செவ்வாய், 27 டிசம்பர், 2016

'சசிகலா vs சசிகலா புஷ்பா' ... ஹைதராபாத்தில் இருந்து அப்போலோவுக்கு வந்த மர்மபெண் ...?

ஜெ. மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி இப்போது 'சசிகலா vs சசிகலா புஷ்பா' என்ற புள்ளியில் வந்து நிற்கிறது.
'அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பெயர் முன்னிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து நிற்பேன்' என்று பேட்டிதட்டிய சசிகலா புஷ்பா, அதற்கான முயற்சிகளிலும் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். 'கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான சசிகலா தொடர்ச்சியாக 5 வருடங்கள் உறுப்பினராக இல்லாத சூழ்நிலையில், எப்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும்?' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குத் தொடுத்து 'செக்' வைத்தார் சசிகலா புஷ்பா. அதற்குப் பதிலடியாக, 'சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும்' என்று வழி ஏற்படுத்திக் கொடுத்து விசுவாசம் காட்டியிருக்கிறார் பொன்னையன்.

ஆனால், இவ்விஷயம் குறித்துப் பேசும் சசிகலா புஷ்பா தரப்போ, “அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஐந்து ஆண்டுகால உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியைத்தான் இப்போது திருத்தப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சசிகலா இன்றையத் தேதி வரையில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினரே இல்லை என்பதுதான் உண்மை. 2012-ல் சசிகலா மீண்டும் போயஸ்கார்டனுக்குள் வரும்போது, சசிகலா மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தார்களே தவிர, புதியதாக உறுப்பினர் அட்டை எதுவும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. கடந்த வருடம் செயற்குழு உறுப்பினர் பட்டியல் தயாரிக்கும் பணி எங்கள் மேடத்திடம்தான் (சசிகலா புஷ்பா)  கொடுக்கப்பட்டிருந்தது. அதில்கூட சசிகலாவின் பெயர் எந்த இடத்திலும் இல்லை. இப்போது எப்படியும் முன் தேதியிட்டு சசிகலாவுக்காக புதிதாக போலி உறுப்பினர் அட்டை தயார் செய்வார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதனால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை செய்யக்கோரியும் மத்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கவிருக்கிறோம்.’’ என்று அடுத்த அட்டாக்குக்கு தயாராகி வருகின்றனர்.
அ.தி.மு.க-வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதிலிருந்தே டெல்லி பி.ஜே.பி-யோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சசிகலா புஷ்பா, அ.தி.மு.க-வின் ஒவ்வொரு அசைவையும் டெல்லித் தலைமைக்கு அப்டேட் செய்து கொண்டிருந்தார். பதிலுக்கு 'we are with you' என்று பி.ஜே.பி பெருந்தலைகள் கொடுத்த ஆதரவுதான், உரிமை மீறல் குழு புகார் மூலமாக தமிழக அரசுக்கே நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க வைத்தது. இந்த நிலையில், ஜெ. மறைவுக்குப் பின்னான அரசியல் மாற்றத்தில், சசிகலாவுக்கு எதிராக அவர் எடுத்துவரும் மூவ் குறித்துப் பேசுபவர்கள், ’’உயர் நீதிமன்ற வழக்கில், எங்களுக்குத் தேவையான  எல்லா உதவிகளையும் செய்ததே பி.ஜே.பி-தான்.
அடுத்தக்கட்டமாக ஜெ. மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வரப்போகிறோம். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு நீதி விசாரணை நடத்திடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் மேடம். ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் ஒன்று மேடம் கைவசம் இருக்கிறது. அதையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் போகிறார். அதன் அடிப்படையில், ஜெ. சிகிச்சையில் இருந்தபோது அப்போலோ வந்து சென்ற ஐதராபாத் மர்ம பெண்மணி மற்றும் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் ஆகியோர் குறித்து தீவிர விசாரணை செய்யக்கோரி கேட்க உள்ளோம். முக்கியமாக ஜெ. இறப்பதற்கு முன் கோவில் பிரசாதம் என்று உணவோடு சேர்த்து ரகசியமாக அவருக்கு கொடுக்கப்பட்ட தீர்த்த ரகசியங்களும் இதில் வெளிவரும்.
சசிகலாவை நேரடியாக எதிர்க்கப்பயந்து அவருக்கு ஆதரவாக கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்துள்ள மூத்த தலைவர்களே  மறைமுகமாக எங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதெல்லாம் பொதுக்குழு தேர்தலில் வெளிவரும். ஆனால், பொதுக்குழு தேர்தலுக்காக சசிகலா குரூப் செய்துவரும் இந்த தில்லுமுல்லுகள் குறித்தும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் மேடம் புகார் மனு கொடுக்கவிருக்கிறார். கூடவே, ஒன்றரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், ஒவ்வொரு தொண்டனும் பங்குபெறும் வகையில், தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்.'' என்று விவரித்தவர்கள், டெல்லி நடவடிக்கை குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
’’கடந்த 12-ம் தேதி அமித்ஷாவை சந்திப்பதற்காக மேடத்துக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஆனால், புயல் மழையினால் அவரால் டெல்லி செல்லமுடியவில்லை. பின்னர் போனில் தொடர்புகொண்டு பேசிய அமித்ஷா தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். இப்போது மறுபடியும் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக டெல்லி சென்றிருக்கிறார். இதற்கிடையில், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி ஆகியோரைச் சந்தித்தவர் ஜெ.மரணம் குறித்த மர்மங்களை வெளிக்கொண்டுவர சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சேகர்ரெட்டி மீதான ரெய்டு ஆரம்பம்தான்; அடுத்தடுத்து ஆளுங்கட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் மன்னார்குடி சொந்தங்கள் வரை அனைவரும் சிக்கப்போகிறார்கள். இந்தப் பயத்தில்தான், 'சசிகலா பொதுச்செயலாளர் ஆகவிடாமல் தடுக்க நினைக்கிறது மத்திய அரசு, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயரைக்கூட வெளியிடவில்லை' என்றெல்லாம் ஒருபக்கம் மிரட்டிக்கொண்டே இன்னொரு பக்கம் நன்றி கடிதமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்கின்றனர்.
சசிகலாபுஷ்பாவின் இந்த அட்ராசிட்டிக்கெல்லாம், மன்னார்குடி தரப்பில் இதுவரையிலும் நேரடியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை. ’சொந்தங்கள் யாரும் கார்டன் பக்கம் வரவேண்டாம்; போஸ்டர்களிலும் சசிகலா தவிர வேறு யாருடைய பெயரோ, படமோ இடம்பெறக்கூடாது’ என்று அடக்கிவாசிக்க மட்டுமே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க பொதுக்குழுவில் அடுத்த அதகளத்தை எதிர்பார்க்கலாம்.... அதுவரை காத்திருப்போம் !தா,கதிரவன் ,, விகடன்

கருத்துகள் இல்லை: