திங்கள், 22 நவம்பர், 2021

சிபிஎம் 17000 ஆயிரம் தலித்துக்களை கொன்றதா? மரிச்ஜாப்பி கம்யூனிஸ்ட் CPI-M அரசின் தலித் இனப்படுகொலை

May be an image of text that says '17000 தலித்துகளைக் கொன்ற CPI-M கட்சி'
May be an image of book and text that says 'மரிச்ஜாப்பி சி.பி.எம். அரசின் தலித் இனப் படுகொலை தமிழில் மரு. இனியன் இளங்கோ'

Vasu Mithra :    மௌனம் என்பது சாவுக்குச் சமம்.
எதுவும் பேசாவிட்டாலும் சாகப்போகிறீர்கள்;
பேசினாலும்  சாகத்தான் போகிறீர்கள்.
எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்.
- தஹார் ஜாவூட்.
பழங்குடிகளுக்கும், தலித்துகளுக்கும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முன்நிற்கும் கட்சியாக, களத்தில் நின்று உழைக்கும் கட்சியாக அறியப்பட்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) CPI-M
13 வருடங்களாக திருமணமே செய்துகொள்ளாது பழங்குடிகளுக்கு நீதி கேட்டுப் போராடிய தோழர் கோவிந்தன் போன்றவர்களையும் நாம் களத்தில் பார்த்துள்ளோம். உத்தபுரம் முதல்கொண்டு எங்கு எது நடந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்காக குரல் எழுப்பும் சிபிஐ-எம் கட்சியின் மீது பயங்கரமான படுகொலைக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து வெளிவந்துள்ள ஒரு நூலை இப்பொழுது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.  


 ‘மரிச்ஜாப்பி சிபிஎம் அரசின் தலித் இனப்படுகொலை”  இந்த நூலை தலித் முரசு- கருப்புப் பிரதிகள் என இரண்டு பதிப்பகங்களும் இணைந்து வெளியிட்டுள்ளது. நூலின் பின்னட்டையில், “நான்காயிரத்து இருநூற்று அய்ம்பது குடும்பங்களின் பனேழாயிரம் தலித்துகள் மேற்கு வங்கத்தை ஆண்ட சி.பி.எம்.அரசால் கொன்றொழிக்கப்பட்டதன் வரலாற்று ஆவணம் இது” என நூலை முன்வைக்கிறது.
நூலின் அறிமுகவுரையில்“மரிச்ஜாப்பியையும் அங்கு வாழ்ந்த தலித் அகதிகளையும் மொத்தமாக அழித்துவிடும் நோக்கத்தோடு முற்றிலுமாக பொருளாதாரத் தடையை அறிவித்தது மேற்கு வங்க அரசு. இதனால் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு, மரிச்ஜாப்பியை சிறைக் கூடமாக்கி சுற்றி வளைத்தது காவல் துறை. ஏறக்குறைய முப்பது காவல் படைகள் மாதக்கணக்கில் இருந்து நாமசூத்திரர்களின் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மீன்பிடித் துறை, உப்பளங்கள் என எல்லாவற்றையும் சிதைத்தன. குடிசைகளைப் பிய்த்தெறிந்து, தண்ணீரும் உணவும் கிடைக்காதவாறு வாழ்வாதாரங்களை நொறுக்கி, தடுத்தவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி துன்புறுத்தின. தப்பிச் செல்ல முயன்றவர்கள் சற்றும் தாமதிக்காமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சொல்லித் தெரிய வேண்டியதில்லை, இப்படியொரு பயங்கரவாதம் நடக்கும் போது, செத்து மடிவதற்கு முன் காவல் துறையால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்களின் கதையை! அழித்தொழிப்பது ஒன்றே குறிக்கோளான பின், அதற்கென நியாயங்கள் இருக்குமா என்ன? ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் காரணமே இல்லாமல் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டனர். பச்சைத் தண்ணீர்கூட கிடைக்காமல் நாவறண்டு சுருண்டு விழுந்தனர் பலரும். உணவையும் தண்ணீரையும் தேடி பக்கத்து தீவுகளுக்கு நீந்திச் செல்ல முற்பட்டவர்கள் அடுத்த நொடியே தோட்டாவிற்கு பலியானார்கள். 1979 சனவரி 31 அன்று பசியைப் பொறுக்கமாட்டாமல், உணவைத் தேடி மரிச்ஜாப்பியை விட்டு வெளியேறியவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 36 பேர் பலியானார்கள்.” என்கிறார் மீனா மயில்.
நூலை மொழிபெயத்த இனியன் இளங்கோ இவ்வன்முறை குறித்து எடுத்துரைக்கையில் “ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்காள அரசோ தலித் மக்கள் மரிச்சாப்பியில் தொடர்ந்து வாழ்வதற்கு அனுமதி மறுத்து அங்கு வாழ்ந்து வந்த தலித் மக்களை வெளியேற்றும் நோக்கில் காவல்துறை மற்றும் குண்டர் படையை ஏவி விட்டு திட்டமிட்ட வன்முறை, சித்திரவதை, தொடர் படுகொலைகள், கடத்தல்கள், பாலியல் தாக்குதல்கள், பொருளாதார உணவு முற்றுகை என்று பல்வேறு வகைகளில் மரிச்சாப்பியில் வாழ்ந்த தலித் அகதிகளை துன்புறுத்தி அழித்து இறுதியில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தலித் மக்களை துப்பாக்கி குண்டுகளாலும் கத்திகளாலும் வெட்டி சாய்த்து குழந்தைகள், பெண்கள், ஆண்கள் முதியவர்கள் என மரிச்சாப்பியில் வாழ்ந்த ஏறக்குறைய இருபதாயிரம் தலித் அகதிகளை ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்காள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு கொன்றொழித்தது” என்கிறார்.
“காவல் துறையின் தொழிற்சங்கம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததால், நீதிமன்ற உத்தரவை மீறி அரசு செயல்பட முடிந்தது. பட்டினியும், நோயும் பல தீண்டத்தகாத அகதிகளைக் கொன்றபோதும் அகதிகள் தங்கள் கோரிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை. தீண்டத்தகாத அகதிகளை வெளியேற்றும் காவல் துறை நடவடிக்கைகள் தோல்வியடைந்த பிறகு, மாநில அரசு தீண்டத்தகாத அகதிகளை கட்டாயமாக வெளியேற்றும் படி கட்டளையிட்டது. இக்கட்டாய வெளியேற்றம், மே 14 இல் இருந்து மே 16, 1979 வரையில் நிகழ்ந்தது. தீண்டத்தகாத மக்களை வெளியேற்றுவதற்காக முஸ்லிம் கூலிப் படையினர் காவல் துறைக்கு உதவ வாடகைக்கு அமர்த்தப்பட்டனர். ஆளும் வங்காள தேசத்திலிருந்து வந்த தீண்டத்தகாத அகதிகளிடம் முஸ்லிம்கள் கருணை காட்ட மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கருதியது. தீண்டத்தகாத அகதி ஆண்கள், பெண்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். பெரும்பாலான தீண்டத்தகாத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆதரவற்ற தீண்டத்தகாத இளம் பெண்களை காவல் துறையினர் எந்த வரைமுறையுமின்றி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கத் தொடங்கினர்.” என்கிறார் நூலாசிரியர் ராஸ் மாலிக்.
நிற்க
மார்க்சியத்தை முன்வைத்து அம்பேத்கரை விமர்சித்தால் அது தலித் கம்யூனிஸ்ட் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது என்றும்,  இது பிரித்தாளும் சூழ்ச்சி என்று வியாக்யானம் செய்த ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ மற்றும் சிபிஎம்-ஐ கட்சியினர் அம்பேத்கரைத் திறனாய்வு செய்த காரணத்தை முன்வைத்து வன்மத்தோடு, முகநூலில் நடந்த ஒரு விவாதத்தில் நான் வைத்த வார்த்தைகளைத் திரித்து என் மீது வன்கொடுமை வழக்குத் தொடுத்தது. ஆச்சரியம் என்னவென்றால் வழக்கின் முகாந்திரமாக,
“நவ இந்தியச் சிற்பி அம்பேத்கரை இழிவு படுத்திய வசுமித்ரா மீதுதீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார்” என்ற தலைப்பில் முகநூலில்,“நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். நான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறேன். எமது இயக்கம் மதுரை உத்தப்புரம், திருச்சி எடமலைப்பட்டி, கோயம்புத்தூர் நாகராஜபுரம் ஆகிய இடங்களில் தீண்டாமைச் சுவர்களை அகற்றியது. எமது இயக்கம் 25க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி வன்கொடுமைகளுக்கு எதிரான எங்கள் வழக்கில் தான் ரூ.7.50 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. இதனை அன்றைய தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்ட மன்றத்தில் அறிவித்தார்.நாங்கள் நடத்தி வருகிற டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு இலவச மையத்தின் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுத் துறைகளில் பணியாற்றுகின்றனர். எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக தேனி மாவட்டம் கோடங்கிப் பட்டியைச் சேர்ந்த வசுமித்ரா என்பவர் தனது முகநூலில் இந்திய அரசியல் அமைப்பின் தந்தை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளார். ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறை செலுத்திக் கொண்டே இந்தியாவின் ஒட்டுமொத்த நலன்களுக்கான அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கித் தந்தவர் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர். இந்நிலையில் மேற்படி வசுமித்ரா சாதி மேலாதிக்க உணர்வுடன்” புத்தரின் ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கர்” என டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை மிகக் கீழ்த்தரமாக இழிவு படுத்தியுள்ளார். மார்க்சிய, மற்றும் அம்பேத்கரிய இயக்கத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிலையில் அதனை சீர்குலைப்பதும் மேற்படி வசுமித்ராவின் நோக்கம்.எனவே டாக்டர் பி. ஆர். அம்பேத்கரை இழிவு படுத்தி முகநூல் பதிவு செய்த சாதி இந்துவான வசுமித்ரா மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரால் உயர்வாக மதிக்கப்படுபவரை இழிவு செய்வதற்கு எதிரான சட்டப்பிரிவுகளான SC/ST வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018ன் பிரிவுகள் 3(1) (t), 3(1) (u), 3(1) (v) ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.”
என புகார் அளித்தார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயளாலர் சாமுவேல் ராஜா. எனது வார்த்தையைத் திரித்து வன்மத்தால் புகார் கொடுத்த அவர் 17,000 தலித்துக்களைக் கொலை செய்ததாக உள்ள இப்புத்தகத்திற்கு என்ன எதிர்வினை செலுத்தியுள்ளார். ஆவணத்தை ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மைகளைச் சோதித்து எதேனும் எழுதியுள்ளாரா?
தனிநபராய் இருக்கும் காரணத்தால் அமைப்பைத் துணைக்கழைத்து பாசிச மனநிலையோடு என் மீது வழக்குத் தொடுத்திருப்பவர் 17000 படுகொலைகளை செய்த சிபிஐ-எம் கட்சியின் மீது என்னவிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுவார்?
திரிக்கப்பட்ட எனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டவர்கள், இந்த நூலுக்கு இதுவரை என்ன விதமான எதிர்வினைகளை வைத்துள்ளார்கள்.
தோழர் கோவிந்தன் போன்றவர்களை முன்னுதாரணமாகக் காட்டி பழங்குடியின் நலனுக்காக பாடுப்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி நாங்கள்தான் என தனது கட்சியின் புகழை முன்வைக்கும் சிபிஐ- எம் இந்நூலுக்கு மறுப்பாக தகுந்த ஆதாரத்தோடு என்ன எதிர்வினையைச் செய்தது?
எதற்கெடுத்தாலும் அம்பேத்கரை வைத்து அடையாள அரசியல் செய்வதும், வன்கொடுமை வழக்கைக் பூச்சாண்டித்தனமாகக் காட்டும்  தமுஎகசவின் மாநிலச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா இது குறித்து எங்கேனும் குரல் எழுப்பியுள்ளாரா?
ஆதவன் தீட்சண்யாவுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் வழங்கும் தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் தான் சார்ந்திருக்கும் கட்சியால் கொல்லப்பட்ட 17000 தலித்துகளுக்கு கருத்துச் சுதந்திரத்தின் பேரால் என்ன எழுதினார்? எவரை எச்சரித்தார்?
சிபிஎம் 17000 ஆயிரம் தலித்துக்களை கொன்றதா?
சிபிஎம் கட்சி விடை தருமா?
உண்மையில் இது நடந்திருந்தால் சிபிஐ-எம் கட்சி பாசிஸ்டுகளின் கட்சி என்றே குறிப்பிடுவேன்.
இல்லையென்றால் தலித்துகள் தங்களது அடையாள அரசியலால் இடதுசாரிகளை ஒழித்துக்கட்ட பரப்பிய அவதூறென்பேன்.
இல்லை, இது சி.அய்.ஏ.யின் சதியா?
சிபிஐ-எம்  இதை விவாதிக்க வேண்டும். தோழர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
- வசுமித்ர
புத்தக அட்டையில் உள்ள தலைப்பு:
மரிச்ஜாப்பி
சி.பி.எம். அரசின் தலித் இனப்படுகொலை
நூலின் உள்ளே உள்ள தலைப்பு
மரிச்ஜாப்பி
சி.பி.எம்.அரசு நிகழ்த்திய சுந்தர்பான்
தலித் இனப்படுகொலை
-ராஸ் மாலிக்
தமிழில்:இனியன் இளங்கோ
வெளியீடு: கருப்புப்பிரதிகள், தலித் முரசு
முதற்பதிப்பு: டிசம்பர் 2013
நூலின்
இரண்டாம் பதிப்பு 2018 ல் வெளிவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: