செவ்வாய், 15 டிசம்பர், 2020

கர்ப்பிணியைக் கொடுமையாகக் கொன்ற கணவர்: சாகும்வரை தூக்கிலிட உத்தரவு!

minnambalam :கர்ப்பிணி மனைவியைக் கொடுமையாகத் தாக்கிய கணவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணியைக் கொடுமையாகக் கொன்ற கணவர்: சாகும்வரை தூக்கிலிட உத்தரவு!

தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(39). இவர் பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவருக்கும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கற்பகவல்லி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கற்பகவல்லி சிறுமியாக இருந்த போது , அதாவது 14வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு 3ஆவது முறையாகக் கர்ப்பம் தரித்திருந்தார் கற்பகவல்லி.   சுரேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது ஊர் பெரியவர்களுக்குத் தெரிய வந்ததையடுத்து, அவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். எனினும் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை தாக்கியிருக்கிறார

2015 ஜூன் 21ஆம் தேதியன்று சுரேஷ் கற்பகவல்லியைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். வயிற்றில் சிசு இருக்கிறது என்றும் யோசிக்காமல் எட்டி உதைத்தும், மார்பில் சிகரெட்டால் சுட்டும், தாலிக் கயிற்றில் கழுத்தை நெறித்தும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த கற்பகவல்லி தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிசு கலைந்ததால் அதிக உதிரப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அப்போது 19 வயதே ஆன கற்பகவல்லி கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கற்பகவல்லியின் தந்தை நல்லதம்பி, சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்றது. சுரேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) மற்றும் 316 (பிறக்காத குழந்தையின் மரணத்துக்குக் காரணம்) ஆகிய பிரிவுகளின் கீழ் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்குத் தொடர்ந்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், 13 ஆதாரங்களும், 20 சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் காதர், இத்தகைய குற்றங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்குவதையே வலியுறுத்துகிறது என்று சுட்டிக்காட்டியதுடன், 302ஆவது சட்டப்பிரிவின் கீழ் சாகும்வரை சுரேஷை தூக்கிலிட வேண்டும். 316 சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பின் போது அரிதிலும் அரிதான வழக்கு என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: