வெள்ளி, 28 அக்டோபர், 2016

தமிழக அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியில் தொடரும் பால்குட பலிகள்!: .கைப்பற்றிய காவிகள் ? இன்னுமா சந்தேகம்?


உடல்நலம் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி சேலம் நெய்க்காரப்பட்டியில் நேற்று அதிமுகவினர் நடத்திய பால்குட ஊர்வலகத்தில்  பங்கேற்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். முதலமைச்சர் நலம்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடத்தப்படும் நிகழ்வுகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கிறது” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கரைபுரநாதர் கோவிலில் நேற்று நடைபெற்ற இந்த பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாட்டுக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்றுள்ளார். 3508 பேர் பங்கேற்றதாகக் கூறப்படும் நிகழ்வுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  
ஆனால், அத்தகைய வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் பால்குட ஊர்வலத்தில் பங்கேற்ற  முதியவர் ஒருவர் களைப்படைந்து மயங்கி விழுந்தார். அதன்பிறகும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மிகவும் தாமதமாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த பின் அந்த முதியவருக்கு ஆளுங்கட்சியினர் இழைத்த கொடுமையும், அவமரியாதையும்   மன்னிக்க முடியாதவை. பால்குட ஊர்வலத்தில் பங்கேற்கும் வரை அவரை அதிமுக உறுப்பினர் என்று கூறி, கட்சிக் கரை அடையாளத்துடன் கூடிய சால்வை அணிவித்து  ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர். ஊர்வலத்தில் மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்த பின்னர் அவர் மீது போடப்பட்டிருந்த சால்வை உள்ளிட்ட அதிமுகவை அடையாளப்படுத்தும் அனைத்தையும் ஆளுங்கட்சியினர் பறித்துச் சென்று விட்டனர். அதுமட்டுமின்றி, பால்குட ஊர்வலத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும், அந்த நிகழ்வை வேடிக்கைப் பார்க்க வந்த யாரோ உயிரிழந்து விட்டனர் என்றும் ஆளுங்கட்சியினர் செய்தி பரப்பியுள்ளனர். ஒருவரின் மரணத்தைக் கூட அங்கீகரிக்காத இந்த செயல் மனிதத் தன்மையற்றதாகும்.
சேலம் மெய்க்காரப்பட்டி நிகழ்வுக்கு இரு நாட்கள் முன்பு அக்டோபர் 24&ஆம் தேதி திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி கமலம்மாள் என்ற மூதாட்டி காலமானார். மேலும் 17 பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆனால், கமலம்மாள் உயிரிழந்ததைப் பற்றி கவலைப்படாமல் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டபடி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைந்து இயல்பான பணிகளை கவனிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். தொடர்சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் நிம்மதியளிக்கின்றன. ஜெயலலிதாவைக் காப்பாற்ற பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவது ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் அதிமுகவினர் பல்வேறு வகையான வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் நம்பிக்கை உண்டா… இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, அவர்களின் நம்பிக்கையை குறை சொல்ல முடியாது. அதேநேரத்தில், முதலமைச்சரின் உடல்நலனுக்காக நடத்தப்படும் எந்த வழிபாடாக இருப்பினும் அது தொண்டர்களால், இயல்பாகவும், சுயவிருப்பத்துடனும் மேற்கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும்.
ஆனால், ஆளுங்கட்சியினரால் நடத்தப்படும் வழிபாடுகள் அப்படிப்பட்டவையாக தோன்றவில்லை. அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து வருவதைப் போல பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்களை அழைத்து வரும் நிர்வாகிகள் அவர்களுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு ஆடைகள், உணவு, பணம் ஆகியவற்றை வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி, பால்குடம் எடுத்து வருபவர்கள் வழிபாடு முடிந்தவுடன் குடத்தை அவர்களே எடுத்துச் செல்லலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறப்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாலும், 100 ரூபாய் கூட அவர்களுக்கு பெருந்தொகை தான் என்பதாலும் உணவு மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற நிகழ்வுகளில் மக்கள் அதிகம் கலந்து கொள்கின்றனர். திருவண்ணாமலையில் பால்குடங்களை கைப்பற்றுவதற்காக பெண்கள் முண்டியடித்து சென்ற போது தான் நெரிசல் ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்தார். சேலம் நெய்க்காரப்பட்டியிலும் நெரிசல் மற்றும் மருத்துவ   வசதி இல்லாததால் தான் முதியவர் உயிரிழந்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் நடைபெற்ற  பால்குட ஊர்வலங்களின் போது ஏற்பட்ட இரு உயிரிழப்புக்கும் அதிமுக தான் பொறுப்பேற்க வேண்டும்.
சாதாரண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பதற்குக் கூட ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கும்  அரசும், காவல்துறையும் அதிமுகவினர் நடத்தும் பால்குட ஊர்வலங்களை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிப்பதன் மர்மம் புரியவில்லை. திருவண்ணாமலை உயிரிழப்புக்காக காவல் ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்ததன் மூலம் இந்த பழிகளில் இருந்து அரசும், காவல்துறையும் தப்பிவிட முடியாது.
முதலமைச்சர் நலம் பெறுவதற்காக நடத்தப்படும் பால்குட ஊர்வலங்கள் மற்றும் வழிபாடுகளில்  உயிரிழப்புகள் ஏற்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இனியும் இத்தகைய உயிரிழப்புகள்  ஏற்படாமல் தடுக்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதிமுக மேலிடமும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவோருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்   சமுகபட்டகம்

கருத்துகள் இல்லை: