புதன், 22 செப்டம்பர், 2021

கோயிலுக்குள் தலித் குழந்தை நுழைந்ததால் தந்தைக்கு ரூ.23,000 அபராதம்... கர்நாடகாவில்

 Vignesh Selvaraj கலைஞர் செய்திகள்   :  கோயிலுக்குள் தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தை நுழைந்ததற்காக அக்குழந்தையின் தந்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ளது மியாபுரா கிராமம்.
அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்றுள்ளார்.
அந்தக் கோயிலில் தலித் மக்கள் நுழைவதற்கு ஆதிக்க சாதியினர் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வெளியே நின்று குழந்தைக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.
அப்போது அக்குழந்தை கோயிலுக்குள் ஓடிவிட்டுத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர், தலித் சமூக குழந்தை கோயிலுக்குள் நுழைந்ததைக் கண்டித்து கூட்டம் நடத்தியுள்ளனர். தலித் குழந்தை நுழைந்ததால் கோயிலுக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர்.



இதனால் கோயிலை தூய்மைப்படுத்த சடங்குகள் நடத்தவேண்டும் எனக் கூறி சம்பந்தப்பட்ட குழந்தையின் தந்தைக்கு ரூ.23,000 அபராதம் விதித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்த நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அக்கிராமத்திற்கு விரைந்து சென்று ஆதிக்க சாதியினர் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

மேலும், கிராமவாசிகளுக்கு தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலித் குழந்தை கோயிலுக்குள் நுழைந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: