ஞாயிறு, 2 ஜூன், 2019

புதுச்சேரி திராவிட பேரவை தலைவர் நந்திவர்மன் காலமானார்! ..அவரது பேட்டி வீடியோ


Govi Lenin : புதுச்சேரியில் திராவிடப் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்த நந்திவர்மன் கடந்த மே 30ந் தேதி காலமானார். 1965 மொழிப் போர்க்களத்தில் முன்னின்றவர். மிசா சிறைக் கொடுமைகளை சந்தித்தவர். ஜார்ஜ்
பெர்னாண்டஸூம் இவரும் ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்டவர்கள். < திராவிட இயக்கப் பயணம் குறித்த நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கிறார் நந்திவர்மன். போராட்டக் களத்தில் முன்னின்றதுடன், இலக்கியக் கூட்டங்கள் வழியாக திராவிடக் கொள்கைகளைப் பரப்பியவர். அ.தி.மு.க. உருவானபோது அதில் இணைந்தார். தமிழ்நாட்டுக்கு முன்பாக புதுச்சேரியில்தான் அ.தி.மு.க. முதலில் ஆட்சியைப் பிடித்தது. எனினும், கொள்கைரீதியாக அது எந்தளவில் திராவிட இயக்கத்தைப் பாதித்தது என்பதை நேரடி அனுபவங்கள் மூலம் அறிந்தவரான புதுச்சேரி நந்திவர்மன், அதனைத் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் அவரால் நீடிக்க முடியவில்லை.

தி.மு.க.விலிருந்து ம.தி.மு.க. பிரிந்தபோது, அதனால் இருதரப்பிலும் ஏற்படப் போகும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி, பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து செய்தி அனுப்புவார். அப்போது அவர் சொன்னவற்றை இப்போது ஒப்பிடும்போது, 90% சரியாகவே இருக்கிறது.
72 வயதில் மரணமடைந்த நந்திவர்மனுக்கு திருமணம் ஆகவில்லை. திராவிட நாடு அடைந்தபிறகு திருமணம் செய்து கொள்வது என்ற உறுதியேற்ற அவர், பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க. கைவிடநேர்ந்த நிலையிலும், தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் இறுதிவரை இல்லறக் கூண்டில் சிக்காமல், இலட்சிய வானில் திராவிடம் பாடிய வானம்பாடியாக வாழ்வில் நிறைவெய்தியுள்ளார்.
நந்திவர்மன் போன்றோரின் அர்ப்பணிப்பு வாழ்க்கை, இந்தித் திணிப்பு உள்ளிட்ட ஆதிக்க-அதிகார தாக்குதல்களை நாம் எதிர்கொள்ள உந்துசக்தியாகும்.

கருத்துகள் இல்லை: