ஞாயிறு, 13 டிசம்பர், 2020

இலங்கையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள யானை,மனித மோதல்!

tamil.theleader.lk : யானை - மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தில் (கோபா) தெரியவந்துள்ளது. யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படும் நிலையில், முதலாவதிடத்தில் இந்தியா காணப்படுகிறது.

இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில், யானை – மனித மோதல் தொடர்பில் பல வருடகால ஆராய்ச்சி ரீதியிலான அனுபவம் கொண்ட கலாநிதி பிரித்விராஜ் பெர்னாந்து குறிப்பிட்டார்.

இலங்கையில் யானை – மனித மோதல் காரணமாக சராசரியாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை 271 ஆகக் காணப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் 407 யானைகள் உயிரிழந்திருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். 

அத்துடன், யானை – மனித மோதல் காரணமாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை 85ஆகக் காணப்பட்டதுடன், 2019ஆம் ஆண்டில் 122 பேர் உயிரிழந்திருப்பது பற்றிய தகவலும் இங்கு வெளியானது.

இலங்கையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதனைவிட வினைத்திறனான வேலைத்திட்டத்துடன் செயற்படுவதன் அவசியத்தை குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன மற்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த யானை – மனித மோதலைத் தீர்க்க 60 ஆண்டுகளாக முயற்சித்த போதிலும், எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றனவே தவிர குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் புதிய முறையில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, யானை - மனித மோதலைக் குறைப்பதற்கான முதல் படியாக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் விரைவில் இணைத்து ஒரு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்குமாறு கோபா குழு, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது.

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு வெற்றிகரமான முறையாக அடையாளம் காணப்பட்ட யானைகளுக்கு வேலி அமைக்கும் முறையின் கீழ் 2016 ஆம் ஆண்டுவரை 4211 கிலோ மீற்றர் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தபோதும், குறுகிய காலத்தில் அவற்றை முறையாக பராமரிக்கத் தவறியது கடுமையான பிரச்சினையாக இருந்தது என்று இக்குழு சுட்டிக்காட்டியது.
இதற்கு 86 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள போதும் வனஜீவராசிகள் திணைக்களம் இவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் பற்றியும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை: