வெள்ளி, 16 செப்டம்பர், 2016

கர்நாடக கலவரம்: கொள்ளைக் கும்பல் பின்னணி அம்பலம்!

மின்னம்பலம்.காம் :கடந்த திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த சிலமணி நேரங்களில் பெங்களூரு, மாண்டியா, மைசூர் ஆகிய நகரங்கள் பற்றியெரிந்தன. மாலை ஐந்து மணியளவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு கலவரக்காரர்கள் இறந்தபோதிலும் பின்பு, உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. ஆனால் பேருந்துகள், லாரிகள் தீவைக்கப்பட்டன, வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன, வழியில் மறிக்கப்பட்ட பல மக்களிடமிருந்து பணமும் நகைகளும் கடிகாரங்களும்கூட கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. கலவரம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டநிலையில், காவிரி தொடர்பாக எழுந்த உஷ்ணத்தை சட்டவிரோதக் குழுக்களும் கொள்ளையர்களும் சமூக விரோதிகளும் பயன்படுத்தியிருக்கும் உண்மை வெளியாகியிருக்கிறது. கலவரம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளையை ஒன்றே நோக்கமாகக் கொண்ட கும்பல்கள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்து, அவர்களை வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது கர்நாடக காவல்துறை.


(விடீயோவில் சிக்கிய ரவுடி)
கர்நாடக மாநிலத்தின் முன்னணி நாளிதழான ‘விஜய் கர்நாடகா’ இந்த கர்நாடகா கலவரம்பற்றிய பல கசப்பான உண்மைகளை ஆதாரங்களோடு வெளியிட்டிருக்கிறது. தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் தெருவுக்கு வந்த வன்முறை கொள்ளைக் கும்பல் தங்களுக்கிடையிலான வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும் வசூலிக்கவும் இந்த காவிரி உணர்வை பயன்படுத்திக் கொண்டனர். வணிக நிறுவனங்களுக்குள் சென்று கடையை எரிக்காமல் விட வேண்டும் என்றால் இரண்டு லட்சம் பணம் வேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர். குறைவான நேரத்தில் இந்த அளவு வன்முறைகள் ஏற்பட என்ன காரணம்? என ஆய்வுசெய்த போலீசார் எவ்வளவுபேர் திரண்டனர் என ஆய்வு செய்தபோது வன்முறைக்காக திரண்ட கும்பல் குறைவாகவே இருந்திருக்கிறது. சில அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு சரி. ஆனால் பல கட்சித் தொண்டர்களிடமும் இருந்த காவிரி தொடர்பான உணர்வெழுச்சியை ஒரு கும்பல் மிக நுட்பமான வன்முறையாக மாற்றியிருக்கிறது.

(மசாலா மூடைகளை அள்ளிச் செல்லும் கும்பல்)
உண்மையில், எரிந்துகொண்டிருந்த வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களைவிட வன்முறையில் ஈடுபட்ட கும்பலின் எண்ணிக்கை குறைவு. அவர்கள் கத்தி, கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு பெங்களூரு நகர கடைத்தெருவுக்குள் சுற்றிவருகிற காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. போராட்டம் நடத்துகிறவர்களுக்கு ஆயுதங்கள் எதற்கு என்ற கேள்விதான் மிக முக்கியமானது. தனிப்பட்ட நோக்கங்கள், கொள்ளை என, பல நோக்கங்களைக்கொண்ட கும்பல் ஒன்று, ஒரு கடையின் உரிமையாளர் முன்னிலையில் அவரது ஆட்டோவை தீ வைத்து எரித்துள்ளது. மிரண்டுபோய் நின்ற உரிமையாளரிடம் மேலும் கடைகளை எரிக்காமல் இருக்க இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசியுள்ளது அந்தக் கும்பல். இரண்டு லட்சத்தை பெற்றுக்கொண்ட கும்பல் அமைதியாக, கடையை எரிக்காமல் வெளியேறுகிறது. கிரிநகர் பகுதியில் உள்ள ஏ.வி.மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குள் புகுந்த கும்பல் மூடைமூடையாக அங்கிருந்த மசாலாக்களை அள்ளிச் சென்றது. இந்த வன்முறைக்குப் பின்னணியில் தொழில் போட்டி உள்ளதாக விசாரணையில் தெரிவந்துள்ளது.
வசூல் பஞ்சாயத்தே காரணம்!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ஆங்காங்கே விநாயர் சிலைகளை வைத்து கரைப்பது வழக்கம். இதற்காக, உள்ளூர் வணிக நிறுவனங்களிடம் வசூலிப்பது வாடிக்கை! இதற்கான ஏ.வி.மசாலா நிறுவன உரிமையாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வேண்டும் எனக் கேட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி குழு. ஆனால் அவர் குறைந்தளவுள்ள ஒரு தொகையைக் கொடுத்தார். இந்த நிறுவனத்தை சூறையாடிவர்களில் முக்கியமானவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு பணம் கேட்டுக் கிடைக்காமல் போனவர்கள். திட்டமிட்டு கே.பி.என். பணிமனை எரிக்கப்பட்ட யாருடைய தூண்டுதலும் காரணமாக இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இப்போதைக்கு சிசிடிவி காட்சிகள், புகைப்படங்கள், சமூக வலைதளப் பதிவுகள், மிரட்டல்களுக்கு உள்ளானவர்களைக் கொண்டு சமூக விரோதக் கும்பல்களை வேட்டையாடி வருகிறது கர்நாடக அரசு. இவர்களில் பலர் தலைமறைவாகிவிட்டநிலையில் இவர்கள்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது கர்நாடக காவல்துறை!

கருத்துகள் இல்லை: