

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ச்சியாக தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஆனால், தமிழக பயணிகள் ஓசூருக்குப் போய் அங்கிருந்து கர்நாடக பேருந்துகளை பிடித்து பயணம் போனார்கள். இப்போது அதுவும் இல்லை.
கடந்த 11ஆம் தேதி மட்டும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அன்று இரவு முதல் மீண்டும் நிறுத்தப்பட்டன. அங்கு பதற்றம் தணிந்த நிலையிலும் நேற்று 11ஆவது நாளாக தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. அதே போல கடந்த 12ஆம் தேதி கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் 12ஆம் தேதி முதல் கர்நாடக அரசு பஸ்களும் ஓசூருக்கு இயக்கப்படவில்லை. நேற்று ஆறாவது நாளாக கர்நாடக அரசு பஸ்கள் ஓசூருக்கு இயக்கப்படவில்லை. இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக வன்முறைகளால் அங்கிருந்து வரும் ஏராளமான மக்கள் இன்னும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் நிலையில்
அவர்கள் அங்குள்ள கர்நாடக அரசு பஸ்களில் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை வருகிறார்கள். அங்கிருந்து தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரையில் நடந்து வந்து அங்கிருந்து பஸ்களில் ஏறி தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். கர்நாடகாவில் இருந்து வரும் தமிழர்களுக்கு தேவையான உணவுகள், தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள் மற்றும் ஓசூர் நகராட்சி சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(எல்லைக் கடந்து வரும் தமிழகத்தவர்கள்)
தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரையிலும், கர்நாடக அரசு பஸ்கள் அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நேற்றைய முழு அடைப்பின் காரணமாக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெங்களூரு மத்திய மண்டல ஐ.ஜி. சீமந்தகுமார், பெங்களூரு எஸ்.பி. ஆமீத்சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் அந்தப்பக்கமும், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் இந்தப்பக்கமும் காவல் காத்தனர். ஏதோ இந்தியா - பாகிஸ்தான் மாதிரி ஆகிவிட்டது கர்நாடக - தமிழக எல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக