செவ்வாய், 4 அக்டோபர், 2016

Dr.ரிச்சர்ட் அப்படிச் சொன்னாரா? - பரபரக்கும் அப்பல்லோ!

minnambalam,com :.
"போயஸ் கார்டனைத் தவிர அம்மா வெளியில் தங்கிய நாட்கள் மிகக் குறைவு. விருப்பத்துடன் போகும் இடம் கொடநாடு. எப்போதாவது போவது சிறுதாவூர். எதிர்பார்க்காமல் போனது பரப்பன அக்ரஹாரா. இப்போது நினைவேயில்லாமல் போயிருப்பது அப்பல்லோ என்று சொல்கிறார்கள் அப்பல்லோவில் காத்திருக்கும் அதிமுக பிரபலங்கள்.
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மீடியா ஆட்கள் அப்பல்லோ வாசலைவிட்டு நகரவே இல்லை. ஷிஃப்ட் கணக்கில் ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கேமரா மட்டும் அப்படியே நகராமல் இருக்கிறது. மீடியா ஆட்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கச்சொல்லி செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து அப்பல்லோ நிர்வாகத்துக்கு உத்தரவு போயிருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக மீடியா ஆட்களை விழுந்து விழுந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறது அப்பல்லோ நிர்வாகம். காலை 6 மணிக்கு காபி. 8 மணிக்கு தோசை, பூரி, இட்லி வடை. 10 மணிக்கு டீ அல்லது காபி. 11.30 மணிக்கு சான்விச் மற்றும் ஜூஸ். மதியம் 1 மணிக்கு மினி மீல்ஸ். 4 மணிக்கு வடை, கட்லெட், காபி. இரவு 7 மணிக்கு கிச்சடி, உப்புமா, சப்பாத்தி. இரவு 10 மணிக்கு டீ அல்லது பால். எந்தநேரமும் மினரல்வாட்டர் பாட்டில். இதுதான் அப்பல்லோவில் கடந்த ஒரு வாரமாக மீடியா ஆட்களுக்கு வழங்கப்படும் உணவு மெனு. இதேபோல, அங்கே பணியிலிருக்கும் காவல் துறையினருக்கும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறது அப்பல்லோ நிர்வாகம். அமைச்சர்களும் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போதும் வெளியே போகும்போதும் காரை நிறுத்தி, 'எதுவும் சாப்பிட வேணுமா.. எல்லாம் கொடுக்கிறாங்களா?' என அக்கறையுடன் கேட்டுவிட்டுத்தான் போகிறார்கள்.
மாலை 5 மணிக்கு நான் அப்பல்லோவில் இருந்தபோது அமைச்சர்களின் வருகை அதிகம் இருந்தது. 'சின்னம்மா வரச் சொல்லியிருக்காங்க...' என்று மட்டும் சொன்னார் ஒரு அமைச்சர். இந்தத் தகவலை நான் அனுப்பும் வரை உள்ளேபோன அமைச்சர்கள் யாரும் வெளியே வரவேயில்லை" என்பதே அந்த மெசேஜ்.
அந்த மெசேஜை காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து வாட்ஸ் அப்பிலிருந்து வந்தது அடுத்த மெசேஜ்.
"லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் வழிகாட்டுதலின்படி சிகிச்சை தொடர்ந்து நடந்துவருகிறது. ரிச்சர்ட் சொன்னதாக ஒரு தகவல் மருத்துவமனை வட்டாரத்தில் உலா வருகிறது. அதாவது, நுரையீரல் தொற்று பிரச்னைகளில் இருந்து முதல்வர் மீண்டுவந்தாலும், அவருக்கு ஞாபகமறதி அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. சில மணி நேரங்களுக்குமுன்பு நடந்தவற்றைக்கூட அவர் மறந்துபோக வாய்ப்புள்ளது என ரிச்சர்ட் சொன்னதாகத் தகவல். ஆனால் இதையெல்லாம் யாரும் உறுதிப்படுத்தவில்லை. இன்னொரு தகவலும் சொல்கிறார்கள்.

மருத்துவமனையில் இருந்து முதல்வர் வீடு திரும்பினாலும் அவர் ஓய்வில் இருக்கவேண்டியது கட்டாயம். அதனால், அரசுப் பணிகளை கவனிக்க துணை முதல்வரை நியமிக்கப் போகிறார்கள். ஜெயலலிதா வீட்டில் இருந்தபடியே அட்வைஸ் கொடுப்பார். துணை முதல்வர் அதைச் செய்துமுடிப்பார். அதற்கான வேலைகளும் ஒருபக்கம் நடக்கிறது என்கிறார்கள். எது, எப்படி இருந்தாலும் ஜெயலலிதா சீக்கிரம் குணமாகி வீடு திரும்பவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலும்!" என்றது அடுத்த மெசேஜ்.
தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது. "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து பேரணி நடத்தி, பிரதமரிடம் மனு கொடுக்கப் போனார்கள் அதிமுக எம்.பி-க்கள். நேற்று இரவுவரை தம்பிதுரை உள்ளிட்ட பலரும் அப்பல்லோவில்தான் இருந்தார்கள். காவிரி விவகாரத்தில் பிரதமரிடம் இப்படி மனு கொடுக்கலாம் என்ற ஐடியாவைச் சொன்னது தம்பிதுரைதான். சசிகலாவிடம் இதைச்சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு உடனே டெல்லிக்கு கிளம்பிவிட்டார்கள். பிரதமரோ, அதிமுக எம்.பி.க்களை சந்திக்கவில்லை. பிரதமர் இல்லத்திலிருந்து எம்.பி.க்கள் வெளியே வந்ததும் தம்பிதுரை, சன் டி.வி.க்கு பிரத்யேகமான பேட்டி கொடுத்தார். அதிமுக-வினர் யாரும் சன் டி.வி.க்கு பேட்டி கொடுப்பது வழக்கம் இல்லை. தம்பிதுரை சன் டி.வி.க்கு தனியாக பேட்டி கொடுத்ததை அருகே நின்ற எம்.பி.க்களே ஆச்சரியத்துடன்தான் பார்த்தார்கள்" என்பதுதான் அந்த போஸ்ட்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ஆஃப்லைனில் போவதற்கு முன்பு தட்டிவிட்டுப்போன மெசேஜ் இது. "உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அநேகமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை உடனே அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. அதாவது, உள்ளாட்சிக்கு முன்பு அந்த தேர்தல் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்."

கருத்துகள் இல்லை: