செவ்வாய், 21 செப்டம்பர், 2021

நீட்டை ரத்து செய்தால் சமூகநீதி நிலைநாட்டப்படும்..' ஏகே ராஜன் குழு அறிக்கையின் பரிந்துரைகள்

Vigneshkumar  -  Oneindia Tamil   :  சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நீட் தேர்வைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கையை எடுக்கத் தொடங்கலாம் என ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் மூலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஏகே ராஜன் குழு ஏகே ராஜன் குழு கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் நீட் ரத்தை ஒரு வாக்குறுதியாகவே திமுக அளித்திருந்தது.

அதேபோல தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவ படிப்புகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கை எப்படி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறித்து இதில் ஆராயப்பட்டது.

இந்த குழுவுக்கு எதிராகத் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நீட் தேர்வு பாதிப்புக்கான குழுவைத் தமிழக அரசு அமைத்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் நீதிபதி ஏ.கே. ராஜன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார். இந்நிலையில், இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 85,000 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டு, இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், நீட்டிற்கு முன் மற்றும் நீட்டிற்கு பிறகு உள்ள மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அறிக்கையின் 9ஆவது பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு ஏழு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வை ரத்து செய்யத் தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நீட் ரத்துக்கு சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது. பிஇ போன்ற தொழில் படிப்புகள், எம்பிபிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகள் என இரண்டிற்கும் எவ்வித நுழுவை தேர்வும் இருக்கக் கூடாது என இந்தச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இதில் இருக்கும் அரசியல் சாசன சரத்துகள் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் உரிமையைத் தருகிறது.

அல்லது அந்தச் சட்டத்திற்கு நிகரான ஒரு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றலாம். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையை +2 மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று ஏகே ராஜன் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நீட் மூலம் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டால் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும் சில காலத்தில் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் கூட இல்லாத சூழல் ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: