Arsath Kan - Oneindia Tamil : : ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் நடைபெற்ற பிரஹ்போதி புத்த விகாரை i அடிக்கல் நாட்டுவிழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிலையில் வலதுசாரிகள் வரிந்துகட்டத் தொடங்கியுள்ளனர்.
பெளத்த மதம் தொடர்புடைய நிகழ்வில் திருமாவளவன் கலந்துகொண்டதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
மதங்களுக்கு அப்பாற்பட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா,
புத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன் என வலதுசாரிகள் கமெண்ட்கள் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புத்த விஹார் ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் பிரஹ்போதி புத்த விஹார் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் புத்த விஹாருக்கான அடிக்கல்லை நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக திருமாவை வரவேற்ற புத்த பிட்சுகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமைக்காக நன்றி தெரிவித்ததோடு பெளத்த மதம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் எடுத்துக்கூறினர்.
மதச்சார்பின்மை கொள்கையை கடைபிடித்து வரும் திருமாவளவன் புத்த மத நிகழ்வில் கலந்துகொண்டதை வழக்கம் போல் வலதுசாரிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
திருமாவளவன் நோன்பு காலத்தில் தொப்பி அணிந்து சஹர் உணவு சாப்பிட்ட படங்களையும், கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோக்களையும், புத்த மத நிகழ்வில் கலந்துகொண்ட படங்களை பதிவிட்டும் இது தான் மதச்சார்பின்மை கொள்கையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே புத்த விஹார் அடிக்கல் நாட்டுவிழாவில் பேசிய திருமா, புத்தரின் நற்பண்புகளையும் உயர்ந்த குணத்தையும் பற்றி புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வுக்கு பிறகு தேவக்கோட்டை, காளையார்கோவில், தேவிப்பட்டனம் என தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் திருமா கலந்துகொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திருமா வருகை புரிந்ததால் விசிகவினர் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் திருமாவை கட்சிக்கொடியை ஏற்ற வைத்து அவரை உற்சாகம் கொள்ளச் செய்திருந்தனர் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள். வட தமிழகத்தில் ஓரளவு கட்சியின் கட்டமைப்பை வலிமையோடு வைத்திருக்கும் திருமா, தென் மாவட்டங்களிலும் இனி விசிகவை வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருமாவின் இந்த முயற்சி புதிய தமிழகம் கட்சிக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக