வியாழன், 15 செப்டம்பர், 2016

திருநாவுக்கரசர் கடந்து வந்த பாதை இதுதாங்க....

மின்னம்பலம்.com :நான்கு மாத இழுபறிக்குப் பின்னர், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் திருநாவுக்கரசர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வென்றது. இதையடுத்து, தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் டெல்லி தலைமை புதிய தலைவரை நியமிக்கவில்லை. கடந்த நான்கு மாதங்களாக யார் அடுத்த தலைவர்? என்று நிலவிவந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, இப்போது தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் திருநாவுக்கரசர்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்த்தன திரிவேதி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சு.திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அனைவரையும் அரவணைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்திய நிலையில், ஏராளமான கோஷ்டிகளைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை எப்படி அரசியல்தளத்தில் எடுத்துச் செல்லப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருநாவுக்கரசர் அரசியல் வரலாறு!
கல்லூரிப் பருவத்திலேயே அரசியல் ஈடுபாடுகொண்ட திருநாவுக்கரசர் பாளையங்கோட்டையில் கல்லூரி முடித்து, சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். முடித்தார். அஞ்சல்வழிக் கல்வி மூலம் எம்.எல். உள்ளிட்ட சட்டக்கல்வியை முடித்தார். கல்லூரிப் படிப்பை முடித்தபோது எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த ஆர்.எம். வீரப்பனோடு கிடைத்த அறிமுகம் திருநாவுக்கரசரை எம்.ஜி.ஆரிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அப்போது எஸ்.டி.சோமசுந்தரத்துக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இடையில் நிகழ்ந்த அரசியல் முரண்பாடுகளுக்காக அறந்தாங்கி, புதுக்கோட்டைப் பகுதிகளில் தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நம்பிக்கைக்குரிய இளைஞர் ஒருவரை வளர்த்தெடுக்க விரும்பிய ஆ.எம்.வீ. அடையாளம் கண்டது திருநாவுக்கரசரை.

(ஜெயலலிதாவுடன் திருநாவுக்கரசர்)
1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருநாவுக்கரசரை அறந்தாங்கி தொகுதி வேட்பாளராக்கினார் எம்.ஜி.ஆர். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களும் தோல்வியடைய, வென்றது திருநாவுக்கரசர் மட்டுமே. இந்த வெற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைக்க வென்ற திருநாவுக்கரசரை துணை சபாநாயகர் ஆக்கினார் எம் ஜிஆர். 1980இல் நாஞ்சிலார் அதிமுக-வில் இருந்து மீண்டும் திமுக-வுக்குச் சென்றபோது திருநாவுக்கரசருக்கு தூண்டில் போட்டார்.ஆனால் பிடிவாதமாக எம்.ஜி.ஆரை விட்டு வரமாட்டேன் என மறுத்துவிட்டார். அன்றுமுதல் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரானார். மீண்டும் 1980 தேர்தலில், தன் கட்சிக்குள் இருந்த எதிர்ப்பையும்மீறி திருநாவுக்கரசரை அறந்தாங்கியில் நிறுத்தினார். அதை எதிர்த்தவர்களிடம் எம்.ஜி.ஆர். சொன்னது, ‘வென்றாலும் தோற்றாலும் அவனை அமைச்சராக்குவேன்’ என்று. அந்தத் தேர்தலில் வென்ற திருநாவுக்கரசரை பெருந்தொழில்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். 1983ஆம் ஆண்டு அதிமுக-வில் இளைஞரணி உருவாக்கப்பட்டபோது அதன் முதல் செயலாளர் திருநாவுக்கரசர்தான். கட்சியையும் ஆட்சி நிர்வாகத்தையும் அத்தனை நம்பிக்கையோடு பகிர்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். பிறகு 1984இல் கலால் துறை, வணிகவரித் துறை, வீட்டு வசதிவாரியத் துறை அமைச்சராக்கினார். திருநாவுக்கரசர் வீட்டுவசதிவாரியத் துறை அமைச்சராக இருந்தபோது, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை அரவணைத்துக் கொண்டார். அனைவருக்கும் செய்ய முடிந்ததைச் செய்தார். கட்சியினரிடம் உருவான செல்வாக்கும் எம்.ஜி.ஆரிடம் உருவாக்கிக்கொண்ட நம்பிக்கையும் திருநாவுக்கரசரை அதிமுக-வின் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவராக உயர்த்தியது. எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த அன்பு எந்தளவுக்கு உயர்வானது என்றால், தன் முதல் குழந்தை பிறந்தபோது அந்தக் குழந்தைக்கு பெயரிட எம்.ஜி.ஆரிடம் சென்றபோது, அவர்தான் முதல் மகனுக்கு அன்பரசன் எனப் பெயர் வைத்தார். இரண்டாவது மகன் பிறந்தபோது தலைவரிடம் போனால், அவர் வேறு ஏதாவது பெயர் வைத்துவிடுவார் என அஞ்சி, அவருடைய பெயரையே இரண்டாவது மகனுக்கு ராமச்சந்திரன் என்று வைத்தார்.
பின்னர்தான், தமிழக அரசியலை புரட்டிப்போட்ட அந்த மரணம் நடந்தது. 1987இல் எம்.ஜி.ஆர். மறைந்தபோது அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இரண்டாகப் பிரிந்தது. அப்போது திருநாவுக்கரசர்தான் 26 எம்.எல்.ஏ-க்களோடு ஜெயலிதாவின் பக்கம் நின்றார். அவரும் இவர்மீது நம்பிக்கையாகவே இருந்தார். ஆனால் சசிகலா குழுவினரின் மன்னார்குடி அரசியல் எழுச்சிபெற்று திருநாவுக்கரசருக்கு எதிராக உள்ளடி வேலைகள் செய்ததில் மனம் கசந்தார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பழக்கம் கொண்டவருக்கு அந்த அரசியல் சேர்க்கை ஒத்துவரவில்லை.

(கலைஞருடன் திருநாவுக்கரசர்)
வெளியில் வந்தவர், புரட்சித்தலைவர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி குடை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது, ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட 1991ஆம் ஆண்டுக்குப் பிந்தைய தேர்தல் அதிமுக-வைத் தவிர அத்தனை எதிர்க்கட்சிகளும் தோற்றபோது திருநாவுக்கரசரும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும் மட்டுமே தனித்துப் போட்டியிட்டு திருநாவுக்கரசர் அறந்தாங்கியிலும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் அருப்புக்கோட்டையிலும் வென்றார்கள். பிறகு, 1996இல் திருநாவுக்கரசர் அதிமுக-வில் இணைந்தார். அந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. வெற்றிபெற்ற நான்கு எம்.எல்.ஏ-க்களில் இவரும் ஒருவர். மீண்டும் அதே நெருக்கடிகள் உருவாக போட்டி அதிமுக-வை நடத்தினார். கண்ணப்பன், ராஜன் செல்லப்பா போன்றோர் எல்லாம் அதில் இருந்தார்கள். காசி.முத்துமாணிக்கம் அந்த போட்டி அதிமுக-வின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்தார். அதிமுக,திமுக இரண்டின் ஆதரவும் இன்றி 1999ஆம் ஆண்டு சுயேட்சையாக நாடாளுமன்றத் தேர்தலில் மாம்பழச் சின்னத்தில் நின்று, இரண்டு லட்சத்து முப்பதாயிரம் வாக்குகளுக்குமேல் பெற்றபோதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 2001- சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோல்வியடைந்தார் திருநாவுக்கரசர்.
பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் சென்ற அரசியல் பயணத்தில் 2002ஆம் ஆண்டு தேசிய கட்சியான பாஜக-வில் இணைந்தார். அவரை தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ஆக்கினார்கள். அடுத்து 2004இல் அதிமுக-வோடு கூட்டணி வைத்தது பாஜக . ஆனால் ஜெயலலிதாவின் நிர்பந்தத்தினால் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்படவில்லை . அதில் மனவருத்தம் இருந்தாலும் கட்சிக்காக உழைத்தார். புதுச்சேரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அத்வானியோடு ஒரே மேடையில் பேசிவிட்டு, அத்வானி கிளம்பும்போது திருநாவுக்கரசரை, என் மகன் என்று அழைத்து, அடுத்தமுறை நீங்கள் பாராளுமன்றத்தில் இருப்பீர்கள் என சொல்லிவிட்டுச் சென்றார். சொன்னதுபோல மத்தியப்பிரதேச மாநில எம்.எல்.ஏ-க்களால் ராஜ்யசபா எம்.பி.யாக்கினார்கள். அகில இந்தியச் செயலாளர் பதவியும் கட்சியில் கொடுத்தார்கள்.

(சட்டமன்ற சர்ச்சைக்குப் பின் ஜெயலலிதாவைச் சந்தித்த போது)
2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற பாஜக வேட்பாளராக திருநாவுக்கரசர், ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரம் ஓட்டுகள் வாங்கினார். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் வாங்கியவர் திருநாவுக்கரசர்தான். 2006 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டு, அந்த பதவிக் காலம் முடியும் முன்பே, 2009 தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், பாஜக-விலிருந்து விலகி 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
திருச்சியில் நடந்த இணைப்பு விழாவுக்கு சோனியாகாந்தி தலைமையேற்க, கட்சியில் திருநாவுக்கரசருக்கு கிடைக்கப்போகும் முக்கியத்துவத்தை அது உணர்த்தியது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிட்ட இவருக்காக பிரச்சாரம் செய்ய ராகுல் வந்தார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார். நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது மகன் ராமச்சந்திரனை அறந்தாங்கி தொகுதியில் களமிறக்க, மகனும் தோல்வியைத் தழுவினார் என்றாலும் ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார். சாதி, ஏரியா, தலைவர்கள் என நாலாபக்கமும் பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர்களையும் ஒன்றுசேர்த்து தேரிழுக்கும் வேலையை செய்வார் திருநாவுக்கரசர் என நம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கக் கூடியவர்களோ பல கட்சிகளுக்கும் சென்று வந்தவருக்கு தலைவர் பதவியா என்று குமுறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: