வெள்ளி, 28 அக்டோபர், 2016

உணவு பாதுகாப்பு மசோதா துரோகம்: ராமதாஸ்!


தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்த உணவு பாதுகாப்பு மசோதா தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமலாகிறது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும், தமிழகத்தில் இச்சட்டம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், இச்சட்டத்தை ஏற்றதன் மூலம் மாநில உரிமைகள் தாரை வார்க்கப்பட்டுள்ளன. நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013ஆம் ஆண்டு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் பல மாநிலங்களுக்குச் சாதகமானது என்ற போதிலும், தமிழகத்துக்கு மிகவும் பாதகமானது ஆகும்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். 2011ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் 20.12.2011 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தியா போன்று கூட்டாட்சி தத்துவம் கடைபிடிக்கப்படும் நாடுகளில் மாநில அரசுகள் தான் மக்களுடன் நேரடியாகவும், நெருக்கமாகவும் தொடர்பு வைத்துள்ளன. இத்தகைய சூழலில் மக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். மாறாக மாநில அரசுகளின் அதிகார எல்லையை ஆக்கிரமிக்கவோ, அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தவோ மத்திய அரசு முயலக்கூடாது’ என ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால், தமிழக அரசின் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு ஏற்று கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் மத்திய அரசிடம் தமிழக அரசு சரணடைந்து விட்டது. உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை எதிர்த்து அதிமுக அரசு போராடியிருக்க வேண்டுமே தவிர, பணிந்து போயிருக்கக் கூடாது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அடுத்த சில ஆண்டுகளில் உணவு வழங்கும் முறையை கைவிட்டு, அதற்கு பதிலாக நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட வேண்டியிருக்கும். உணவு பாதுகாப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இந்த நிபந்தனையையும் செயல்படுத்தி உழவர்களுக்கும், மக்களுக்கும் மீண்டும் துரோகம் இழைக்குமா? என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்துள்ள நிலையில், உணவுக்காக மேலும் ரூ.1200 கோடி மானியம் வழங்குவது தமிழகத்தின் நிதி நிலைமையை கடுமையாகப் பாதிக்கும். மாறாக, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்துக்குச் சாதகமாக உணவு பாதுகாப்பு திட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: