வியாழன், 25 நவம்பர், 2021

திமுக வரலாற்றில் மாநாடு என்றால் வீரபாண்டியரின் 1999ஆம் ஆண்டு சேலம் திமுக பொன்விழா மாநாடு தான்.

May be an image of 2 people, people standing and text that says 'வீரபாண்டியார் ஓட்டி வந்த சாரட் வண்டியில் கலைஞர்'

A Sivakumar  :  திருச்சி என்றாலே மாநாடு தான் என்பதெல்லாம் அண்ணன் கே.என்.நேரு பொறுப்பேற்ற பின் ஏற்பட்ட வரலாறு.
அதற்கு முன்னால், மாநாடு என்றால் அது 1999ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திமுகவின் பொன்விழா மாநாடு தான்.
நடத்தியவர் சேலத்து சிங்கம் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள்.
மதியம் 4 மணி அளவில் ஆரம்பித்த பேரணி விடிய விடிய நடந்துக்கொண்டே இருந்தது.
அடுத்த நாள் காலை 7 மணி ஆகியும் முடியவில்லை.
அந்தளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருந்து வந்து சேர்ந்த திமுக தொண்டர்களுக்கு அத்தனை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த முதல் மாநாடு சேலம் மாநாடு தான்.
செய்தவர் வீரபாண்டியார் தான்!


அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு அந்த ஏற்பாடுகளை நேரில் கண்டுகளித்து வியந்து பாராட்டியவர்களை கேட்டுப்பாருங்கள் தெரியும் அம்மாநாட்டின் சிறப்பு.
இன்று போல அன்றெல்லாம் மொபைல் கேமராக்களும், இணையதள வசதியும் இருந்திருந்தால், ஒரு அரசியல் கட்சியின் மாநாடு இத்தனை சிறப்பாக நடக்குமா என்று உலகமே வியந்திருக்கும்!!!
வீரபாண்டியாருக்கென தனித்த தியாக  வரலாறு உண்டு!

தன் மகளின் திருமணம் முடிந்த சற்று நேரத்திற்குள்ளாக மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகளில் கைதாகி, ஆறுமாத காலம் சேலம் சிறையிலும், எட்டுமாத காலம் மதுரை சிறையிலும் அவதிப்பட்டவர்.
சேலம் சிறையில் இருந்தபோது மத்திய உளவுத்துறையும், தமிழக காவல்துறையும், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளும் திமுக தலைவர் கலைஞர் குறித்து பொய்யான வாக்குமூலம் அளிக்க இவரை கட்டாயப்படுத்திய போதும், என் தலைவருக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று உறுதியுடன் நின்றவர்.
சேலம் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டப் போது, சேலம் சிறைச்சாலையில் இருந்து மதுரை சிறைச்சாலை வரை கையில் விலங்கு மாட்டி, அவரது இருக்கை பலகையோடு சங்கிலியைப் பூட்டி வைத்தார்கள். மதுரையில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறபோதெல்லாம்  கையில் விலங்குச் சங்கிலி போட்டே அழைத்துச் சென்றனர்.
வீரபாண்டியார் கைதாகி சிறையில் இருந்தபோது, புதுமணத் தம்பதிகளான இவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வாரக்கணக்கில் வைத்து துன்புறுத்தினார்கள்.
வீரபாண்டியாரின் தாயார் சின்னம்மாள் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார் என பொய் வழக்குப்போட்டு அவருடைய தலைக்கு மேல் சாராய பானையை வைத்து ஐந்து கிலோ மீட்டர் நடத்தியே அழைத்துச் சென்று சிறையில் தள்ளினர். வீரபாண்டியார் மனைவி, சகோதரி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தனர். இவர் சிறையிலிருந்த காலத்தில் இவருடைய வீட்டிற்கு வந்தவர்கள் மீது கூட பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது கொள்கைப் பிடிப்பினையும், திமுகவுக்கு உரமூட்டும் உழைப்பினையும் பாராட்டிடும் வகையில் திமுக சார்பில் 20.09.2012 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இவருக்கு திமுக தலைவர் கலைஞர் பெரியார் விருதினை வழங்கிச் சிறப்பு செய்தார்.
எதற்கும் கலங்காத கலைஞர் அவர்கள் கதறி அழுத நிகழ்வுகள் முரசொலி மாறன் அவர்கள் மறைவும், வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மறைவும் தான்.
இரண்டும் ஒரே நாளில் அமைந்துவிட்டது இயற்கையின் விசித்திரம்.

கருத்துகள் இல்லை: