செவ்வாய், 13 செப்டம்பர், 2016

பெங்களூரு :நிறையத் தியரிகள் .... எதை நம்புவது எதை விடுவது என்று தெரியவில்லை.

nisaptham.com  :நேற்று மதியத்திற்கும் மேலாக ராஜாஜி நகர், மைசூரு ரோடு உள்ளிட்ட இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இன்று காலை நிலவரப்படி மாகடி சாலை, விஜயநகர், சந்திரா லே-அவுட், யஸ்வந்த்புரா, பீனியா, ராஜாஜி நகர், நந்தினி லே-அவுட் உட்பட பதினாறு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. காலை பதினோரு மணி வரைக்கும் குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நேற்றைய இரவிலும் நகரம் அமைதியாகவே இருந்திருக்கிறது. நேற்றிரவு அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது போது நேரலை தமிழ் செய்திக்காக ஒரு தொலைக்காட்சியிலிருந்து அழைத்தார்கள். எம்.ஜி.ரோட்டில் ஆரம்பித்து கோரமங்களா, ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட், மங்கமன்பாளையா, பொம்மனஹள்ளி வழியாக வீட்டிற்கு வந்தேன் என்றும் இந்தப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அசம்பாவிதம் எதுவும் தென்படவில்லை எனவும் வட பெங்களூரில் கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருவதாகச் செய்திகள் வருகின்றன என்று சொல்லிக் கொண்டிருந்த போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள்.
எழுத்தாளர் சொக்கனுக்கும் இதே அனுபவம்தான். அவர் பிடிஎம் லே-அவுட், சில்க் போர்ட் போன்ற பகுதிகளில் பிரச்சினை இல்லை என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது. தன்னைப் பேசவே அனுமதிக்கவில்லை என்றார். 
ஊடகங்கள் காரஞ்சாரமான செய்திகளைத்தான் விரும்புகின்றன. 
தமிழனுக்கும் கன்னடத்தவனுக்கும் பிரச்சினையென்று வரும் போது பெங்களூர்வாசிகளைவிடவும் அதிகம் பாதிக்கப்படப் போவது சாம்ராஜ்நகரிலும், குண்டுலுபேட்டிலும், நரசிங்கபுரத்திலும் என தமிழக கர்நாடக எல்லை முழுக்கவும் ஐந்து ஏக்கரும் பத்து ஏக்கருமாக குத்தகைக்கு இடம் பிடித்து வேளாண்மை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள்தான். பெங்களூரு மட்டுமே கர்நாடகா இல்லை. பெங்களூரில் வீட்டைப் பூட்டிக் கொண்டு இருந்து கொள்ளலாம். ஒரு மாதம் வேலைக்கு விடுப்பு எடுத்தாலும் கூட எதுவும் ஆகிவிடாது. ஆனால் மேற்சொன்ன பகுதிகளில் இதெல்லாம் சாத்தியமில்லை. விவசாய பூமிகளை அழிப்பதும், டிராக்டர்களை அடித்து நொறுக்குவதும், தமிழ் விவசாயிகளின் கால்நடைகளை நாசம் செய்வதும் நிகழ்ந்தால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கரைந்து போய்விடும். தமிழகத்தில் அதிகபட்சமாக ஐந்து சதவீத கன்னடர்கள் வாழக் கூடும். ஆனால் கர்நாடகத்தில் வாழக் கூடிய தமிழர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் மிக அதிகம். அவர்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஊடகங்கள் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நேற்றிலிருந்து கருந்தேள் ராஜேஷ், சொக்கன், சிவராம் உள்ளிட்ட பெங்களூர் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்த்த போது அவர்கள் சொல்வதையெல்லாம் வெளியில் இருப்பவர்கள் யாரும் நம்புவதாகவே தெரியவில்லை. எனக்கும் இதே அனுபவம்தான். இதே ஊரில் வாழ்கிறவர்கள் சொல்வதைவிடவும் ஊடகங்கள் சொல்வதைத்தான் மனம் நம்புகிறது. இவர்கள் பெங்களூருவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கிறவர்கள். சொக்கன் இத்தகையவர்களிடம் விவாதிக்க முடியாது என்று தான் எழுதியவற்றையெல்லாம் அழித்துவிட்டார். கருந்தேள் ராஜேஷ் இன்றைக்கும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
‘கே.பி.என் பேருந்துகளை எரித்தது உண்மையில்லையா?’ ‘தமிழ் வண்டிகளை கன்னட வெறியர்கள் தாக்கியது உண்மையில்லையா?’ ‘தமிழ் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கப்பட்டது உண்மையில்லையா?’ என்று கேட்டால் இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. நடந்திருக்கின்றன. மறுத்து யாரைக் காப்பாற்றப் போகிறோம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டியதில்லை என்றும் யாரும் சொல்லவுமில்லை. ஆனால் ஊடகங்களில் இங்கேயிருக்கும் நிலைமையைவிடவும் அதீதமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. 
நன்றாகத் தெரிந்தவர்கள் கூட ‘பொறுப்பில்லாமல் எழுதாதீர்கள்’ என்றும் ‘சப்பைக் கட்டு கட்டாதீர்கள்’ என்றும் சொல்லும் போதுதான் வேதனையாக இருக்கிறது. பிரச்சினைகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனாலும் பதற்றப்படாமல் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வதுதான் பொறுப்பானதாக இருக்க முடியுமே தவிர, ‘இங்கே எங்களை எல்லாம் கொல்லுகிறார்கள்; அங்கே நீங்கள் கன்னடத்தவர்களை அடித்து நொறுக்குங்கள்’ என்று வெளியூர்க்காரர்களை உசுப்பேற்றுவது பொறுப்பாக இருக்காது. 
பெங்களூருவில் பதற்றம் இருக்கிறது. வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த பெங்களூருவிலும் இப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அலுவலங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.
தமிழக வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் லாரி ஓட்டுநர்கள். ஆனால் வீடுகளில் வசிப்பவர்கள் மீதும் பணியாளர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் இல்லை. டயர்களை எரித்து நடத்தப்பட்ட போராட்டங்களைக் கூட வாட்ஸப்பில் வாகனத்தை எரித்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட். அங்கே டயர்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வாட்ஸப்பில் தமிழக வண்டி எரிக்கப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.
நேற்றிரவு பத்தரை மணிக்கு பெங்களூரில் வாழும் தமிழ் செய்தியாளர் ஒருவரிடம் பேசிய போது ‘மத்தியானம் வரைக்கும் ராமேஸ்வரத்தில் கன்னடத்துக்காரர் தாக்கப்படுவதைத்தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாங்க...கவனிச்சீங்களா?’ என்றார். அலுவலகத்தில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. வெறியேற்றியிருக்கிறார்கள். மதியத்திற்கு மேலாக பிரச்சினைகள் ஆரம்பித்திருக்கின்றன. இன்று காலையிலிருந்து கவனித்ததில் நேற்று பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ‘பூர்விகா மொபல் நிறுவனத்தை உடைத்தார்கள்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஹிண்ட் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து அணைத்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டேன்.
அதே ஊடக நண்பரிடம் ‘நாளைக்கு நிலைமை சகஜமாகிடுமா?’ என்று கேட்ட போது ‘சந்தேகம்தான்’ என்றார். நல்லவேளையாக நேற்றைய தினத்தைவிடவும் இன்றைய தினம் பரவாயில்லை. அலுவலகத்தில் மிகக் குறைவானவர்களே வந்திருக்கிறார்கள். நகரப் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சில மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், ஒன்றிரண்டு உணவு விடுதிகள் செயல்படுகின்றன. ஆட்டோக்கள், மகிழ்வுந்துகள், இருசக்கர வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. திரும்பவும் சொல்கிறேன். இது ஓசூர் பிரதான சாலை, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் பனிரெண்டு மணியளவிலான நிலவரம். ‘தெருவுக்குள் சுற்றிப்பார்த்துவிட்டு வந்து நகரமே நல்லா இருக்குன்னு எழுதுறியா?’ என்று நக்கலாகக் கேட்டவர்களுக்காக மேற்சொன்ன இடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட பதினேழு கிலோமீட்டர் தூரம் இதுதான் நிலவரம். வட பெங்களூரில் நிலவரம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.
இந்தக் கலவரத்தில் அரசியல் கட்சிகள் பின்னணியில் இருக்கின்றன; சில இயக்கங்கள் வலு சேர்க்கின்றன, அவர்கள்தான் இதையெல்லாம் ஒருங்கிணைக்கிறார்கள் என்றெல்லாம் நிறையத் தியரிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. எதை நம்புவது எதை விடுவது என்று தெரியவில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்று- யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நானெல்லாம் வக்காலத்து வாங்கி எழுதி எதுவும் நடக்கப் போவதில்லை. முடிந்தளவுக்காவது பதற்றத்தைக் குறைக்கலாம் என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதேசமயம் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறேன் என்பதற்காக எதையும் இட்டுக்கட்டியும் சொல்லவில்லை. இடங்கள் நேரம் குறித்துத் தெளிவாக எழுதியிருந்தேன். எழுதியிருக்கிறேன். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தமிழனை அடி வாங்கி வைக்க விரும்புகிறவனாகவும் நான் இல்லை. என்னை நம்பலாம்.
ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். Be safe. அதே சமயம் Be very very responsible and dont believe everything and everyone.
நன்றி.

கருத்துகள் இல்லை: