மின்னம்பலம் : திமுக எம்.பி ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில் திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜு என்ற ஊழியர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் நான்கு நாட்கள் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 19ஆம் தேதி எம்.பி ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனிடையே இவ்வழக்கை சிபிசிஐடி முறையே விசாரிக்கவில்லை என்றும் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோவிந்தராஜன் மகன் செந்தில்வேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறுவதாகவும், புதிய விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தர் ராஜன் நியமிக்கப்பட உள்ளதாகவும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டார்.
இவ்வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்ற மறுப்பு தெரிவித்தார்.
மேலும் சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தர் ராஜன் விசாரணையைத் தொடரலாம், வழக்கு விசாரணையை சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக