புதன், 14 செப்டம்பர், 2016

கர்நாடகா வன்முறை: காய்கறித் தேக்கம் .. கூட்டுறவு பசுமை அங்காடிகள் மூலம் விற்க முடிவு !


minnambalam.com :தமிழகத்தில் விளைந்த காய்கறிகள் கர்நாடக வன்முறையால் தேங்காமல் இருக்க, அதை பசுமைப் பண்ணையில் விற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஓசூர் எல்லைப்பகுதியில் தமிழ்நாடு பதிவு எண்கள்கொண்ட காய்கறி வாகனங்கள், கர்நாடக மாநிலத்துக்குள் நுழையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி சாகுபடி செய்பவர்கள் எவ்விதச் சிரமமுமின்றி காய்கறிகளை விற்பனை செய்திடவும், அதற்கு உரிய நியாயமான விலை கிடைப்பதற்கும், கூட்டுறவு அங்காடிகளின் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள்மூலம் அவற்றை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் சென்னையிலுள்ள காமதேனு, சிந்தாமணி, காஞ்சிபுரம் மற்றும் வடசென்னை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகச் சாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய நிறுவனங்கள் நடத்தும் 45 பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள், திருச்சியில் 8, மதுரையில் 4, கோவையில் 10 என மொத்தம் 64 பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள்மூலம் விற்பனை செய்யப்படும். இதன்படி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து செவ்வாய்க்கிழமை 12 மெட்ரிக் டன் காய்கறிகள், கூட்டுறவுத் துறைமூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: