புதன், 28 டிசம்பர், 2016

சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு, அழைத்துவரப்படும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள்

;29ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சசிகலா பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் என்னவென்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க ஒரு சிலர் முடிவு செய்துள்ளனர். அப்படி சசிகலாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினாலோ, கண்டனம் தெரிவித்தாலோ சசிகலாவுக்கு அவமானம் நேர்ந்து விடும் என்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள் தானாக முன்வந்து கட்சியின் தலைமைக்கும், ஆட்சியின் தலைமைக்கும் பொறுப்பேற்க வாருங்கள் என்று தீர்மானம் போட்டு அதை கார்டனில் உள்ள சசிகலாவுக்கு கொண்டுபோய் தருவார்களாம்.
அந்த தீர்மானம் சசிகலாவுக்கு கிடைத்தவுடன், பின்னர் கார்டனில் இருந்து புறப்பட்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பதவியை ஏற்று, ஒரு சில நிமிடங்கள் பேசுவார் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முழுக்க சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போகும் நபர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு அனுப்பவில்லையாம். மேலும், பொதுக்குழுவில் பங்கேற்க வரும் கட்சியினர் சொந்தக் காரில் வரக்கூடாதாம். சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, அங்கிருந்து சொகுசு பேருந்துகளில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுக்குழு நடக்கும் இடத்தில் கட்சியினர் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜெயலலிதா இருக்கும்போது பொதுக்குழு கூட்டம் நடந்தால் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்காமல், போட்டோகிராபர்களை மட்டும் உள்ளே அழைத்து போட்டா எடுக்க 5 நிமிடம் ஒதுக்கி தரப்படும்.
ஆனால் இந்த முறை போட்டோகிராபர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல், கட்சித் தலைமையே பொதுக்குழு நடக்கும் புகைப்படத்தை எடுத்து அந்தந்த பத்திரிகைகளுக்கு இமெயில் அனுப்பிவிடுவார்களாம்.

பொதுக்குழு நடக்கும் இடத்தில் எம்.ஜி.ஆர். ஜெ, சசிகலா படங்களை தவிர யாருடைய படங்களையும் பேனராகவோ, கட் அவுட்டாகவோ அல்லது போஸ்டராக ஒட்ட அனுமதி இல்லையாம். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படங்களையும் பொதுக்குழு நடக்கும் இடத்தில் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
;தேவேந்திரன்
படங்கள்: ஸ்டாலின்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: