வியாழன், 15 செப்டம்பர், 2016

Open Source ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்

richard stallmanஎழுத்தாளர்: முத்துக்குட்டி தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம் பிரிவு: தொழில்நுட்பம் வெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2016
வண்டியில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றிற்கு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். எதிர்பாராமல் வண்டி பஞ்சராகி நின்று விடுகிறது. அடடா! இது என்ன சோதனை என்று நினைத்த படி, பக்கத்தில் உள்ள பஞ்சர் பார்க்கும் கடைக்கு வண்டியைக் கொண்டு போய் விடுகிறீர்கள். திடீரென ஒரு கை உங்கள் கையைப் பற்றுகிறது. 'சார்! என் பெயர் குமார். நீங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியைத் தயாரித்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வண்டி வாங்கி விட்டு வேறு ஒருவரிடம் பஞ்சர் பார்க்க விட முடியாது. பாருங்கள் - இந்தக் கடை ஊழியரால் எங்கள் வண்டி டயரைக் கழற்றவே முடியாது' என்கிறார். நீங்கள் திரும்பிப் பார்க்கிறீர்கள். அவர் சொன்னது போலவே, கழற்ற முடியவில்லை. 'இதென்ன அநியாயம்? காசு கொடுத்து வண்டி வாங்கிய பிறகு, அந்த வண்டியைக் கழற்ற எனக்கு உரிமை கிடையாதா?' என்று கேட்பீர்கள் இல்லையா? 'ஆமாம் சார்! உங்கள் வண்டியை நாங்கள் மட்டும் தான் சரி பார்க்க முடியும். அதற்கும் நீங்கள் தனியாக வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று பணம் கட்டினால் மட்டும் தான் வண்டியைத் தொட்டே பார்ப்போம் – இல்லாவிட்டால் நீங்கள் ஓட்டை வண்டியோடு உலாவ வேண்டியது தான்! பாருங்கள், நீங்கள் இதற்கெல்லாம் சம்மதம் சொல்லித் தான் வண்டி வாங்கியிருக்கிறீர்கள்' என்று ஓர் ஆவணத்தைக் காட்டுகிறார் குமார். 
இது ஒரு கற்பனை தான்! வண்டி மட்டுமல்ல, டிவி, செல்போன், பேன், மிக்சி, கிரைண்டர் என்று எந்தப் பொருளானாலும் சரி, வாங்கிய பிறகு அதன் முழு உரிமையும் வாடிக்கையாளருக்குத் தான்! அதை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, என்று என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதை எல்லாம் செய்வதற்கு பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் அனுமதியெல்லாம் தேவை இல்லை.
ஆனால் இந்த உரிமை நீங்கள் வாங்கும் புரோபரைட்டரி சாப்ட்வேருக்குக் கிடையாது. புரோபரைட்டரி சாப்ட்வேரா – அப்படி என்றால் என்று குழம்ப வேண்டாம். இந்த உரிமையை உங்களுக்குக் கொடுக்காத எல்லா சாப்ட்வேரும் புரோபரைட்டரி சாப்ட்வேர் தான்! எ.கா. உங்களுக்கு நன்கு தெரிந்த விண்டோஸ். விண்டோசில் இயங்கும் உங்கள் கணினியின் ஓஎஸ் பழுதாகி விட்டால், விண்டோசில் என்ன பிரச்சினை என்று பார்க்கவே முடியாது - விண்டோசை நடத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் கட்டியிருந்தால் ஒழிய! விண்டோசுக்கு மட்டுமல்ல, புரோபரைட்டரி சாப்ட்வேர் எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கும் இதே கதை தான்! இது என்ன அக்கிரமமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க வந்த நாயகன் தான் ஓப்பன் சோர்ஸ்!
அதென்ன ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறீர்களா? ஓப்பன் சோர்ஸ் கதைக்கு முன்னால் - சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா? கிட்டத்தட்ட இதே கதை தான்! ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா? அப்படித் தெரிந்து கொள்ள அனுமதிக்கும் மென்பொருட்களை ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறார்கள். தமிழில் திறந்தமூல மென்பொருள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது!
இதென்ன புதுக்கதை? நான் ஒரு டிவியோ வண்டியோ வாங்கினால் கூட, உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று பார்க்கும் உரிமை எனக்கு இருக்கத்தான் செய்கிறது. அதே போல் தானே மென்பொருளுக்கும்! ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருக்குத் தானே சொந்தம்? அவரால் அப்படி எல்லா மென்பொருட்களையும் திறந்து பார்க்க முடியாதா என்றால் முடியாது என்பது தான் உண்மை. என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கிய பிறகு அதில் என்னென்ன இருக்கிறது என்று வாடிக்கையாளர் பார்க்கக் கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்? இதைக் கேள்வி கேட்க யாருமே இல்லையா? இதுவரை இதைக் கேள்வி கேட்ட ஒருவரும் இல்லையா? என் மென்பொருள் - என் உரிமை என்று உரிமைப் போராட்டத்திற்குத் தயாராகிறீர்களா?
கொஞ்சம் உங்கள் போராட்டத்தை ஒத்தி வையுங்கள். மென்பொருளில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கும் உரிமை எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தலைமுறைக்கு முன்னரே போராடத் தொடங்கிவிட்டார்கள். அப்படிப் போராடத் தொடங்கியவர்களுள் முக்கியமானவர் தான் ரிச்சர்டு ஸ்டால்மேன். ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள், படித்த பின் நன்றாக இருக்கிறதே என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் படிக்கக் கொடுக்கிறீர்கள். திரைப்பட சிடி ஒன்று வாங்குகிறீர்கள் - பார்த்து விட்டு நண்பர் ஒருவருக்குக் கொடுக்கிறீர்கள். இதே போல் விண்டோஸ் போன்ற மென்பொருள் சிடி ஒன்றை வாங்குகிறீர்கள். உங்கள் கணினியில் நிறுவிய பிறகு 'நன்றாக இருக்கிறதே! நண்பருக்கும் கொடுக்கலாமே!' என்று நினைத்தால் அது முடியாது. உங்கள் கணினியில் (அதுவும் ஒரு முறை தான்) பயன்படுத்த முடியும். இது அநியாயமாக அல்லவா தெரிகிறது என்று குரல் கொடுத்துப் போராடி வருபவர் தான் அவர். 'ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருடையது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மென்பொருள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தீர்மானிக்கும் உரிமை வாடிக்கையாளருக்குத் தான் உண்டே தவிர, மென்பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கு அல்ல' என்பது அவருடைய வாதம்.
ஒருவர் கையில் பணம் இருந்தாலே அது நல்ல பணம் தான்! அதைப் பணம் என்று சொன்னாலே போதும். 'வெள்ளைப் பணம்' 'வெள்ளைப் பணம்' என்று சொல்ல வேண்டிய தேவையில்லை அல்லவா? வருமான வரி கட்டப்படாமல் சேர்க்கப்படும் பணத்தை வேண்டுமானால் கருப்புப் பணம் என்று சொல்லலாம். அதே போல், உருவாக்கப்படும் எல்லா மென்பொருட்களுமே 'ஓப்பன் சோர்சாக'த் தான் இருக்க வேண்டும். எனவே, ஓப்பன் சோர்ஸ் ஓப்பன் சோர்ஸ் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. ஓப்பன் சோர்சாக மென்பொருளை உருவாக்க மாட்டேன் என்று சொல்லும் கணினி வல்லுநர்களை வேண்டுமானால் தவறு செய்பவர்கள் என்று சொல்லலாம் என்று பார்க்கிறார் ரிச்சர்டு ஸ்டால்மேன். அவர் சொல்வதும் சரியாகத் தானே தெரிகிறது.
இதனால் தான், அவர் 'ஓப்பன் சோர்ஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'ஃப்ரீ சாப்ட்வேர்' என்று சொல்கிறார். அதென்ன 'ஃப்ரீ'? விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர் என்று நம்மூரில் இருப்பது போல, விலையில்லா மென்பொருள் என்று நினைத்து விடாதீர்கள். இங்கு 'ஃப்ரீ' என்பது இலவசம் என்னும் அர்த்தத்தில் இல்லை. 'ஃபிரீ' என்பது 'ஃபிரீடம்' என்னும் 'கட்டற்ற சுதந்திரத்தின்' சுருக்கம். அதாவது ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு, அந்த மென்பொருளைத் திறந்து அதன் மூல நிரலைப் பார்க்கும் உரிமை, திருத்தும் உரிமை, மாற்றும் உரிமை ஆகிய கட்டற்ற உரிமைகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு மென்பொருளும் 'ஃபிரீ சாப்ட்வேராக' இருக்க வேண்டும் என்கிறார் அவர். அட! இதுவும் சரிதானே! என்று தோன்றுகிறதா?
அனைவருக்கும் பயன்படும் சில கட்டற்ற மென்பொருட்கள்
1) மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசர்
2) லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
3) லிபர் ஆபீஸ் (மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்று)
4) விஎல்சி மீடியா பிளேயர்
5) கிம்ப் (போட்டோஷாப்பிற்கு மாற்று)
6) கோப்புகளை அனுப்பப் பயன்படும் ஃபைல்சில்லா
7) தண்டர்பேர்டு (அவுட்லுக்கு மாற்று)
8) ஒலிப்பதிவுக்குப் பயன்படும் அடாசிட்டி
இப்படிப்பட்ட சரியான வாதங்களை முன்வைத்து அவர் தொடங்கியது தான் 'ஃபிரீ சாப்ட்வேர் பவுண்டேஷன்' என்னும் அமைப்பு. 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இப்போது உலகம் முழுக்கக் கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளையிலும் ஃபிரீ சாப்ட்வேர் எனப்படும் கட்டற்ற மென்பொருளுக்கு ஏராளமான கணினி வல்லுநர்கள் இலவசமாக உழைத்து வருகிறார்கள்.
இப்படி உலகம் முழுக்க கட்டற்ற மென்பொருளுக்கு உழைக்கும் கணினி வல்லுநர்கள் மூலம் தான் கணிப்பொறியில் படம் பார்க்க உதவும் விஎல்சி மீடியா பிளேயர், இணையத்தில் உலாவ உதவும் பயர்பாக்ஸ் பிரெளசர், விண்டோசுக்குப் போட்டியாகத் திகழும் லினக்ஸ், இளைஞர்கள் பலர் வேலை தேடப் படிக்கும் ஜாவா, பைத்தான் – என்று பல்வேறு மென்பொருட்கள் இலவசமாகவும் கட்டற்ற வகையிலும் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டிலும் இதற்காக நிறைய ஐ.டி. வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள். https://fsftn.org/, http://www.kaniyam.com/ ஆகிய இணையத் தளங்கள் மூலம் எளிய தமிழில் கணினி சார்ந்த கட்டுரைகள், மின் நூல்கள் ஆகியவற்றை இலவசமாக வெளியிடுவது, கல்லூரிகளில் இலவசக் கருத்தரங்கங்கள் நடத்துவது எனப் பல்வேறு கணினி சார்ந்த விழிப்புணர்வு வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் அவர்களுடன் இணைந்து கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்திற்கும் வலு சேர்க்கலாம் - கன்னித் தமிழையும் கணினித் தமிழாக்கலாம்.
(கட்டுரை - புதிய வாழ்வியல் மலர் செப். 1-15 2016 இதழில் வெளியானது)
- முத்துக்குட்டி

கருத்துகள் இல்லை: