சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும், சென்னை
அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்களுக்கு கூட இல்லாத முன்னுரிமை சசிகலா
மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கிடைத்து வருவது அதிமுக தொண்டர்களுக்கு
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கு, முதல்வரிடம்
இல்லாத உரிமை தனிப்பட்ட நபர்களுக்கு கிடைத்தது எப்படி என்பது
நடுநிலையாளர்கள் கேள்வி.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை, அண்ணா சாலை
பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அன்று முதல், அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர்தான், அப்பல்லோ
மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் தங்கியுள்ளனர். இவர்களுக்கு 2வது மாடியில்
தனி அறைகளே ஒதுக்கப்பட்டுள்ளனவாம். வேறு ஆண்கள் மட்டுமல்ல, பெண்
அமைச்சர்களுக்கு கூட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்குள் போக
அனுமதியில்லை என கூறப்படுகிறது. டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தவிர வேறு
யாரும் ஜெயலலிதா அருகில் செல்லகூட அனுமதியில்லை என்கிறது அப்பல்லோ
வட்டாரங்கள்.
பார்க்க முடியாமல் தவிப்பு
ஆனால், சசிகலா மட்டுமின்றி, அவரது உறவுக்காரர்களும் அப்பல்லோவில்
முகாமிட்டுள்ளதுதான் அதிமுக விசுவாசிகளுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தங்களது அபிமான தலைவரை பார்க்க முடியாமல் அமைச்சர்கள்
பலரும் புழுங்கி வருவதாக கூறப்படுகிறது.செவ்வாய்க்கிழமை டி.டி.வி. தினகரன்
மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி, சசிகலா
வழக்கறிஞர், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் அப்பல்லோ வந்து சென்றனர்.
ஜெய் ஆனந்த் இரவு 09.05 மணி அளவில் காரில் வெளியே சென்றுள்ளார். அதன்
பின்னர் 9.58க்கு காரில் உள்ளே சென்றுள்ளார்.
பன்னீர்செல்வத்தாலும் முடியலையாம்
நீலநிற சட்டை போட்ட ஒருவரை காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு 10 மணிக்கு
மீண்டும் வெளியே சென்றார். இதனிடையே சசிகலாவும் காரில் வெளியே புறப்பட்டு
சென்றுவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவுக்கு அடுத்த
இடத்தில் உள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட மருத்துவமனை வராண்டாவில்
இருப்பதாக கூறப்படுகிறது.
சாலைகளில் காத்திருப்பு
அமைச்சர்களுக்காவது மருத்துவமனை உள்ளே அனுமதி கிடைக்கிறது. ஆனால் அதிமுக
நிர்வாகத்தில் முன்னணியில் இருந்த பலருக்கு மருத்துவமனைக்கு உள்ளே கூட
அனுமதி கிடைக்கவில்லை. அவர்கள் சாலையில் காத்துக்கிடக்கிறார்கள். முன்னாள்
அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா போன்றோர் கோயில்களில் மண் சோறு
சாப்பிட்டுக் கொண்டுள்ளனர்.
ஆளுநரும் சந்திக்கவில்லையாம்
ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்றபோதுகூட வார்டு
வரைதான் அனுமதிக்கப்பட்டதாகவும், முதல்வரோடு பேசுவதற்கு வாய்ப்பு இல்லை
என்றும் கூறப்படுகிறது. அவரது அறிக்கையில் இடம்பெற்ற வரிகளை சுட்டிக்
காட்டி இவ்வாறு கூறப்படுகிறது. தனிப்பட்ட நபர் என்றால் இக்கேள்விகள் எழாது.
மாநில முதல்வர் என்பதால் அவரை உடனிருந்து கவனிப்போர் யார், அரசு
நிர்வாகத்தில் அங்கமாக இருப்போரை விட அவர்கள் மேலானவர்களா என்ற கேள்விகள்
சாமானியர்களுக்கும் எழுவது சகஜமானது.
மக்களின் கோபம்
அரசியல் கட்சி தலைவர்களான திருமாவளவன், வேல்முருகன் போன்றோரும் முதல்வர்
அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து எந்த ஒரு எதிர்க்கட்சியும்
கேள்வி எழுப்பவும் இல்லை. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இதையெல்லாம்
கேள்விக்கு உட்படுத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது மக்களின்
கோபத்தை, அதிமுகவினர் திசை திருப்பி விட வாய்ப்புள்ளதே எதிர்க்கட்சிகளின்
பயத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சின்னம்மா எல்லாம்
ஆளும் கட்சி வட்டாரத்திலோ, சின்னம்மா என்று அழைக்கப்படுபவரை பகைத்துக்
கொண்டு எப்படி காலம் தள்ளுவது என்ற கவலை. எனவே முதல்வரை யார்
கவனித்துக்கொள்கிறார்கள், அதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா என்ற
விவரத்தை வெளிக்கொண்டு வருவதில் கூட யாருக்கும் அக்கறையில்லாமல் போயுள்ளது.
Read more at: /tamil.oneindia.com/n
Read more at: /tamil.oneindia.com/n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக