மின்னம்பலம் : மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2019ல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா என பல்வேறு வகையில் உருமாறி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 700க்கும் குறையாமல் பதிவாகி வருகிறது. இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம், எவிக்சன் தொடரை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், நேற்று முன் தின தொடருக்குச் சென்னை வந்தார்.
நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய கமல், சிகாகோவில் இருக்கிறார். இந்த வாரம் பிக்பாஸிற்கு வரமாட்டார் எனப் பலர் கூறியதாக சோசியல் மீடியா மூலம் தெரிந்துகொண்டேன். நான் கடமை தவறியவன் என்கிற அவப்பெயர் ஒருபோதும் எனக்கு வந்தது கிடையாது. இனியும் வராது என நம்புகிறேன். சிகாகோ பயணம் என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. கமல் ஹவுஸ் ஆஃப் காதி துவக்க விழாவிற்காகத் தான் சிகாகோ சென்றேன். கொரோனா பெருந்தொற்று காரணமாக இதைத் துவக்குவது தாமதமானது” என்றார்.
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச்சூழலில், கமல் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்துகொண்டே காணொளி மூலம் பங்கேற்பாரா, அல்லது அவருக்குப் பதிலாக வேறு யாராவது தற்காலிகமாக நியமிக்கப்படுவார்களா என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுபோன்று அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று #kamalhassan என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக