
முதன் முதலில் தன்னுடைய வெறுப்பரசியலை தொடங்கியது, கர்நாடக – மராட்டிய எல்லையோரம் இருக்கும் பெல்காம் நகர் பிரச்சினையில்தான். சிவ சேனையின் அடியொற்றி தொடங்கப்பட்டாலும் சிவ சேனைதான் கன்னட ரக்ஷன வேதிகேவின் முதல் எதிரி. பெல்காம் தங்களுக்கு வேண்டுமென்று சிவசேனையும் கர்நாடகத்துக்கே என க.ர.வே யும் மோதிக்கொண்டன. பெல்காமை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் போட்ட பெல்காம் மேயர் மீது கருப்பு மை ஊற்றி (அதே சிவ சேனை பாணிதான்) ஊடகங்களில் இடம்பிடிக்க ஆரம்பித்தது.
திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்தும் இந்த அமைப்பு போராடியது. ஆனால் அது கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், காவிரி நீர்ப் பிரச்சினையை பூதாகரமாக்கி தன்னுடைய வெறுப்பரசியலை முடுக்கி விட்டுள்ளது இந்த அமைப்பு.
கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் வன்முறைகளில் இந்த அமைப்பின் பங்கு கணிசமானது. பெங்களூருவில் தமிழ் இளைஞரை கல்லூரிக்குச் சென்று தாக்கியது இந்த கும்பல்தான். அடுத்து முதியவர் என்றும் பாராமல் அவரை அடித்து வீழ்த்தி ரசித்ததும், ஓட்டுநர் ஒருவரை நிர்வாணமாக்கி அதை ரசித்து படமாக்கி சமூக ஊடகங்களில் விட்டதும் இந்த கும்பல்தான்.
வெறுப்பரசியலை தூக்கிப் பிடிக்கும் இந்த அமைப்புகளின் செயல்பாட்டுக்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் பழிஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக