சனி, 31 அக்டோபர், 2015

India Nepal நேபால் சீனாவுடன் நெருக்கம்..இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏன்? தினமணி

இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு ஏற்படும் மிகப்பெரிய பின்னடைவு! ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா நெருக்கம் வளர்க்கும் அதேவேளையில் நேபாளம் நம்மை விட்டு விலகிச் செல்கிறதோ என்று தோற்றமளிப்பதுபோல, சீனாவிடம் பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதற்கு நேபாள அரசு சில நாள்களுக்கு முன்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 பெட்ரோலியப் பொருள்களின் அளவு எவ்வளவு, என்ன விலை கொடுத்து வாங்க இருக்கிறார்கள் என்ற விவரங்களை நேபாள அரசு வெளியிடவில்லை. ஆனால் முதல் கட்டமாக, 1,000 டன் பெட்ரோலியப் பொருள்களை சீனா உடனடியாக வழங்கவுள்ளது. இதன் மூலம், பல பதின் ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருள்களை நேபாளத்துக்கு வழங்கி வந்த வணிகத் தனித்தன்மையை இந்தியா இழக்கத் தொடங்கியுள்ளது. தற்போது நேபாளத்துடன் சீனா நெருங்கி வரத் தொடங்கியிருப்பதன் அறிகுறிதான் இந்த ஒப்பந்தம்.

 இந்திய எண்ணெய் நிறுவனமாகிய ஐ.ஓ.சி. மூலமாக ஆண்டுக்கு 137 கோடி லிட்டர் பெட்ரோலியப் பொருள்களை 100 கோடி அமெரிக்க டாலருக்கு நேபாளத்துக்கு இந்தியா விற்பனை செய்து வந்தது. நீர்மை எரிவாயு உருளைகளை விநியோகம் செய்வதில் உள்ள பொருள் விரயத்தைத் தவிர்க்க, நேபாள - இந்திய எல்லையில் 41 கி.மீ. தொலைவுக்கு எரிவாயு கொண்டு செல்ல குழாய் அமைக்கும் திட்டமும் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி நேபாளம் சென்றிருந்தபோது கையெழுத்தானது. இந்நிலையில், சீனாவுடனான நேபாளத்தின் ஒப்பந்தம் வணிக ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, சீனாவின் நெருக்கம் நமக்குத் தேவையற்ற சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
 நேபாளம் அண்மையில் நிறைவேற்றிய அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குள்ள மக்கள் குறிப்பாக மாதேஸிகள் நடத்திய ஆர்ப்பாட்டம், மறியல் காரணமாக இந்தியாவால் பெட்ரோலியப் பொருள்கள் அனுப்ப இயலவில்லை. அதனால், நேபாளம் பெட்ரோலியப் பொருள்கள் பற்றாக்குறையில் ஸ்தம்பிக்க நேர்ந்தது.
 நேபாளத்தில் நடைபெற்ற கலவரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், சாலைகளில் நேர்ந்த தடைகளை நீக்கும் பொறுப்பும் அந்த நாட்டு அரசுக்குத்தான் உள்ளது. இந்தியா இதில் செய்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, பெட்ரோலியப் பொருள்கள் வழங்கக் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல. வழங்க இயலாத சூழல் நிலவியது. நேபாளத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்திருந்தது என்பதே உண்மையான காரணம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தியா இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், நேபாளத்தின் இன்றியமையாத் தேவைக்கான பெட்ரோலியப் பொருள்களை விமானத்தின் மூலம் அனுப்பி, தேவையைச் சமாளிக்க உதவி செய்திருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம்.
 இந்தியாவின் அறிவிக்கப்படாத பெட்ரோலியத் தடை என நேபாள ஊடகங்கள் விமர்சித்தன. நேபாளப் பிரதமராக கே.பி. சர்மா ஒலி பொறுப்பேற்றவுடன், சீனாவிடம் பெட்ரோலிய விவகாரம் குறித்துப் பேச அதிகாரிகளை அனுப்பியபோதே, இந்தியா நிலைமையைப் புரிந்துகொண்டு, பெட்ரோலியப் பொருள் பற்றாக்குறையைத் தீர்ப்பதில் முனைப்புக் காட்டியிருக்க வேண்டும்.
 காத்மாண்டுவில் நேரிட்ட நிலநடுக்கம் காரணமாக சிதைவுற்ற நகரங்களைச் சீரமைக்கும் பணிகள் முடியாத நிலையில் இத்தகைய பெட்ரோலியப் பொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால்தான், நேபாளம் சீனாவிடம் செல்ல நேர்ந்துள்ளது.
 ஆனால், சீனாவிலிருந்து பெட்ரோலியப் பொருள்களை நேபாளத்துக்கு கொண்டு வருவது மிகமிகக் கடினமானது. உலகின் மிக உயர்ந்த மலைப் பாதைகள் வழியாகத்தான் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். இது அத்தனை எளிதான செயல் அல்ல.
 சீனாவிடம் ஒப்பந்தம் போட்டாலும், தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே சீனாவிடமிருந்து பெறக்கூடும். இந்தியாவிலிருந்து பொருள்கள் நேபாளத்துக்குச் செல்வதுதான் எளிதான முறையாக இருக்கும். தற்போது, நேபாளத்துக்கு வழக்கமாக அனுப்பப்படும் பெட்ரோலியப் பொருள்களில் 40% அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறு அதிகரிக்க வேண்டும். நாம் பழையதுபோல நேபாளத்துக்கு முழுமையாகப் பெட்ரோலியப் பொருள்களை வழங்கும் நிலைமையை இந்தியா உருவாக்க வேண்டும்.
 நேபாளத்தில் பல புனல்மின் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி செய்துள்ளது. அந்நாட்டிடமிருந்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்கள் உள்ளன. தற்போது பெட்ரோலியப் பொருள்களில் சீனா பங்குகொள்ள வந்திருக்கும் சூழலில், இதுபோன்று நேபாள மேம்பாட்டுத் திட்ட முதலீடுகளிலும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டால், நேபாளத்தில் சீனாவுடன் போட்டி போட வேண்டிய நிலை இந்தியாவுக்கு உருவாகும்.
 இலங்கையின் பெட்ரோலியப் பொருள் சுத்திகரிப்பில் இந்தியா கணிசமான பங்கு வகிக்கிறது. தற்போது நேபாளத்தில் நேர்ந்துள்ளதைப் போன்று இலங்கையிலும் சீனா தனது வணிக உத்திகளைக் கையாளும் எனில், நம்மைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளிடையே நமக்கு நட்பும், வணிகப் பரிமாற்றமும் மளமளவெனச் சரியும்.
 இந்தியா இனியும் தாமதிக்காமல் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டால், சீனாவை இமயத்துக்கு அப்பாலேயே இருக்கச் செய்யலாம்.
 நேபாளமும், பூடானும் இந்தியாவின் பிரிக்க முடியாத நண்பர்கள். அவர்கள் விலகிச் செல்வது, இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு ஏற்படும் மிகப்பெரிய பின்னடைவு! dinamani.com

கருத்துகள் இல்லை: