வெள்ளி, 7 அக்டோபர், 2016

ராகுல் காந்தி சென்னை அப்போலோவுக்கு வருகை ..காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வந்த ராகுல் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
முதல்வரின் உடல் நலம் பற்றி அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடும் அப்பல்லோ நிர்வாகம் நேற்று வெளியிட்ட நீண்ட அறிக்கையில் முதல்வர் நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியதால் அதிமுக தொண்டர்களிடையே கவலை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்த ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடைய வருகை குறித்த தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களுக்குக் கூட கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. விமானம் மூலம் வந்தவர் காரில் அப்பல்லோ மருத்துவமனை சென்றார். ராகுலின் வருகையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து நிறுத்தப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்புடன் வந்த ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் சென்றார். மருத்துவமனைக்குச் சென்ற ராகுலால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவினரை சந்தித்தார் ராகுல் .மருத்துவர்கள் அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள். ஒ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், உள்ளிட்ட தமிழக அமைச்சர்களையும் அப்பல்லோவில் சந்தித்து பேசி விட்டு உடனே தனி விமானத்தில் கிளம்பிச் சென்றார்.  மின்னம்பலம.காம்

கருத்துகள் இல்லை: