வெள்ளி, 18 டிசம்பர், 2020

ஸ்டாலின் உட்பட 1,600 பேர் மீது வழக்கு! விவசாயிகள் போராட்டம்: எந்த வழக்கையும் சந்திக்க தயார் -

nakkeeran :மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 1,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் 'விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு' என்ற வாசகத்துடன் கூடிய பச்சை நிற 'மாஸ்க்' அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக உண்ணாவிரதத்தில் தலைவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.             உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன், கனிமொழி, பாரிவேந்தர் ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன், ஜவாஹிருல்லா, தங்கபாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்களும், தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் சட்டவிரோதமாகக் கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தி.மு.க தலைவர் ஸ்டாலின், திமுக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் என மொத்தம் 1,600 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

BBC  :ன்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதத்தில் பேசும் மு.க.ஸ்டாலின். "விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக எந்த வழக்கை வேண்டுமானாலும் போடுங்கள்.அதை சந்திக்க நாங்கள் தயார். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டன.

இந்த நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய ஸ்டாலின், "நாடாளுமன்றத்தில் அரசு கொடுமையான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றிய போதே, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சியினரின் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றினோம். மாவட்ட அளவில் தொடர்ந்து போராடினோம்," என்று ஸ்டாலின் பேசினார்.

"அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளும் அவரவர் சக்திக்கேற்ப போராட்டங்களை நடத்தின. கடந்த 5ஆம் தேதி மாவட்ட கழகம் சார்பில் கையில் கறுப்புக்கொடி ஏந்த போராடினோம். இவை எல்லாம் நாங்கள் தொடர்ந்து நடக்ககூடிய போராட்டம். ஆனால், அதை சகித்துக் கொள்ள முடியாத தமிழக முதல்வர், ஆத்திரத்தில் எங்களை விமர்சனம் செய்கிறார். ஊர் ஊராக போய்க்கொண்டிருக்கிறேன் என்று பேசும் முதல்வர், அரசு அதிகாரிகளை அழைத்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது ஏதோ மக்களிடம் அன்றாடம் போய் பேசுவது போல காட்சிப்படுத்துகிறார்," என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

"1957இல் தமிழக சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி முதல் முறையாக நிகழ்த்திய கன்னிப்பேச்சே விவசாயிகள் பிரச்னைதான். அவருடைய மகன் நான்" என்று பேசினார் மு.க. ஸ்டாலின்.

முன்னதாக, திமுக கூட்டணி கட்சிகள் மேற்கொண்ட ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம், மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றன. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

உண்ணாவிரதம்
படக்குறிப்பு,

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிவிட்டுச் சென்றார்.

ஸ்டாலின் உரை

முன்னதாக, காலையில் உண்ணாவிரதத்தைத் தொடக்கிவைத்துப் மு.க.ஸ்டாலின் பேசியபோது, கொரோனா காலத்தில் மக்களுக்கு சுகாதார, பொருளாதார உதவிகள் வழங்குவதைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் விரோதச் சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றுவதாக குற்றம்சாட்டினார்.

அவரது உரையில் இருந்து:

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா என்ற நோய்த் தொற்றில் இந்தியா முழுவதும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதைப்பற்றி மத்திய பா.ஜ.க. அரசும் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் சுகாதாரப் பணியில் - பொருளாதார உதவியில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், மக்களுக்கு எதிரான உணர்வுகளை - எண்ணங்களை - சட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்ணாவிரதம்

அதிலும் குறிப்பாக, கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு மக்கள் விரோதச் சட்டங்களை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அகாலி தளம் கட்சியின் தமிழ்நாடு பிரிவு நிர்வாகிகள் வருகை.
படக்குறிப்பு,

அகாலி தளம் கட்சியின் தமிழ்நாடு பிரிவு சார்பில் அதன் நிர்வாகிகளோடு திமுக கூட்டணித் தலைவர்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, புதிய மின்சார திருத்தச் சட்டம். இந்த நான்கு சட்டங்களும் மக்களுக்கு விரோதமான சட்டங்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் துணை நிற்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே இன்று கொந்தளித்துப் போய் இருக்கிறது; தலைநகர் டெல்லி இன்று கொதித்துப் போய் இருக்கிறது என்று பேசினார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: