பிட்காயின் போன்ற கரன்சிகள் விலக்கு பெற வாய்ப்பு உள்ளது. கிரிப்டோகரன்சி குறித்த நாடாளுமன்ற கமிட்டி அமர்வு விவாதத்திற்கு பின்பாக இந்த மசோதா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஜக எம்பி ஜெயந்த் சின்கா தலைமையிலான இந்த அமர்வு ஆலோசனையை மேற்கொண்டது. கடந்த 16ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கிரிப்டோகரன்சிகளை மொத்தமாக தடுக்க முடியாது. அதனால் இதில் ஒழுங்குமுறையை கொண்டு வர வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.

செய்தி சேனல்களில், பல்வேறு இணையதளங்களில் வரும் கிரிப்டோகரன்சி விவாதங்கள், பல பொய்யான செய்திகள், பொய்யான விளம்பரங்கள் காரணமாக அதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த மசோதா வருகிறது. ஏற்கனவே கிரிப்டோகரன்சி குறித்து பிரதமர் மோடி ஆர்பிஐயுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆர்பிஐ அமைப்பும், அதன் கவர்னர் சக்தி காந்தா தாஸும் இது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கி வந்த நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: