ஞாயிறு, 21 நவம்பர், 2021

திருச்சி அருகே எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் வெட்டி கொலை: . ஆடு திருடும் கும்பல் வெறிச்செயல் .. குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் முதல்வர்

 தினமலர் :  திருச்சி அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் ஆடு திருடும் கும்பல் ஒன்றினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனிடையே, அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினை இன்று நவ.,21 அதிகாலை 2 மணியளவில் பைக்கில் சென்று விரட்டியுள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அக்கும்பல் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்ப இடத்திலேயே உயரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


உடல் அடக்கம்
பூமிநாதன் உடல், திருச்சியில் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஏ.டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, அவரது உடலுக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

விரைவில் கைது
திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது பூமிநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார். 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருடர்களை 2 போலீசார் துரத்தி சென்றதில், ஒருவர் வழிமாறி சென்றுள்ளார். அவர் வருவதற்குள் பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

4 தனிப்படைகள்
கொலையாளிகளை பிடிக்க 2 டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆடு திருடர்கள் பட்டியலில் உள்ள 2 பேரின் மொபைல்போன் சிக்னல்கள், கொலை பதிவாகி உள்ளதால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை தேடி புதுக்கோட்டை மற்றும் சிவகங்கைக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

ரூ.1 கோடி நிவாரணம்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரோந்து பணியில் இருந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன். பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி அளிக்கப்படுவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: