புதன், 16 டிசம்பர், 2020

பெரும்பான்மை இருப்பதால் சட்டம் கொண்டு வருவோம்.. விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்... பாஜக

பெரும்பான்மை இருப்பதால் சட்டம் கொண்டு வருவோம்: வேளாண்  அமைச்சர் பேட்டி

மின்னம்பலம்  : மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக 20 நாட்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பிரம்மாண்டமான வகையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மத்திய அரசு, சட்டங்களில் சில திருத்தங்களையும் செய்து அவற்றின் வரைவுகளை விவசாய சங்கத்தினரிடம் கொடுத்தது. ஆனால் அவற்றை போராடும் விவசாயிகள் சங்கத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் ரயில் மறியல், உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை அறிவித்து வருகிறார்கள்.    இந்த நிலையில், வேளாண் சட்டங்களையும் பாஜகவுக்கு இருக்கும் 303 இடங்கள் பெரும்பான்மையையும் இணைத்து கருத்து வெளியிட்டிருக்கிறார் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் டிசம்பர் 16 ஆம் தேதி அளித்திருக்கும் பேட்டியில், “மக்கள் எங்களுக்கு 303 இடங்கள் அளித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பானது சும்மா, ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கல்ல. வேளாண் சட்டங்கள் போன்ற மாற்றங்களைக்கொண்டு வருவதற்காகத்தான்.

2014 முதல் 2019 வரையிலான பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த ஆட்சிக்கு கவுன்ட் டவுன் என்று சிலர் கூறினர். ஆனால் மக்கள் 2019 ல் மீண்டும் மோடியையே ஆட்சியில் அமர வைத்தனர். அதுவும் 2014 இல் கொடுத்த 284 இடங்களை விட அதிகமாக 303 இடங்களில் வெற்றிபெற வைத்து பெரும்பான்மையை மோடிக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், மோடி இன்னும் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியல் அழுத்தம், குறிப்பிட்ட சிலரது நலன்கள், வாக்கு வங்கி அரசியல் இவற்றின் காரணமாக நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட சீர்திருத்தங்களை இப்போது மோடி அரசு செய்கிறது.

.விவசாயி சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன் பலனாக அரசு அவர்களுக்கு சில முன்வரைவுகளை டிசம்பர் 9 ஆம் தேதி அனுப்பியிருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் திரும்பப் பெறப்பட மாட்டாது. விவசாயிகளை பாதிக்கும் சட்டப் பிரிவுகள் ஏதேனும் இருக்கிறது என்றால் அதை மறு ஆய்வு செய்ய அரசு தயார். ஆனால், சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்கள் விவாதத்துக்கு உட்படுத்த விரும்பக் கூடாது. இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண்போம். குறைந்தபட்ச ஆதார விலை என்பது நிர்வாக ரீதியிலான முடிவு. அது நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் தொடரும். அதுபற்றி யாரும் சந்தேகப்பட வேண்டிய தேவையில்லை” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

இதெல்லாம் சின்னச் சின்ன சட்டங்கள்

நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு இந்த சட்டங்களை அனுப்புமாறு எதிர்க்கட்சியினர் கோருவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தோமர்,

“இந்த வேளாண் சட்டங்கள் எல்லாம் சிறிய சட்டங்கள். பல ஆண்டுகளாக நாம் இதுகுறித்து விவாதித்து வந்திருக்கிறோம். சிக்கலான சட்டங்கள்தான் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கோ, தேர்வுக்குழுவுக்கோ அனுப்பப்பட வேண்டும். இவற்றை அனுப்பத் தேவையில்லை”என்று பதிலளித்துள்ளார்.

-வேந்தன்

 

கருத்துகள் இல்லை: