சனி, 17 செப்டம்பர், 2016

தமிழகத்துக்கு மானிய விலை அரிசி கிடைக்காது: மத்திய அமைச்சர்


minnambalam.com : தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தாத தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு, மானிய விலையில் அரிசி வழங்குவதை நிறுத்தப் போவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் உணவு வழங்குவதை அடிப்படை உரிமையாக வரையறை செய்யவும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ ரூபாய் ஒன்று முதல் ரூபாய் மூன்று விலையில் வழங்கப்படும். இந்த சட்டம் 2013இல் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதற்கு பல மாநிலங்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தன.
‘இது, மாநிலங்களின் உரிமையில் தலையிடும் செயல். ஏற்கனவே மானிய விலையில் அரிசி வழங்கி வரும் மாநிலங்களுக்கு இச்சட்டத்தால் பாதிப்பு ஏற்படும்’ என்று அம்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், தமிழகம் மற்றும் கேரளாவை தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை செயல்படுத்தி வருகின்றன.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் இந்த சட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் கோரி வருகின்றன. இந்நிலையில், பொது வினியோக திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், “தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகமும், கேரளாவும் செயல்படுத்தாமல் உள்ளன. நவம்பர் மாதம் முதல் செயல்படுத்துவதாக முன்பு கேரளா கூறியது. இப்போது டிசம்பர் வரை அவகாசம் கேட்கிறது. வளர்ந்த மாநிலங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. தமிழகம், கேரளா போன்றவை மிக வளர்ந்த மாநிலங்கள். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் அவற்றுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்? அவை, சாக்கு போக்கு சொல்வது ஏன்? இதே நிலைமை நீடித்தால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. அந்த இரு மாநிலங்களுக்கும், மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்குவது நிறுத்தப்படும். அதன்பின், மானியம் இல்லாமல் அரிசியை சந்தை விலையில்தான் அந்த மாநிலங்கள் வாங்க முடியும்” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழக உணவுத்துறை அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். “உணவு பாதுகாப்பு சட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தமிழக ரேஷன் கடைகளில் 1.91 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் தலா 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம் இணைவதற்கு மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டது. தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், உணவுத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடுவர். எனவே, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கேட்கப்படும். அந்த சட்டத்தை அமல்படுத்தினாலும், ரேஷன் கடைகளில் இலவச அரிசி தொடரும். அதனால் ஏற்படும் கூடுதல் செலவை தமிழக அரசே ஏற்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை: